சென்னை:
திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக அண்ணா நூற்றாண்டு
நூலகம் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. நூலகத்தை குலைக்க முயற்சிக்கும்
குறுகிய மனப்பான்மையை அண்ணாவே மன்னிக்க மாட்டார் என்று கருணாநிதி
கூறியுள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள
அறிக்கை: அதிமுக அரசின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன, திமுக ஆட்சியில்
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தற்போது எந்த அளவிலே உள்ளன என்பதற்கு சான்று
தேடி வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா
நூற்றாண்டு நினைவு நூலகத்தில் எதுவும் முறையாக நடப்பதாக தோன்றவில்லை.
நூலகத்தில் உருவாக்கப்பட்டுள்ள வசதிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று
ஆங்கில பத்திரிகை ஒன்று எழுதியிருக்கிறது. அதிமுக ஆட்சி தொடங்கியதும் அண்ணா
நினைவு நூலகத்தை டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்போவதாகவும், தற்போதுள்ள
கட்டிடத்தில் குழந்தைகள் மருத்துவமனை தொடங்கப் போவதாகவும் ஜெயலலிதா
அறிவித்தார்.
இதுகுறித்த வழக்கில் ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு, ‘இப்படி ஒரு அருமையான
நவீன வசதி கொண்ட நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட நூலகத்தை இடம்
மாற்றம் செய்வது ஏன்? மருத்துவமனை கட்டுவது என்றால் மெரினா கடற்கரையில்
கட்டலாமே. அரசின் இந்த முடிவு உள்நோக்கம் கொண்டது’ என்று குறிப்பிட்டனர்.
அதன் பிறகு, வேறு வழியில்லாமல் அந்த நூலகம் அங்கேயே நடந்து வருகிறது.
ஆனால், நூலகத்துக்கு சென்று படிப்போர் முழுமையாக பயன்படுத்த முடியாத
அளவுக்கு முறையாக நடத்தாமல், ஏனோதானோவென்று அலட்சிய உணர்வோடு
செயல்படுகின்றனர். அதிமுக அரசு எந்த அளவுக்கு நூலகத்தை புறக்கணித்து
வருகிறது என்பதற்கான உதாரணம்தான் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி.
அண்ணா பெயரால் நாம் அமைத்த நூலகம் என்பதற்காக அதையும் குலைத்துவிட முயற்சி
செய்யும் குறுகிய மனப்பான்மையை அண்ணாவே மன்னிக்க மாட்டார். இவ்வாறு அந்த
அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக