செவ்வாய், 3 செப்டம்பர், 2013

TASMAC: ஷாப்பிங் மால்களில் மதுபான கடைகள் திறக்கபடும் !

 சுற்றுலா பயணிகளை கவரும்
வகையில், முக்கிய இடங்களில் உள்ள,
ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறக்க,"டாஸ்மாக்' நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி என, ஐந்து மண்டலங்களில், மொத்தம், 6,838 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலம், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகின்றன.உள்நாட்டில் மதுபான ஆலை கொண்டுள்ள நிறுவனங்கள், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகளில் இருந்து, சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, அவற்றை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்கின்றன. இந்த மது வகைகளுக்கு என, தனி வாடிக்கையாளர்கள் உள்ளதால், மற்ற மது வகைகளை காட்டிலும், இவற்றின் விலை சற்று, கூடுதலாக இருந்தாலும், அதிக அளவில் விற்பனையாகி வருகிறது.தமிழகத்தில், பன்னாட்டு, ஐ.டி., நிறுவனங்களின் வருகையால், சுற்றுலா பயணிகள் வருகை, கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காக, சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில், "ஷாப்பிங் மால்' அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டு வருகின்றன.இதையடுத்து, சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், ஷாப்பிங் மால்களில், பார் வசதி இல்லாமல், மதுபான கடைகளை மட்டும் திறக்க, டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


நவீன வசதிகளுடன் கடைகள்:

இது குறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:முதல் கட்டமாக, சென்னையில் உள்ள, "எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ், சிட்டி சென்டர்' ஆகிய ஷாப்பிங் மால்களில், மதுபான கடைகள் திறப்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த கடைகள், பார் வசதி இல்லாமல், நவீன வசதிகளை உள்ளடக்கியதாக திகழும்.இங்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது வகை மற்றும் பிரீமியம் ரகம் உள்ளிட்ட சிறப்பு மது வகைகள் விற்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: