செவ்வாய், 2 ஜூலை, 2013

சுமங்கலித் திட்டம் பெண்களுக்கு உண்மையில் நன்மை அளிக்கிறதா ? இல்லை

சுமங்களித் திட்டத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக் காமல் முதலாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என குற்றம் சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.சின்னத்துரை. அவினாசி சமூகக் கல்வி மற்றும் முன்னேற்ற மையமும், புதுக்கோட்டை குடிமை சமூக அமைப்புகளும் இணைந்து சுமங்கலி திட்டப் பிரச்சினைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டத்தை புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமையன்று நடத்தியது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் பேசியபோது, ’’பொதுவாக பெண்களின் வளர்ச்சிக்கு ஆணாதிக்கமும், மூடநம்பிக்கையும் பெரும் தடையாக இருக்கிறது. ஏழை, எளிய உழைக்கும் பெண்களை வறுமையும், அறியாமையும் சேர்த்து வாட்டுகிறது. இதைப் பயன்படுத்தி திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் சுமங்களித் திட்டம் என்கிற பெயரில் ஏராளமான இளம் பெண்கள் பலவழிகளில் சுரண்டப்படுகின்றனர்.


‘சுமங்கலித் திட்டம்’ என்ற கவர்ச்சிகரமான வார்த்தை அரசுத்திட்டம் என ஏழை, எளிய மக்களை நம்பச் செய் கிறது. இத்திட்டத்தை தடுப்பதற்கு ஆட்சியாளர்கள் போதிய அக்கறை காட்டாததால், அரசு முதலாளி களுக்குச் சாதகமாக நடந்து கொள்கிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சுமங்கலித் திட்டத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலுள்ள இளம் பெண்கள்தான் அதிகமாகப் பாதிக்கப்படுகிற்னர். திருமணம், வரதட்சினை போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட ‘சுமங்கலித் திட்டம்’ என்ற வாசகம் பெற்றோருக்கு ஒருவிதமான ஆசுவாசத்தை அளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை, வாய்ப்பைப் உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் இல்லாததும், போதிய நீராதாம் இன்றி விவசாயம் பொய்த்துப் போவதும்தான் இம்மாவட்டத்திலுள்ள இளம்பெண்கள் இத்திட்டத்தில் சேர்வதற் கான முக்கிய காரணியாக இருக்கிறது’’ எனப் பேசினார்.
கலந்தாய்வின் நோக்கம் குறித்து சமூக கல்வி முன்னேற்ற மையத்தின் இயக்குனர் நம்பி பேசினார். ‘நூற்பாலைகள்-வரலாற்று ரீதியான பார்வை’ மற்றும் ‘சுமங்களித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தலையீடுகள்’ என்ற தலைப்பில் சிஎஸ்ஆர் இயக்குனர் நாராயணசாமி, சுமங்கலித் திட்டத்தில் தொழிலா ளர்களின் பிரச்சினைகள் குறித்து திட்ட மேலாளர் பாஸ்கரன் ஆகியோர் பேசினனர்.

சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஜியாவுதீன், காவல்துறை துணை ஆணையர் (ஓய்வு) பாலகிருஷ்ணன்,  ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி.ஜெயபாலன், அமுதா ஜெயராமன், தனபதி, அப்பாவு பாலாண்டார் அகியோர் கருத்துரை வழங்கினர்.
 

கருத்துகள் இல்லை: