செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கீதிகா ஷர்மா – அனுராதா: மகள் வழியில் தாய் தற்கொலை!

அனுராதா ஷர்மாவினவு
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?
ரியானாவை சேர்ந்த விமானப் பணிப்பெண் கீதிகா ஷர்மாவின் தற்கொலைச் சம்பவத்தை இவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது. அவர் இறந்து 6 மாத காலத்திற்குள் 51 வயதான அவருடைய தாயார் அனுராதாவும், கீதிகா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட அதே அறையில், அதே முறையில் சென்ற பிப்ரவரி 15 ஆம் தேதி தன் உயிரையும் போக்கிக்கொண்டுள்ளார். அவரின் மறைவு கீதிகாவின் தந்தை தினேஷையும் தம்பி அங்கித்தையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கீதிகா மற்றும் அவருடைய தாயார் இறப்பதற்கு முன் எழுதி வைத்துள்ள வாக்குமூலங்களின்படி, அவர்கள் சாவிற்கு ஹரியானா மாநில முன்னாள் அமைச்சராக இருந்த கோபால் கோயல் கண்டாவும் அவரது உதவியாளர் அருணா சத்தா என்பவரும் கொடுத்த தொடர்ச்சியான தொல்லைகளும் அதனால் ஏற்ப்பட்ட மன உளைச்சலுமே காரணம் என்று பதிவாகியுள்ளது.
ஆள் பலம், பணம் பலம் இருபவர்களை எதிர்ப்பதே இமாலய காரியமாக இருக்கும் இவ்வுலகில், அரசியல் பலத்தையும் கொண்ட ஒரு ஆளை, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இறங்கி எதிர்க்க முடியுமா?
‘பெற்ற மகளை தற்கொலைக்கு தள்ளிய கண்டாவையும் அருணாவையும் தண்டித்தே தீரவேண்டும்’ என்று இறுதிவரை போராடியிருக்கிறார் அனுராதா. மகளை இழந்த மனவேதனை ஒரு பக்கம் இருக்க, கோர்ட், கேஸ் என்ற அலைச்சல்கள் ஒரு பக்கம், மகளைப் பற்றிய கிசுகிசுப்புகள், அவதூறுகள் இன்னொரு பக்கம் என்று எல்லாம் சேர்ந்து அந்த குடும்பத்தின் நிலையை முற்றிலுமாக திருப்பிப் போட்டுள்ளன.

வழக்கறிஞர்கள் கூட இவர்களது வழக்கை எடுத்து வாதிட அஞ்சியிருக்கிறார்கள். அனுராதா எதிர் கொண்ட எதிரிகளின் செல்வாக்கை புரியவைக்க இதைவிட உதாரணம் தேவையில்லை. மக்களை காப்பதாக பீற்றிக் கொள்ளும் நீதித்துறையும், போலீஸுமே அரசியல் அதிகாரம் கொண்ட நபர்களுக்கு பணிந்து அவர்களுக்கு தலைவணங்கும் சூழல் நிலவும் இச்சமூகத்தில் இதுதானே நிலைமையாக இருக்கும்?
மத்திய நிதி அமைச்சகத்தில் கணக்கராக டெல்லியின் கான் மார்க்கெட் என்ற இடத்திலுள்ள அலுவலகத்தில் பணியாற்றி வந்த அனுராதா, கீதிகாவின் மறைவிற்கு பிறகு 6 மாத காலம் பணிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். கடந்த 2 வாரமாகத் தான், தனக்கு மாற்றலான புது இடமான ஷாலிமார் பாக் அலுவலகத்தில் வேலைக்கு செல்ல ஆரம்பித்துள்ளார். இந்த இடமாற்றத்திற்கு கூட அரசியல் பின்புலங்கள் காரணமாக இருந்திருக்கக் கூடும். இப்படி எல்லா திசைகளிலும், தோல்வியும், பிரச்சனைகளும், விலகல்களும், அவப்பேச்சுகளும் அக்குடும்பத்தினரை தனிமைப்படுத்தி அவர்களை தொடர்ச்சியான அழுத்தத்தில் வைத்திருக்கிறது.
சமீபத்தில் நடந்த விசாரணையின் போது, கோபால் கண்டாவிற்கு பிப்ரவரி 20 அல்லது 22ம் தேதி ஜாமீன் கிடைக்கும் வாய்ப்பு உருவானதும், முகத்தில் பூரிப்பும், சிரிப்புமாக காட்சியளித்த கண்டாவை பார்த்த அனுராதாவிற்கு அது பெரும் இடியாக இருந்திருகிறது, நீதிமன்றத்திலேயே கண்டாவை ஆவேசமாக திட்டியுள்ளார்.
கீதிகா கொலை வழக்கில், போலீஸ் சாட்சியான சான்ஷிவ்ரூப் என்பவர் கண்டாவிற்கு எதிராக சாட்சி கூற தயாராக இருந்தார். ஆனால், ஜாமீனில் வெளியே சென்ற அவருக்கும் அவர் குடும்பதிற்கும் தொடர்ச்சியாக விடப்பட்ட கண்டா ஆட்களின் பயமுறுத்தல்களால் அவர் அமெரிக்காவுக்கு போய் விட்டிருக்கிறார். நீதிமன்றத்தில் கிடைக்கப்போகும் தீர்ப்பு என்பது அரசியல்வாதியான கண்டாவின் செல்வாக்கில் விளைந்த ஒன்றாக இருக்கும் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார் அனுராதா.
கீதிகாவின் மரணத்திற்கு பின்பு தளர்ந்து போய் இருந்த அவர், மகன் அங்கித்தை தனியே எங்கும் வெளியே அனுப்பக் கூட பயந்திருக்கிறார். ‘தன்னிடம் எதையும் மறைக்காமல், எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்றும் ‘அது தவறியதால்தான் கீதிகாவிற்கு இந்நிலை ஏற்பட்டது’ என்றும் கூறியுள்ளார்.
சிறையிலிருந்து வெளியில் வந்தபிறகு, கோபால் கண்டாவிடமிருந்து எந்த வடிவத்தில் எதிர்கால உபத்திரவங்கள் உருவாகும் என்ற அச்சமும் மகன், கணவன் இருவரையும் இழக்க நேரிடுமோ என்ற மனஅழுத்தமும் சேர்ந்துதான் அனுராதா தன்னுடைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள தூண்டியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: