வெள்ளி, 9 செப்டம்பர், 2011

போதைபொருள் கடத்தல் ஈழத்தமிழர் இருவருக்கு இந்தியாவில் சிறை


இந்தியாவில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு 6 வருட விசாரணைகளின் பின் நேற்று முன்தினம் 8 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தியர் இருவர் உட்பட இலங்கையர் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய மத்திய பிரதேசம் உஜ்ஜைனியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் சென்னையைச் சேர்ந்த ஜி. ஜெயந்தி (வயது 46) மற்றும் அவரது மகன் ஜெகன் (26) இருவரும் 13.12.2005 அன்று வெவ்வேறு பெயர்களில் பயணம் செய்தனர். அந்த ரயிலில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து நின்றதும் சந்தேகப்படும் நபர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது ஜெயந்தி, ஜெகன் ஆகியோரின் உடைமைகளையும் பொலிஸார் சோதனை செய்தனர்.
அதன்போது பொலித்தீன் பைகளில் வெள்ளை நிறப் பௌடர் அடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. சோதனை செய்ததில் அவை ஹெரோயின் என்ற போதைப் பொருள் என்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜெயந்தி ஜெகன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த வாக்கு மூலத்தில் போதைப் பொருளை இலங்கையைச் சேர்ந்த சிவபாலன் மற்றும் நந்தேஷ்னா ஆகியோரிடம் கொடுக்க இருந்ததாகவும் அதை அவர்கள் கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்த இருந்ததாகவும் குறிப்பிட்டனர். அதைத் தொடர்ந்து சிவபாலனையும் நந்தேஷ்னாவையும் பொலிஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி முஹம்மது ஜபருல்லாகான் இந்த வழக்குத் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளித்தார்.
போதைப் பொருள் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக ஜெயந்தி ஜெகன், சிவபாலன் ஆகியோருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ. 10 இலட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. நந்தேஷ்னா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதை அடுத்து அவரை விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: