வியாழன், 8 செப்டம்பர், 2011

பாலபாடம் நடத்த வேண்டாம்: தே.மு.தி.க., மீது முதல்வர் பாய்ச்சல்

சென்னை:""தே.மு.தி.க., உறுப்பினர்கள், சட்டசபைக்கு புதியவர்கள். அவர்கள், எங்களுக்கு பாலபாடம் நடத்த வேண்டாம்,'' என்று, முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாகப் பேசினார். இதனால், சட்டசபையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டம் மற்றும் நீதித்துறை நிர்வாக மானியக் கோரிக்கையில், தே.மு.தி.க., உறுப்பினர் அருண் சுப்பிரமணியன் பேசும்போது நடந்த விவாதம்:

அருண் சுப்பிரமணியன்: நில மோசடி விவகாரங்களில் சிக்கி, தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் பாதி பேர் ஜெயிலிலும், பாதி பேர் பெயிலிலும் இருக்கின்றனர். சிறைவாசம் அவர்களுக்கு சுகவாசமாக இருக்கிறது. சிறையில், சகல வசதிகளையும் பெற்று அனுபவிக்கின்றனர். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா: தி.மு.க.,வினருக்கு சிறைவாசம் சுகவாசமாக இருப்பதாக, உறுப்பினர் கூறுகிறார். இது எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இதைப் பற்றி உறுப்பினர் விளக்கமாகக் கூற வேண்டும்.
அருண் சுப்பிரமணியன்: தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி, சிறையில் அதிகமான வசதிகளைப் பெறுகின்றனர். அதனால், அவர்களை சாதாரண வார்டுக்கு மாற்ற வேண்டும் என்று தான் கேட்கிறேன். சிறைகளில், தி.மு.க.,வினர் சுகமாக இருப்பது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வருகிறது; மக்களும் பேசிக்கொள்கின்றனர்.
முதல்வர்: சிறையில், கைதிகள் அனைவருக்கும் ஒரேவிதமான வசதிகள் தான் செய்து கொடுக்கப்படுகின்றன. தி.மு.க.,வினரிடம் ஆட்சி இல்லை; அதிகாரம் இல்லை. அப்படியிருக்கும் போது, அவர்கள் எப்படி செல்வாக்கைப் பயன்படுத்தி, சுகவாசிகளாக இருக்க முடியும்? அவர்களுக்கு இப்போது என்ன செல்வாக்கு இருக்கிறது? உறுப்பினரின் பேச்சு, சிறைத் துறை அதிகாரிகளை குற்றம்சாட்டுவது போல் இருக்கிறது.பொத்தாம் பொதுவாக பேசக் கூடாது. எந்த சிறையில், எந்தக் கைதி சுகவாசியாக இருக்கிறார் என்பதை குறிப்பிட்டு, உறுப்பினர் கூற வேண்டும்.
அருண் சுப்பிரமணியன்: தி.மு.க.,வினர் மீது புகார்கள் பெறப்பட்டுள்ளன.
முதல்வர்: தனிப்பட்ட முறையில் புகார் தந்தால், அதைப் பற்றி சட்டசபையில் பேசக் கூடாது.
அருண் சுப்பிரமணியன்: முதல்வருக்கு நன்றி. முருகனின் அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடு திருத்தணி. இந்நகருக்கு வெளியே சுற்று வட்டச் சாலை அமைக்க வேண்டும்.
முதல்வர்: தே.மு.தி.க., உறுப்பினர்கள், இந்த சபைக்கு புதியவர்கள். அவர்கள் எங்களுக்கு பாலபாடம் நடத்த வேண்டாம். ஒரு உறுப்பினர், மேட்டூரில், மேட்டூர் அணை இருக்கிறது என்கிறார். இது யாருக்குத் தெரியாது? இவர், (அருண் சுப்பிரமணியன்) முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடு திருத்தணி என்கிறார். இவர் சொல்லாவிட்டால் எங்களுக்குத் தெரியாதா?இவ்வாறு விவாதம் நடந்தது.

தே.மு.தி.க., உறுப்பினர்கள் அதிர்ச்சி : முதல்வரின் ஆவேச பேச்சும், தே.மு.தி.க., உறுப்பினரை விடாமல், அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு திணறடித்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். முதல்வர் பேசும்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், சபையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று சபை முடிந்ததும், அனைத்து தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்களும் நேராக, கட்சியின் தலைவர் விஜயகாந்தை சந்திக்கச் சென்றனர்.

கருத்துகள் இல்லை: