புதன், 3 ஜூலை, 2013

சேது சமுத்திரம் குறித்த புத்தகம்... கேப்டன் ஆபிதீனுக்கு கலைஞர் பாராட்டு

சென்னை: சேது சமுத்திரத் திட்டம் குறித்த நூல் எழுதிய பேராசிரியர் கேப்டன் ஆபிதீன்-ஐ நேரில் வரவழைத்துப் பாராட்டு தெரிவித்தார் திமுக தலைவர் கருணாநிதி.சேது சமுத்திர திட்டத்தின் தேவையறிந்து மத்திய அரசு பலகோடி நிதியுடன் சேதுசமுத்திர திட்டத்தை தொடங்கிய நேரத்தில் அந்த திட்டம் நிறைவேறாமல் தடுக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் ,மதவாத கட்சிகளும் பலவழிகளில் முயன்றனர். மூன்று ஆண்டுகளுக்குப் முன்பு இந்த மிகப்பெரும் திட்டம் பற்றியும் அதன் சாதகபாதகங்களை பற்றியும் நாடெங்கிலும் மிகக் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.அந்த பரபரப்பான காலகட்டத்தில் சேதுசமுத்திர திட்டத்தின் நன்மைகள் மற்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய புத்தகம் ஒன்றை ஆதம் பாலமா? ராமர் பாலமா? என்ற தலைப்பில் பேராசிரியர் ஆபிதீன் எழுதி வெளியிட்டார்.
புத்தக வெளியீட்டு விழா மதுரை கீற்று பதிப்பகத்தார் சார்பாக இளையான்குடியில் நடைபெற்றது.தமுமுக தலைவர் போராசியியர் ஜவாஹிருல்லா புத்தகத்தை வெளியிட, மதுக்கூர் ராமலிங்கம் பெற்றுக்கொண்டார். .இந்தப் புத்தகத்திற்கு திராவிட கழக தலைவர் கி;.வீரமனி, மதுரை ஆதினம், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் நக்கீரன் வாரஇதழ் ஆசிரியர் கோபால் ஆகியோர் பாராட்டி அணிந்துரை வழங்கியிருந்தனர்.சமீபத்தில் இந்தப் புத்தகம் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. .
இதனை படித்து விட்டு கருணாநிதி, பேராசிரியர் ஆபிதீனை நேரில் அழைத்தார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் அண்ணா அறிவாலயம் சென்ற ஆபிதீன், கருணாநிதியை நேரில் சந்தித்தார்.
அங்கு ஆபிதீனின் புத்தகம் குறித்த விவரங்களைக் கேட்டறிந்த கருணாநிதி, பல விளக்கங்களையும், அறிவுரைகளையும் கூறினார்.தான் முதல்வராக இருக்கும் பொழுதே இந்தப் புத்தகம் தனது கவனத்திற்கு வந்துவிட்டதாக கூறிய கருணாநிதி, சில மாறுதல்களுடன் அந்த புத்தகத்தை மறுபதிப்பாக வெளியிடும் பொழுது அந்தப்புத்தகத்திற்கு வாழ்த்துரையும் தருவதாக கூறினார்.
சுமார் 8 நிமிட சந்திப்பிற்குப் பிறகு கடைசியாக விடைபெறும் பொழுது, இன்னும் பல புத்தகங்கள் தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள் என்று பேராசிரியர் ஆபிதீனை பாராட்டி அனுப்பினார் கருணாநிதி.
இது குறித்து பேராசிரியர் ஆபிதீன் கூறும் பொழுது, டாக்டர் கலைஞர் அவர்கள் இந்த வயதிலும், கடுமையான வேலைப்பளுவிற்கு இடையேயும் தனது புத்தகத்தைப் படித்து ஆலோசனையும் அறிவுரையும் வழங்கிய விதம் மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோசமாவும் இருந்தது என்றார்

கருத்துகள் இல்லை: