புதன், 3 ஜூலை, 2013

பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !

திவ்யா, தேன்மொழிருமபுரி நாய்க்கன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யா-இளவரசன் தம்பதியினர் பற்றிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலை 1-ம் தேதி நடந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திவ்யாவும் அவரது தாயார் தேன்மொழியும்
திவ்யாவின் தாய் தேன்மொழி தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவின் மீது ஜூன் 6-ம் தேதி நடந்த விசாரணை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது. அன்றைக்கு நீதிபதிகள் வழக்கை தமது அறையில் விசாரிக்க விரும்புவதாக சொன்னார்கள். அதன்படி, இருதரப்பு வழக்கறிஞர்களை வெளியில் இருக்கச் சொல்லி விட்டு எம் ஜெய்சந்திரன், எம் எம் சுந்தரேஷ் என்ற இரு நீதிபதிகளும் நீதிபதியின் அறையில் திவ்யாவின் கருத்தை கேட்டார்கள்.
திவ்யா சொன்ன கருத்துக்கள் பற்றிய விபரங்கள் பின்னர் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டன.
தான் இன்னமும் இளவரசனை காதலிப்பதாகவும், தனது தாய் தன் காதலை ஏற்றுக் கொள்வது வரை தாயுடன் இருக்க விரும்புவதாகவும் திவ்யா நீதிபதிகளிடம் தெரிவித்திருக்கிறார். கடந்த நவம்பர் மாதம் இளவரசனுடனான திருமணத்துக்குப் பிறகு தந்தை நாகராஜனின் தற்கொலை, அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்கள் தன்னை பெரிதும் பாதித்ததாகவும், அதே போல தனது தாயையும், தம்பியையும் இழந்து விடுவோமோ என்று பயப்படுவதாகவும் சொல்லியிருக்கிறார்.

இளவரசன் தன்னிடம் அன்பாக இருந்ததாகவும், அவரது பெற்றோர் தன்னை நல்ல முறையில் நடத்தியதாகவும் அவர் கூறியிருக்கிறார். இருந்தாலும், இளவரசனை பார்க்கும் போதெல்லாம், தனது தந்தையின் மரணம் நினைவுக்கு வந்ததாக சொல்லியிருக்கிறார்.
நீதிமன்றத்துக்கு வந்திருந்த இளவரசன் திவ்யாவை சந்திக்கவோ, அவருடன் பேசவோ முடியவில்லை. “திவ்யா எப்போது திரும்பி வந்தாலும் அவருடன் வாழ்வேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
குடும்பத்திலும், சமூகத்திலும் இவ்வளவு களேபரங்களுக்கு பிறகும் தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர். அந்தக் கூட்டம் இப்போதும் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல வேஷம் போடுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி, திவ்யா-இளவரசன் விவகாரத்தில் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது இரண்டு தனி நபர்களுக்கு இடையேயான விவகாரம் என்றும் கூறியிருக்கிறார். இந்த வழக்கில் எந்த வகையிலும் தலையிட வேண்டாம் என்று தனது கட்சிக்காரர்களிடம் கூறியிருப்பதாகவும் நடிக்கிறார். தலித் இளைஞர்கள் வன்னிய சாதி பெண்களை காதலிப்பதை எதிர்த்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்த போது ராமதாசுக்கு இந்த ஞானம் உதிக்காமல் போனது ஏனோ!
திவ்யா-இளவரசன் விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே தலையிட்டு, நடந்த கொடூரங்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ காரணமாக இருப்பவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர்தான். திவ்யாவின் தந்தை நாகராஜனை தற்கொலைக்கு தூண்டிய வன்னியர் சாதி வெறி, தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகளை அடித்து உடைத்தது, திவ்யாவின் தாய் தேன்மொழியின் சார்பில் வழக்கு தாக்கல் செய்து அவரை இளவரசனிடமிருந்து பிரித்தது என்று அடுத்தடுத்த அராஜகங்களுக்கு மூல காரணம் அந்த கட்சியினர்தான்.
இந்த நீதிமன்ற வழக்கிலேயே இதை நிரூபிக்கும் ஆதாரங்கள் பல உள்ளன.
  • திவ்யாவின் தாயார் தேன்மொழியின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் க பாலு.
  • ஜூன் மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவரும் தருமபுரியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் செந்தில் என்பவர் திவ்யாவின் வீட்டுக்குப் போனதாக அந்தக் கட்சியைச் சேர்ந்த இணையப் புள்ளி அருள் தனது பதிவில் கட்டுரை வெளியிட்டார்.
    முற்போக்காளர்களும், அரசியல்வாதிகளும் சேர்ந்து திவ்யாவின் கல்விக்கு இடையூறு செய்து விட்டதாகவும், அந்த சிறுமியை படிக்க விடுங்கள் என்று கேட்டுக் கொள்வதாகவும் நீலிக் கண்ணீர் வடித்திருந்தது அந்தக் கட்டுரை.
    டாக்டர் செந்தில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி விட்டாரா, அல்லது அன்புமணியின் கட்டளை அவரை கட்டுப்படுத்தாதா என்று விசாரித்து அருள் ஒரு பதிவு வெளியிட வேண்டும்.
  • அருள் தனது வலைப்பதிவில், ஜூன் மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையின் போது தானும் உடனிருந்ததாகவும், திவ்யா தானாகவே தாலியை கழற்றி எறிந்து விட்டதாகவும், அவர் தனது காதலனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் அறிவித்திருந்தார்.
    இந்த வழக்கில் அருளின் தலையீடு அன்புமணி ராமதாஸின் முடிவுக்கு எதிரானதா இல்லையா என்று விளக்கியும் அருள் ஒரு பதிவு வெளியிடலாம்.
இந்த வழக்கில் தொடர்புடைய தனிநபர்களான திவ்யா, இளவரசன், இளவரசனின் பெற்றோர் அனைவரும் பொறுப்பான, கௌரவமான முறையில் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
திவ்யாவின் தாய், வன்னிய சாதி அரசியல் அழுத்தத்தால் மகளின் வாழ்க்கைக்கு எதிராக நிற்கிறார். பாமக போன்ற அமைப்புகளால் தூண்டி விடப்பட்ட சாதி வெறியால் திவ்யா போன்ற இளைஞர்கள் தமது விருப்பத்துக்கு ஏற்ற வாழ்க்கையை அமைப்பது தடை செய்யப்படுகிறது.
திவ்யா-இளவரசன் என்ற இரு இளைஞர்களின் வாழ்க்கையையும், பல நூறு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களையும் குலைத்து, சாதி வெறியைத் தூண்டுவது மருத்துவர் ராமதாசும் அவரது கட்சியினரும். உழைக்கும் வன்னிய மக்களை தவறாக வழி நடத்தி அரசியல் ஆதாயங்களை குவிக்கத் துடிக்கும் அந்த கும்பலை அரசியல் அரங்கிலிருந்து ஒழித்துக் கட்ட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

கருத்துகள் இல்லை: