சனி, 6 ஜூலை, 2013

தெருவில் குழந்தையை விற்ற தாய் கைது ! வறுமையின் கொடுமை

சென்னை: கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகில் உள்ள பாரதி நகர் பகுதியில் நேற்று காலை ஒரு பெண் கையில் பச்சிளங் குழந்தையுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அப்பகுதி மக்கள் அவரிடம் விசாரித்தபோது, நான் திருச்சியை சேர்ந்தவர். இது என்னுடைய குழந்தை. வறுமையின் காரணமாக  குழந்தையை வளர்க்க முடியா மல் தவிக்கிறேன். சென்னை யில் இந்த குழந்தையை விற்பதற்காக வந்துள்ளேன் என்றார். இதை கேட்டு சந்தேகமடைந்த பொதுமக்கள் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து இன்ஸ்பெக்டர் சரவணன், மகளிர் எஸ்ஐ வெங்கடம்மா ஆகியோர் காவல்நிலையம் கொண்டு சென்றனர். மகளிர் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர்.
அதில், எனது பெயர் மரகதம் (42). எனது கணவர் சின்னதம்பி. நாங்கள் விவசாயம் செய்து வந்தோம். எங்களுக்கு ஒரு மகன். மகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. எங்களுக்கு விவசாயம் சரியாக இல்லாத தால் மிகவும் கஷ்டப்பட்டோம். இந்நிலையில் கணவருக்கு திடீரென பைத்தியம் பிடித்து எங்கேயோ போய்விட்டார். நான் மகனை வைத்து கஷ்டப்பட்டு வாழ்ந்தேன். அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்தேன் . அதிலும் எனக்கு சரியான வருமானம் இல்லை. கடந்த 3 மாதத்திற்கு முன்பு எனக்கு இந்த ஆண் குழந்தை பிறந்தது. நான் இருக்கும் வறுமையில்  குழந்தையை என்னால் காப்பாற்ற முடியவில்லை. இதனால், நான் கடந்த வாரம் திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தேன். நேற்று கிண்டியில் யாரிடமாவது இந்த குழந்தையை விற்று விடலாம் என வந்தேன். ஆனால், அவர்கள் நான் குழந்தையை திருடி வந்ததாக நினைத்து என்னை போலீசில் பிடித்து கொடுத்தனர் என்றார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, இந்த பெண்ணின் கணவர் பைத்தியம் பிடித்து சென்றுவிட்டதாக கூறுகிறார். ஆனால்,  குழந்தை பிறந்துள்ளது. அது கள்ள காதலில் பிறந்து இருக்குமோ என சந்தேகம் உள்ளது. அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளோம். அவர்கள் வந்தபின், இந்த பெண் கூறுவது உண்மையாக இருந்தால், அவரை அனுப்புவோம். மேலும், சமீப காலமாக குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதனால், மருத்துவமனைகளில் ஏதாவது குழந்தை கடத்தப்பட்டுள்ளதா எனவும் விசாரித்து வருகிறோம். அதுவரை அந்த பெண்ணும், குழந்தையும் எங்கள் கண்காணிப்பில் இருப்பார்கள் என்றனர். இதையடுத்து, போலீசார் மரகதத்தையும், குழந்தையையும் மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கருத்துகள் இல்லை: