வெள்ளி, 9 செப்டம்பர், 2011

வல்லரசு இந்தியா கொலை செய்த 11 குழந்தைகள் !


அதிகார வர்க்கமும், மேட்டுக்குடியும், மத பீடாதிபதிகளும் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் சிகிச்சை பெற்றுகொள்ள உழைக்கும் மக்களோ போதிய பாதுகாப்பும் வசதிகளும் இன்றி கொலை செய்யப்படுகின்றனர்









லக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியாவில் மருத்துவம்  ஒரு ‘புகழ்’பெற்ற துறை.  இங்கு கிடைக்காத மருத்துவ வசதிகளே இல்லை. ஆபரேஷன் செய்த தடம் கூட இல்லாமல் சிறு துளைமூலம் அறுவைசிகிச்சை,  இதய சிகிச்சைக்கான சிறந்த வல்லுநர்கள், உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனிசிறப்பு பெற்ற “ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனைகள், குழந்தை பேறுக்கான சிகிச்சை மையங்கள் என்று இந்தியாவில்தான் மருத்துவங்கள் எத்தனை வகை! மருத்துவமனைக்குச் சென்றால் வீட்டுக்கு திரும்பி வரக்கூட விரும்ப மாட்டீர்கள் என்றெல்லாம் விளம்பரங்கள் வருகின்றன.
வெளிநாட்டினரை கவந்திழுக்க தனியாக மருத்துவ சுற்றுலா – அதாவது வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட குறைந்த செலவில் இங்கு மருத்துவம் பெறுவதற்காகவே இதனை அரசாங்கம் தனியாகவே விளம்பரப்படுத்துகிறது. பெரியவர்களிலிருந்து கைக்குழந்தை வரை அதில் அடக்கம்.  அவ்வப்போது, செய்திதாள்களில் கூட பார்த்திருக்கலாம், ஒரு வெளிநாட்டுக் குழந்தை தாய் தந்தையின் அரவணைப்பில் சிரித்துக்கொண்டிருக்கும் – மருத்துவத்துக்காகவே இந்தியாவுக்கு பறந்து வந்த குழந்தையென்று தனியாகக் கட்டம் கட்டிப் போட்டிருப்பார்கள்.
ஆயினும் இந்த வசதிகளும் வாய்ப்புகளும் ஏழைகளுக்கு இல்லையென்றுதான் கடந்தவாரம் ஆந்திராவில் உயிரழந்த குழந்தைகள் மூலம் நிருபணமாயிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 11 குழந்தைகள், பிறந்து சில நாட்களேயான குழந்தைகள் இறந்திருக்கின்றன. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில்தான்  மனதை பிசையும் இந்த கொலைகள் நடந்திருக்கின்றன. அதே ஆந்திராவில் சாகக்கிடந்த சாயிபாபாவை உயிர் பிழைக்க வைத்த  அந்த ஆந்திராவில் 11 குழந்தைகள் இறந்தது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா?  கடந்தவாரத்தின் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்  48 மணிநேரங்களுக்குள்ளாகவே   இக்குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்திருக்கின்றன.
இது தங்களது கவனக்குறைவினால் ஏற்பட்டதல்ல என்று ஆரம்பத்தில் மருத்துவமனையின் தரப்பிலிருந்து சொல்லப்பட்டாலும் உண்மை வேறாக இருந்தது. ஆக்சிஜன் போதாமையால் மூச்சடைத்து குழந்தைகள் இறந்ததாக தெரிவிக்கிறார்கள் பெற்றோர்கள்.மருத்துவமனை நிர்வாகத்துக்கு  இதனை சொல்லியும்  அவர்கள் கண்டுக்கொள்ளவேயில்லை.  குழந்தைகளை மிகவும் அபாயகரமான நிலையில்தான் கொண்டு வந்தார்கள் என்றும் அவர்களது ஆபத்தான நிலைதான் சாவுக்குக் காரணம் என்றும் வாதிட்டார்கள்.   இந்த மருத்துவமனையில் மொத்தம் 20 படுக்கைகள் இருக்கின்றன. ஆனால், எப்போதும் 30 குழந்தைகளாவது இருக்கும்.  அதோடு, ஆக்சிஜனுக்கான சாதனங்களில் இரண்டுதான் வேலை செய்யும். மீதி இரண்டு பழுதானவை.
“இது ராயலசீமாவின் பகுதியின் ஒரே  மருத்துவமனையாக இருப்பதால் நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களிலிருந்து வருகிறார்கள்.  போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் அவர்களை திருப்பி அனுப்ப முடியாமல்  கவனித்துக்கொள்கிறோம். தேவையான மருத்துவ வசதிகளுக்காக  அரசாங்கத்தை அணுகியிருக்கிறோம் மேலும் இது குறித்து விசாரணை நடக்கும்” என்கிறார்  கர்னூல் மாவட்டத்தின் கலெக்டர் ராம்ஷங்கர் நாயக். ஆனால், அரசாங்கமோ இதற்கு நேர்மாறாக  சொல்கிறது.  ஆந்திராவின் குடும்பநல அமைச்சரான  ரவீந்திர ரெட்டி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கலெக்டர் அனுப்பிய ரிப்போர்ட்டில் டூட்டியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் தங்களது சொந்த கிளினிக்கில் இருந்திருக்கின்றனர். இந்த கவனக்குறைவே குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என்றுசொல்லியிருப்பதாகக் கூறுகிறார். மேலும், இது மருத்துவர்களின் தவறாலேயும் கவனக்குறைவாலும்  நிகழ்ந்ததுதானென்றும் சொல்கிறார்
இப்படி இவர்கள் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கையில்  மருத்துவமனையிலிருந்து  ரிப்போர்ட்டை அனுப்பியிருக்கிறது, பிரபல மருத்துவர்களைக்கொண்ட குழுவொன்று.
அதாவது, மருத்துவமனையில் 16 இன்குபேட்டர்களும், 4 சூடேற்றிகளும், 4 வெண்டிலேட்டர்களும் பிற சாதனங்களும் இருக்கின்றன.  போதுமான அளவுக்கு மருந்துகளும் இருப்பில் உள்ளது,  கடந்த ஆக்ஸ்டு 30 -ஆம் தேதியும் செப்டம்பர் 1-ஆம் தேதியும் இறந்த 10 குழந்தைகளுள் ஒரு குழந்தைதான் அங்கேயே – அதாவது அந்த மருத்துவமனையிலையே பிறந்த குழந்தை.  அதில் 4 குழந்தைகள் குறிப்பிட்ட காலத்துக்கு முந்தி பிறந்தவை. மூச்சுத்திணறலின் காரணமாகவே  அனைத்துக் குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்று பிரபல  குழந்தை மருத்துவர்களைக் கொண்டு முதலமைச்சருக்காகத் தயாரிக்கப்பட்ட ரிப்போர்ட் கூறுகிறது.
இந்தியாவின் மருத்துவ வசதிகள் என்னதான் உலகமே மெச்சக்கூடியதாக இருந்தாலும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் இந்த வசதிகள் இல்லை. எங்கிருந்தோ வந்த குழந்தையானாலும் வசதியும் கையில் பணமிருந்தால் எந்த சிகிச்சையும் கிடைக்கும்.
இப்படி எவ்வளவோ வசதிகள் இங்கிருந்தும் அமெரிக்காவுக்கு பறக்கிறார் சோனியா. அவரைப் பற்றி கவலைப்பட  எத்தனை மீடியாக்கள், அரசியல்வாதிகள்!  ராமச்சந்திராவில்  மருத்துவம் பார்த்துவிட்டு மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் பறந்தார் ரஜினி. அவர் இட்லி சாப்பிட்டதும்,  தண்ணீர் குடித்ததும்,  நடந்ததும் தலைப்புச் செய்திகளாயின. அதோடு சிகிச்சை முடிந்து அவர் தனியாக நடந்து வந்ததை பார்த்து கோபமும் ஆவேசமும் கண்டனமும் தூள் பறந்தன.  செத்துப்போய் பலநாட்களான சாயிபாபாவுக்குத்தான் அலங்காரங்களும் அலப்பரைகளும் எத்தனை!
அதிகார வர்க்கமும், மேட்டுக்குடியும் மத பீடாதிபதிகளும் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் சிகிச்சை பெற்றுகொள்ள உழைக்கும் மக்களோ போதிய பாதுகாப்பும் வசதிகளும் இன்றி கால்நடைகளை கொட்டடியில் அடைப்பதுபோல அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சை என்பதைவிட கொலை செய்யப்படுகின்றனர் என்பதே பொருத்தமாக இருக்கும்.
உள்நாட்டில் மருத்துவர்கள் விகிதாச்சாரம் மிகக்குறைவாக இருந்தாலும் வெளிநாட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவதில்லை. இந்தியாவிலிருந்துதான் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் செல்கின்றனர். அதிலும், ஊரகப்பகுதிகளுக்கு ஒரு வருடம் பணிபுரிய வேண்டுமென்று சொன்னதற்கே மருத்துவ மாணவர்கம் ஸ்டிரைக் செய்தனர். மருத்துவம், ஆசிரியர்  போன்ற தொழில்கள் அவற்றின் மகத்துவத்தை இழந்து பணம் பண்ணுவதற்கான தொழிலாக மாற்றியிருக்கிறது முதலாளித்துவம்.
ஆரம்பத்தில் சொல்லிய மருத்துவ சுற்றுலா வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெளிநாட்டு பணம் படைத்த நோயாளிகள் மூலம்  அரசாங்கமும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது.   இன்னும் வரும் வருடங்களில் இவர்களின் வரவு அதிகரிக்கலாமென்று  அதற்கான் முதலீடுகல், சொகுசு பங்களாக்கள், கலாச்சார சுற்றுலாக்கள் திட்டமிடப்படுகின்றன.  ஆனால், உழைக்கும் மக்களோ போதுமான வசதியின்றி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பந்தாடப்படுகின்றனர். ஏனெனில், உழைக்கும் மக்களிடமிருந்து பறிப்பதற்கு எதுவுமில்லை உயிரைத்தவிர!

கருத்துகள் இல்லை: