வியாழன், 28 பிப்ரவரி, 2013

அந்நிய தேசங்களிலும் அவமானத்தையும்,கஷ்டத்தையும்

உண்மைகள்.உறங்குகின்றன..
(Koviloor Selvarajan)
நமது தாயகத்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும்,கனட, அவுஸ்த்ரேலியா போன்ற நாடுகளுக்கும் ஏதுமில்லாதவர்களாக வெறுமனே ஏதிலிகளாக வந்த எம் மக்கள் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டார்கள். மொழி,வேலைவாய்ப்பு, கலாச்சாரம், காலநிலை, என்று பல காரணிகளால் கஷ்டப்பட்டார்கள். ஊரிலிருந்த காணிபூமி, அம்மா, அல்லது மனைவியின் தங்க நகைகள், ஏன் பத்துசத வட்டிக்கு கூட கடன் வாங்கியே முகவர்களுக்கும், விமான பயணத்திற்கும் கொடுத்தார்கள். அப்படித்தான் அநேகம் பேர் இந்த மேற்குலக நாடுகளுக்குள் வந்தார்கள். இவர்களில் தாயகத்தில் தரமான உத்தியோகத்தில் இருந்தவர்கள் கூட தங்களின் நிலத்தைவிட்டு  ுலத்துக்கு வரவேண்டிய சூழ்நிலை இருந்தது. இங்கு  வந்தபோது  இவர்கள்தான் மிகவும் கஷ்டப் படவேண்டியதாகப் போய்விட்டது.
  தாயகத்தில் இருந்தபோதும் இரண்டாந்தர பிரஜையாகப் பார்க்கப்பட்ட இவர்கள் அந்நிய தேசங்களிலும் அவமானத்தையும்,கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டியதாயிற்று.பெரிதும் மன உழைச்சலுடன் இருந்த இவர்கள் நாளடைவில் தங்களை மாற்றிக்கொண்டு தங்களுக்கு புகலிடம் தந்த நாடுகளுடன் ஒன்றிப்போவதத்கு பழகிக் கொண்டார்கள். இப்படியே மற்றவர்களும் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார்கள்.பனியிலும்,குளிரிலும் இவர்கள் கஷ்டமான வேலைகளையும், பழக்கப் படாத வேலைகளையும், இரவு பகலாக செய்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தது.நொந்து நூலாகி இரத்தத்தை வியர்வையாக்கி உழைத்த இவர்கள் முதலில் தங்களின் கடன்களை அடைத்தார்கள்.பலர் அக்கா,தங்கைகளை கரைசேர்த்தார்கள்.சிலர் தம்பி,தங்கைகளை படிக்கவைத்தார்கள்,வளவு
வாங்கினார்கள், வீடுகட்டினார்கள், உறவுகளுக்கு உதவினார்கள்.ஊருக்கு பல காரியங்களுக்கு உதவினார்கள்,
இவ்வளவிற்கும் இவர்கள் படும் கஷ்டம் ஊருக்கோ அல்லது உறவுகளுக்கோ தெரிவதில்லை.அவர்கள் நினைப்பெல்லாம் ஏதோ வெளிநாட்டில் பணம் வானத்திலிருந்து கொட்டுகின்றதென்பதே. அதனால்தான் நாளுக்குநாள் தொலைபேசி அழைப்புகளும், கடிதங்களும் அனுப்பி இவர்களை இம்சைப்படுத்தினார்கள். இவர்கள் தங்கள் துன்பத்தை அவர்களுக்கு சொல்லி புரியவைக்க முடியாமல் திண்டாடியது ஊரில் உள்ளவர்களுக்கு தெரியாது.புலத்தில் உள்ள பலர் தங்கள் கஷ்டத்தை மறைத்துக்கொண்டு அங்கிருந்து பணம் கேட்டபோதெல்லாம் வட்டிக்கு வாங்கி அனுப்பிய சம்பவங்கள் ஏராளம். இன்னும் சொல்லப்போனால்...தங்களின் தம்பியையோ, அக்காளின் மகனையோ,அல்லது மனைவின் தம்பியையோ ஒரு வெளிநாட்டுக்கு கூப்பிடுவதற்கு பெருந்தொகைப் பணம் அனுப்ப வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு வரும்போது இவர்கள் வங்கிகளில் கடன் எடுத்துத்தான் செய்ய முடிந்தது.
இதையெல்லாம் ஊரில் உள்ளவர்கள் அறியார்கள்.ஆனால் உண்மை அதுதான். இவர்கள் இரவு பகலாக ஊன்,உறக்கமின்றி ஓய்வு உளைச்சலின்றி நாள்தோறும் வேலை செய்தே இவர்களின் கடன்களை படிப்படியாக கட்டவேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார்கள். இன்னும் சொல்லப்போனால் ஊரில் உள்ள கோவில் குளம், சிறுவர் காப்பகம், முதியோர் இல்லம், வெள்ள அழிவு, பள்ளிக்கூட முன்னேற்றம், சமூக நலம் சார்ந்த நடவடிக்கைகள் என்று ஏகப்பட்ட காரியங்களுக்கு இவர்கள் பங்களிப்பு செய்ய வேண்டிவரும். அதைவிட புலத்தில் நடக்கும் திருமணங்கள், பெண்கள் வயசுக்கு வரும் விழா,பிறந்த நாள் கொண்டாட்டம், கேளிக்கை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,என்று பலவற்றிற்கு இவர்கள் பணம் செலவளித்தே ஆகவேண்டும்.  இதைவிட, இவர்களின் வீட்டு கடன், பிள்ளைகளின் பாடசாலை கட்டணம்,மாதாந்த மின்சாரக் கட்டணம், வீட்டு தொலைபேசிக் கட்டணம்,கையில் உள்ள அலைபேசி கட்டணம், இணையவலை கட்டணம், காருக்கு உரிய காப்புறிதிக்கட்டணம், அதற்குரிய வீதிக் கட்டணம், எரிபொருள் நிரப்ப பணம், வைத்தியசாலை கட்டணம், மாத்திரை, மருந்துக்குரிய பணம், மாதாந்த கடனட்டை கொடுப்பனவு, வீட்டு நிர்வாக செலவு, இதில் உணவு, அத்தியாவசிய பொருட்கள், மற்றும் முக்கிய இதர செலவுகள்வந்து இவர்களின் முன் நிற்கும்.வாசிக்கும்போதே மூச்சு வாங்குதல்லவா?
இதையெல்லாம் இவர்கள் எப்படி கஷ்டப்பட்டு சமாளிக்கிறார்கள் என்பது அந்த ஆண்டவன்  ஒருவனுக்குத்தான் தெரியும். ஊரில் இருக்கும் சொந்தங்களுக்கோ அல்லது பொது பணிக்கு 
பணம் கேட்டு எழுதும் அமைப்புகளுக்கோ தெரியாது.
இன்று பார்த்தால், ஊரில் உள்ள ஒரு சாரார் புலத்தில் வாழும் மக்களைவிட வாழ்க்கைத்தரத்தில் உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை  ஊருக்கு போய்வந்த பலர் சொல்கிறார்கள். குறிப்பாக ஆழிப் பேரலை அழிவுக்குப்பின், அரசாலும், அரச சார்பற்ற நிறுவனங்களாலும் பல திட்டங்களும், வசதிகளும், வாய்ப்புகளும் பரவலாக ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை என்றும், அநேக வீடுகள் மாடி வீடுகளாக கட்டப்பட்டும், அநேக வீடுகளில் மகிழூர்திகழும்,(கார்)உந்தூர்திகளும் (மோட்டார் சைக்கிள்) கணிசமான வீடுகளில் இருக்கின்றன என்ற தகவலும் வருகின்றன.
அங்கு வசதியாக உள்ளவர்கள் தங்களை  வளம்படுத்தவே பார்க்கிறர்கள். தங்களின் பணத்துக்கு பங்கம் வராமல் காணிபூமி வாங்கி விடுகிறார்கள். மாடுகண்டு, தோட்டம் துரவு வீடுவளவு என்று சொத்து சேர்ப்பதில் நாட்டமாக இருக்கிறார்கள்  என்ற செய்திகளும், அங்குள்ள பொதுநல தேவைகளுக்கு இவர்கள்  பெரிதாக உதவுவதில்லை, இதை புலம் பெயர்ந்த மகளிடமே எதிர்பார்க்கிறார்கள் ஏன் இப்படி? என்ற கேள்வியும், ஆதங்கமும் புலத்தில் வாழும் மக்களிடையே இன்று எழுந்து நிற்கிறது.
பலர்  வெளிப்படையாகவே தங்களின் கஷ்டத்தையும்,இயலாமையையும் சொல்லி ஊரில் வசதியாக உள்ளவர்களிடமும் பொதுநல அமைப்புகள் உதவி கோரலாமே என்று சொல்கிறார்கள்.சிலர் வழமைபோல் என்ன கஷ்டமோ ஏதோ தங்களால் முடிந்ததை செய்கிறார்கள். இந்தக் கட்டுரை என்ன சொல்லவருகிறதென்றால் புலத்தில் வாழும் மக்கள் இங்கு மகா கஷ்டத்திலேதான் அதாவது கட்டுரையில் சொன்ன பல பிரச்சினைகளுக்குள் இருந்தே வாழ்கிறார்கள் என்பது உண்மை. இந்த உண்மை உறங்குகிறது. ஊரில் உள்ள உறவுகளும், ஏனையோரும் இதை புரிந்துகொள்ளுங்கள் என்பதை தான். வாசகர்களே சற்று சிந்தியுங்கள்..சரியென்று படுகிறதா?  sooddram.com

கருத்துகள் இல்லை: