வெள்ளி, 9 செப்டம்பர், 2011

புதிய சட்ட ஏற்பாட்டை ஹக்கீம் சமர்பிப்பு - ரணில் எதிர்ப்பு


குற்றவியல் வழக்கு கட்டளைச் சட்டத்தின் கீழ் விசேட சட்ட ஏற்பாடுகள் அடங்கிய பிரேரணை ஒன்றை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளார். இதன்படி அவசரகாலசட்டம் இல்லாது செய்யப்பட்ட நிலையில் சாதாரண சட்டத்தின் கீழ் நாட்டின் பொதுமகன் ஒருவர் கைது செய்யப்பட்டு 24 மணித்தியாலத்தினுள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும். எனினும் விசேட காரணங்களுக்காக குற்றவியல் வழக்கு கட்டளைச் சட்ட புதிய விசேட ஏற்பாடுகளின் மூலம் சந்தேகநபர் ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்திருக்க பொலிஸாருக்கு அதிகாரமுண்டு. இரண்டு வருடங்களுக்கு இந்த சட்ட ஏற்பாடு அமுலில் இருக்கும் எனவும் சந்தேக நபர் ஒருவரை கைது செய்து நீதிமன்ற அனுமதியின்றி 48 மணித்தியாலங்கள் மாத்திரமே தடுத்து வைத்திருக்க முடியும் என புதிய சட்ட ஏற்பாடு குறிப்பிடுகிறது. இந்த புதிய சட்ட ஏற்பாடுகள் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றில் அமளி துமளி ஏற்பட்டதை அடுத்து சுமார் 30 நிமிடங்களுக்கு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை சட்டத்திற்கு முரணானது என எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க அவையில் எழுந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த புதிய விசேட சட்ட ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவென சபை நடவடிக்கைகள் 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: