புதன், 3 ஜூலை, 2013

காடுவெட்டி குரு உட்பட 20 பேர் மீதான தே.பா. சட்டம் மத்திய அரசால் ரத்து

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மற்றும் பாமகவினர் 20 பேர் மீதான தேசிய பாதுகாபுச் சட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், மரக்காணத்தில் அப்பாவி வன்னியர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட கலவரத்திற்கு நீதி கேட்டு போராடிய என்னையும், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரையும் பொய் வழக்குகளில் தமிழக அரசு கைது செய்தது.
இவர்களில் ஜெ.குரு உள்ளிட்ட 122 பேரை, அவர்கள் செய்யாத குற்றத்திற்காக குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகிய தடுப்புக்காவல் சட்டத்தில் தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. ஒரே மாதத்தில் 122 பேர் தடுப்புக் காவலில்.. ஒரே மாதத்தில், ஒரே கட்சியைச் சேர்ந்த, ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த 122 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் கட்டவிழ்த்து விடப்படாத அடக்குமுறையாகும். பா.ம.க.வினரை பழிவாங்க வேண்டும்; பா.ம.க.வை முடக்க வேண்டும் என்ற ஒற்றை செயல்திட்டத்துடன் பா.ம.க.வினரை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்தது. உள்துறை அமைச்சகத்திடம் முறையீடு இவர்களில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனுக்களை விசாரித்த மத்திய உள்துறை அமைச்சகம், ஒருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பதற்கான 11 விதிகளில் ஒன்று கூட பா.ம.க.வினர் விவகாரத்தில் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் 14 (1) பிரிவின்படி வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 20 பேர் மீதான நடவடிக்கையை ரத்து செய்திருக்கிறது. இவர்கள் அனைவரும் சட்டப்படியான நடைமுறைகளுக்கு பிறகு விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள். எந்த தவறும் செய்யாத அப்பாவிகள் மீது பழிவாங்கும் போக்குடன் தமிழக அரசு மேற்கொண்ட தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை மத்திய அரசு ரத்து செய்திருப்பதன் மூலம் நீதி வென்றுள்ளது. தர்மதின் வாழ்வு தன்னை சூது கவ்வும், தருமம் மறுபடியும் வெல்லும் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பா.ம.க.வினர் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர் என்று தமிழக அரசு கூறிவந்த பொய்ப்புகாரும் இதன்மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
oneindia.in

கருத்துகள் இல்லை: