வியாழன், 4 ஜூலை, 2013

பண்ணை வீட்டில் 18 வயது செல்வநாயகி படுகொலை பலாத்கார முயற்சி? 10 நாய்களை மீறி வெளியார் வந்துவிட முடியுமா ?

திருப்போரூர்:கேளம்பாக்கம் அருகே பண்ணை வீட்டில் இளம்பெண் கழுத்தை
இறுக்கி கொலை செய்யப்பட்டார். பலாத்கார முயற்சியில் கொலை நடந்ததா என தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தி.நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர் பெரிய ஓட்டல்கள், தொழில் நிறுவனங்களில் கார்டன் அமைத்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதற்காக கேளம்பாக்கம் அருகே வெளிச்சை கிராமத்தில் 40 ஏக்கரில் பண்ணை வைத்து, பலவிதமான பூச்செடிகளை வளர்த்து வருகிறார். இவரது மனைவி சுகுணா (46).
புதுக்கோட்டை அருகே போச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமையா மகள் செல்வநாயகி (18), பண்ணை வீட்டில் கடந்த ஓராண்டாக தங்கி வேலை செய்து வந்தார். வெளிச்சை மற்றும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் தினமும் பண்ணை வேலைக்கு வந்து செல்வர். வீட்டில் 10 க்கும் அதிகமான நாய்களை பன்னீர்செல்வம் வளர்த்து வருகிறார்.
கொள்ளையர்களோ வெளி ஆட்களோ உள்ளே நுழையாமல் இருக்க, இரவு நேரத்தில் நாய்களை அவிழ்த்து விட்டு விடுவர்.

 இந்நிலையில், நேற்று மாலை பண்ணையில் வேலை முடிந்ததும் தொழிலாளர்கள் வீட்டுக்கு புறப்பட்டனர். பன்னீர்செல்வம், வேலை விஷயமாக சென்னை சென்றிருந்தார். சுகுணா, செல்வநாயகி இருவர் மட்டும் வீட்டில் இருந்தனர். இரவு 8 மணியளவில் செல்வநாயகி, நாய்களுக்கு வைப்பதற்காக பாத்திரத்தில் சாப்பாடு எடுத்துச் சென்றார். வெளியே சென்றவர், நீண்ட நேரமாகியும் வீட்டுக்குள் வரவில்லை. சந்தேகமடைந்த சுகுணா, டார்ச் லைட் உதவியுடன் வீட்டுக்கு வெளியே தேடினார்.

பண்ணை வீட்டின் பின் பகுதியில் செல்வநாயகி மயங்கி கிடப்பதை பார்த்ததும் சுகுணா அதிர்ச்சி அடைந்தார். அருகில் சென்று பார்த்தபோது செல்வநாயகி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து கணவருக்கும், கிராமத்தில் தனக்கு தெரிந்த நபர்களுக்கும் சுகுணா தகவல் தெரிவித்தார். கிராம மக்கள் பண்ணை வீட்டு முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் கேளம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து செல்வநாயகி சடலத்தை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை யாரோ கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளது தெரியவந்தது. காஞ்சிபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் பிரவுனி, சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பண்ணை வீட்டில் நாய்கள் உள்ளதால் வெளி ஆட்கள் யாரும் உள்ளே வந்திருக்க முடியாது. அப்படி  வந்திருந்தால் நாய்கள் குரைத்திருக்கும். எனவே, தெரிந்த நபர்தான் வந்திருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். கொள்ளை முயற்சியில் செல்வநாயகி கொலை செய்யப்பட்டாரா அல்லது பலாத்கார முயற்சியில் கொலை நடந்ததா என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது.

மகள் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் செல்வநாயகியின் தந்தை ராமையா புதுக்கோட்டையில் இருந்து வந்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரிடம் உடல் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பண்ணை வீட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முடங்கிப்போன ரோந்து பணி

கேளம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் அப்பாதுரை, கடந்த ஜனவரியில் பல்வேறு புகார் காரணமாக காஞ்சிபுரம் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு இங்கு இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை. திருப்போரூர், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர்கள்தான் கூடுதலாக இந்த பணியை கவனிக்க வேண்டியுள்ளது. இன்ஸ்பெக்டர் இல்லாததால் கேளம்பாக்கம் மற்றும் தாழம்பூர் காவல் நிலையத்தில் போலீசாருக்கு பணி ஒதுக்குவதில் குளறுபடி ஏற்படுகிறது. கடந்த 6 மாதமாக இப்பகுதியில் கொலை, ஏடிஎம் மெஷின் உடைப்பு, வீடுகளில் கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. போலீஸ் ரோந்துப் பணியும் முடங்கிப் போய் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.tamilmurasu.org

கருத்துகள் இல்லை: