புதன், 7 செப்டம்பர், 2011

Wikileaks மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது'

புதுடில்லி:"கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது' என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், "காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க., ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதே தி.மு.க.,வின் விருப்பம். சோனியா பிரதமராக வேண்டும் என்பதையே தமிழக மக்களும் விரும்புகின்றனர்.

அதே நேரத்தில், பிரதமர் பதவியை ஏற்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பிரச்னைகளைத் தீர்ப்பதில் வல்லவர் என்றாலும், அவர் பிரதமராக வேண்டும் என, வடமாநிலத்தவர் வேண்டுமானால் விரும்பலாம்; தென் மாநில மக்கள் அவரை விரும்ப மாட்டார்கள்' என்று கூறியுள்ளார்.

மேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சென்னையில், ஒரு காலகட்டத்தில் சந்தித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும், தான் பிரதமராக தி.மு.க., ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: