புதன், 3 ஜூலை, 2013

பாமக திமுகவுடன் முறுகல் தொடர்கிறது ! அதிமுக கூட்டணியில் இடம்பெற முஸ்தீபு

பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க. கடைபிடித்த நிலைப்பாடு தொடர்பாக எழுந்துள்ள விமர்சனம் குறித்து விளக்கமளித்துள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள், தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுத்திருக்கிறார். காங்கிரசிடம் ஆதரவு கேட்ட தி.மு.க. ஈழப் பிரச்சினையை மறந்து விட்டதா? என்ற எனது கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத அவர், கடந்த 2004-ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வால் தான் நான் மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்டதாக கூறியிருக்கிறார். கடந்த 10 நாட்களில் 2-ஆவது முறையாக இதே கருத்தை தி.மு.க. கூறியிருப்பதால் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டியது எனது கடமை என்று கருதுகிறேன்.
2004-ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பாட்டாளி மக்கள் கட்சிக்கு தி.மு.க.வால் இலவசமாக வழங்கப்படவில்லை. கடந்த 1999-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தமிழகம் மற்றும் புதுவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன் பின்னர் 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகள் புதிதாக சேர்ந்ததால் அக்கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்குவதற்கு வசதியாக தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகளுக்கு 1999-ஆம் ஆண்டு தேர்தலில் ஒதுக்கப்பட்டதைவிட ஓர் இடம் குறைவாக ஒதுக்குவதென தீர்மாணிக்கப்பட்டது. அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போதிய இடங்கள் இல்லை என்பதால் 6 இடங்களை மட்டுமே ஒதுக்கிய கலைஞர், மீதமுள்ள ஓரிடத்தை மாநிலங்களவைத் தேர்தலில் ஒதுக்குவதாக அறிவித்து ராமதாஸ் அவர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதன்படிதான் 28.6.2004 அன்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பா.ம.க. வேட்பாளரான எனக்கு திமு.க. ஆதரவு அளித்தது. அதுமட்டுமின்றி, 2004-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 6 மக்களவை உறுப்பினர்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் இருந்தனர். அந்தவலிமையின் அடிப்படையில் தான் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எனக்கும், அரங்க.வேலு அவர்களுக்கும் மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. இதுதான் உண்மையே தவிர மத்திய அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் தி.மு.க. இலவசமாக வழங்கிவிடவில்லை.
அதேநேரத்தில், தி.மு.க.வுக்காக பாட்டாளி மக்கள் கட்சி செய்த தியாகங்கள் எண்ணிலடங்காதவை. 2006-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வெறும் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை (118 இடங்கள்) தி.மு.க.வுக்கு கிடைக்காத நிலையில், தி.மு.க. ஆட்சியமைப்பதற்காக தமது 18 சட்டப்பேரவை உறுப்பினர்களின் நிபந்தனையற்ற ஆதரவை முதன்முதலில் அறிவித்ததுடன் ஆதரவுக் கடிதத்தை ஆளுனரிடம் வழங்கியதும் பாட்டாளி மக்கள் கட்சிதான். அதன் அடிப்படையில் தான் தி.மு.க.வை ஆட்சி அமைக்க வரும்படி அப்போதைய ஆளுனர் பர்னாலா அழைத்தார் என்பதை கலைஞர் அவர்கள் மறந்திருக்க மாட்டார். 2006-ஆம் ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் ஆதரவு அளித்திருக்கவில்லை என்றால், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தி.மு.க. தள்ளப்பட்டிருக்கும். 2008-ஆம் ஆண்டில் தி.மு.க. கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியை நீக்கப்பட்ட போதிலும்கூட கலைஞர் அரசுக்கு பா.ம.க. தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. இவ்வாறாக பாட்டாளி மக்கள் கட்சியின் தயவாலும், ஆதரவாலும்  தான், போதிய பெரும்பான்மை இல்லாத நிலையிலும்,  5 ஆண்டுகளுக்கு கலைஞர் முதலமைச்சராகவும், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலும் நீடிக்க முடிந்தது.
அதுமட்டுமின்றி, 2007, 2008 மற்றும் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தல்களில்  தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 7 வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்தது பாட்டாளி மக்கள் கட்சியின் 18 வாக்குகள் தான். 2004-ஆம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் எனக்கு ஆதரவளித்தாக கூறுவதற்கு முன்பு இவற்றையெல்லாம் கலைஞர் அவர்கள் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். பதவிக்காக கொள்கையை அடகு வைக்கும் தவறை பாட்டாளி மக்கள் கட்சி ஒரு போதும் செய்ததில்லை.
2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றிருந்தது. அப்போது 7 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்குவதாக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி, 2009-ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகும் அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்திருந்தால், மாநிலங்களவை  உறுப்பினர் பதவியை பெற்றிருந்திருக்கலாம். ஆனால், அ.தி.மு.க.வுடன் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் ஏற்பட்ட போது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விட கொள்கை தான் பெரிது என்று முடிவெடுத்து வெளியேறியது தான் பாட்டாளி மக்கள் கட்சி.
2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்கப்பட்டது. இதுதொடர்பான ஒப்பந்தப்படி, இப்போது நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால், இந்தப் பதவியைப் பற்றி கவலைப்படாமல் கொள்கையும், மக்கள் நலனும் தான் முக்கியம் என்று கருதி தி.மு.க. கூட்டணியிலிருந்து  நாங்கள் வெளியேறினோம்.

எனவே, மாநிலங்களவைத் தேர்தல் குறித்து ஆய்வு நடத்தும் கலைஞர் அவர்கள், எல்லாக் கட்சிகளுக்கும் தி.மு.க. தான் அள்ளிக் கொடுத்தது போன்றும், மற்ற கட்சிகளால் தி.மு.க. எந்த வகையிலும் பயனடைய வில்லை என்பது போன்றும் தோற்றத்தை உருவாக்க முயல வேண்டாம். பதவிகளை விட கொள்கைகள் முக்கியம் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: