வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கூட்டணிக்காக யாரும் அணுகவில்லை: ராமதாஸ்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும். கட்சிகள் பெறும் ஓட்டுகள் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்களை கட்சி நியமிக்கும். அப்படி நடை பெறும்போது இடைத்தேர்தல் நடத்த தேவையில்லை. பணச்செலவு ஏற்படாது. திருச்சி மேற்கு தொகுதியில் பா.ம.க. போட்டியிடவில்லை.

உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்துகிறோம். உள்ளாட்சி தேர்தலில் இரண்டு, மூன்று ஓட்டுகள் போடனும். அதனால் வாக்கு சீட்டு முறையை பின்பற்ற வேண்டும். மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்களை மக்களே தேர்வு செய்வது போல ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவரையும் மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.

மோனோ ரெயில் திட்டத்தால் நன்மை கிடையாது. அதை கைவிட வேண்டும். அரசு உறுதியாக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா, மது விலக்கை கேட்கிறவர்களே கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று கூறியுள்ளார். கள்ளச் சாராயம் விற்பது யார் என்று அவர் கூற வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளச் சாராயத்தை முற்றிலும் ஒழிக்க முடியும். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்காக யாரும் அணுகவில்லை. ம.தி.மு.க.வில் திராவிட என்ற வார்த்தை உள்ளது. அதை ஏற்க முடியாது. திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று ஏற்கனவே தெரிவித்து இருக்கிறோம்.

அரசு அமைக்கின்ற துணை நகரம் அரசு சொந்த நிலத்தில் அமைகிறது. அதனால் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் பா.ம.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது.

தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். பா.ம.க. மட்டுமே மக்களுக்காக ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தால் முறைகேடு நடக்க வழி வகுக்கும். அதனால் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்றார்.


கருத்துகள் இல்லை: