திங்கள், 2 செப்டம்பர், 2013

பாகிஸ்தானில் இருந்து வந்த உத்தரவை அடுத்து குண்டுகள் வைத்தோம் ! யாசின் பட்கள் தெரிவிப்பு

டெல்லி: பாகிஸ்தானில் இருந்து உத்தரவு வந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பை நடத்தியதாக இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் விசாரணையில் தெரிவித்துள்ளான். பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கல் கடந்த 28ம் தேதி இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டான். அவனை தேசிய புலனாய்வு துறையினர் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் யாசின் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்ததாவது, சைபராபாத் அருகே உள்ள தில்சுக்நகரில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்த ஒருவரிடம் யாசின் வெடி பொருட்களை அளித்துள்ளான். சைபராபாத்தை தாக்கினால் அங்கு வியாபாரம் செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வராது என்பதால் அங்கு தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தானில் இருந்து உத்தரவு வந்ததன்பேரில் யாசின் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்தினான் என்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தில்சுக் நகரில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 17 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 100 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி புனேவில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்ததில் 4 வெளிநாட்டவர்கள் உள்பட 17 பேர் பலியாகினர். இது குறித்து யாசின் விசாரணையாளர்களிடம் கூறுகையில், மக்கள் அதிகம் வரும் கடையாக பார்த்து குண்டு வைத்ததாகவும், பெரும் சேதம் ஏற்பட வேண்டும் என்பதற்காக கேஸ் சிலிண்டர் அருகே குண்டு வைத்ததாகவும் தெரிவித்துள்ளான். மேலும் தனது உறவினர்களான இக்பால் மற்றும் ரியாஸ் பட்கல் குறித்து தகவல் அளித்த யாசின் அவர்கள் இந்தியா வரவில்லை என்றான். இக்பால் இந்த ஆண்டின் துவக்கத்தில் நேபாள் சென்றதாகவும், செயற்கைக்கோள் போன் மூலம் பாகிஸ்தானில் உள்ள தனது தலைவர்களிடம் பேசியதாகவும் யாசின் தெரிவித்தான்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: