சனி, 10 செப்டம்பர், 2011

ராஜிவ் விஷயத்தில் நன்றி மறக்கலாமா? செய்த தவறை ஜெயலலிதா திருத்திக் கொள்ள வேண்டும்


சென்னை: தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்கினால் அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது அவருடன் இறந்தவர்களுக்கு நீதி கேட்டும், தூக்கு தண்டனை பெற்றவர்களை உடனே தூக்கிலிடக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில், சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. எம்.எஸ்.திரவியம், ஜோதி ராமலிங்கம் தலைமை வகித்தனர். குமரி அனந்தன் துவக்கி வைத்தார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:  ராஜிவ்காந்தி கொலையாளிகளை உடனே தூக்கில் போட வேண்டும் என கருத்து தெரிவித்ததற்காக எனக்கு தொலைபேசி மூலம் 300க்கும் மேற்பட்ட மிரட்டல் வந்தது. பெரியாரின் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்யும் சீமான், காங்கிரசை அழிப்பேன் என்கிறார். சீமான் மீது நடவடிக்கை எடுக்க ஜெயலலிதா தயங்குகிறார். முதல் நாளில் எனக்கு அதிகாரம் இல்லை என்று சட்டப்பேரவையில் சொன்ன ஜெயலலிதா, மறுநாள் தூக்கு தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றுகிறார். யாருடைய மிரட்டலால் தீர்மானத்தை போட்டார்.

அந்த தீர்மானத்தை ஜெயலலிதா வாபஸ் பெற வேண்டும். தீவிரவாதத்திற்கு ஆதரவு தந்தால்  தமிழகத்தில் மீண்டும் அது தலைதூக்கும். அதற்கு ஜெயலலிதாதான் பொறுப்பு ஏற்க வேண்டும். ராஜிவ்காந்தியின் நண்பர் எம்.ஜி.ஆர். அவரால்தான் ஜெயலலிதா அரசியலுக்கு அறிமுகமானவர். அவர் இல்லை என்றால் ஜெயலலிதா முதல்வராக இருக்க முடியாது. அவர் திருந்தி விட்டார் என்று நினைத்தோம். ஆனால் சர்வாதிகாரம் அவரை மீண்டும் சூழ்ந்துள்ளது. செய்த தவறை ஜெயலலிதா திருத்திக்கொள்ள வேண்டும். உங்களை காப்பாற்றியவர் ராஜிவ்காந்தி. அந்த நன்றியை நீங்கள் மறக்கலாமா?

ஜெயலலிதா உறுதியான பெண்மணி. அவர் தவறுகளுக்கு உடன் போக மாட்டார் என நம்புகிறோம்.

பெரியார் படத்திற்கு இசை அமைக்க மாட்டேன் என்று இளையராஜா சொன்னார். அப்போது பெரியாரின் சீடர்கள் என்று சொல்லும் சீமானும், பாரதிராஜாவும் எங்கே போனார்கள். சினிமாவில் மார்க்கெட் போனதால் அரசியலுக்கு வந்துள்ளார்கள்.  காங்கிரஸ்காரர் கள் தனித் தனியாகத்தான் இருப்பார்கள். ஆனால் நல்ல காரியத்திற்கு ஒன்று சேருவார்கள். காங்கிரஸ் தலைமையைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். அது ஜால்ரா கூட்டம். மக்களின் நலனுக்காக காங்கிரஸ்காரர்கள் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

முன்னாள் எம்.பி.க்கள் அன்பரசு, வள்ளல்பெருமான், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், அருள் அன்பரசு, வேணுகோபால், ஞானசேகரன், முருகானந்தம், நாசே ராமச்சந்திரன், கராத்தே தியாகராஜன், சி,டி,மெய்யப்பன், தொழிற்சங்க தலைவர் நஞ்சப்பன், சைதை ரவி, சாய்லட்சுமி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தனி மேடையில் பலியானோரின் உறவினர்கள்
உண்ணாவிரதப் பந்தலில் தனி மேடை போட்டு ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது இறந்த லீக் முனுசாமி, போலீஸ் அதிகாரிகள் முகம்மது இக்பால், ராஜகுரு, எட்வர்ட் ஜோசப், மற்றும் சம்தானி பேகம் ஆகியோர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அமர வைக்கப்பட்டனர். அந்த சம்பவத்தில் காயமடைந்த போட்டோகிராபர் ஜெய்யும் அமர்ந்திருந்தார்

கருத்துகள் இல்லை: