வியாழன், 20 மே, 2010

அதிக சம்பளம் கேட்கும் நடிகர், நடிகையரை, தயாரிப்பாளர்கள் துணிச்சலுடன் ஒதுக்க


பணமே குறியாக,அதிக சம்பளம் கேட்கும் நடிகர், நடிகையரை, தயாரிப்பாளர்கள் துணிச்சலுடன் ஒதுக்கி வைக்க முன்வர வேண்டும் என்று ராதாரவி கூறியுள்ளார்.

எஸ்.பி.சோலைராஜா தயாரித்து இயக்கும் நீயும் நானும் படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா பிலிம்சேம்பர் தியேட்டரில் நடந்தது.

இதில் கலந்து கொண்டு ராதாரவி பேசுகையில்,

நடிகர் நடிகைகள் கூடுதல் சம்பளம் வாங்குவதாகவும், அதை குறைக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட திரையுலகின் அனைத்து அமைப்பினரும் வற்புறுத்தி வருகின்றனர். சம்பளத்தை நடிகர்கள் நிர்ணயிப்பது இல்லை. தயாரிப்பாளர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள்.

குறிப்பிட்ட நடிகர், இயக்குனர் [^], இசையமைப்பாளர் இருந்தால் படம் வெற்றிகரமாக ஓடும் என்று கருதி அவர்களை மொய்க்கின்றனர். நடிகருக்கு அதிகமான சம்பளத்தை அள்ளி கொடுக்கிறார்கள். அந்த நடிகர் மற்ற தயாரிப்பாளர்களிடமும் அதே அளவு கூடுதல் சம்பளத்தை வாங்குகிறார்.

தயாரிப்பாளர் அதிக சம்பளம் கொடுக்கும் இசையமைப்பாளர் டியூன் போட வெளிநாடுகளுக்கு போகிறார். தயாரிப்பாளர்களால்தான் இந்த குளறுபடிகள் நடக்கின்றன.

சம்பளம் அதிகம் கேட்கும் நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோரை தயாரிப்பாளர்கள் ஒருவருடம் ஒதுக்கி வைத்தாலே போதும். வழிக்கு வந்துவிடுவார்கள். மார்க்கெட்டில் இல்லாமல் போய்விடுவோம் என்று பயந்து கொடுத்த சம்பளத்தை வாங்க ஓடிவருவார்கள்.

கேரளா, ஆந்திராவில் திரைப்படத் துறையினருக்குள் ஒற்றுமை உள்ளது. ஒரு நடிகர் தவறு செய்தால் அவரை துணிச்சலாக ஒதுக்கி வைக்கிறார்கள். பிரச்சினைகள் வந்தாலும் ஒன்றாக போராடுகிறார்கள். இங்கு அந்த நிலைமை இல்லை.

சம்பளம் அதிகம் கேட்பவர்களை 1 வருடம் ஒதுக்குங்கள். இசையமைப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு போய் டியூன் போடுவது பேஷனாகிவிட்டது. அவர்களையும் ஒதுக்கி வையுங்கள். அதன்பிறகு எல்லாம் சரியாக நடக்கும். இப்படி நான் பேசுவதால் எனக்கு நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்கலாம், அதுபற்றி கவலை இல்லை.

ஆங்கில படங்கள் திரையிடும் தியேட்டர்கள் 150 நாட்கள் தமிழ் படங்களையும் திரையிட வேண்டும் என்று முன்பு விதி இருந்தது. இப்போது இல்லை. தமிழ் படங்களை திரையிட வேண்டும் என்று அந்த தியேட்டர்கள் முன்பு போராட வேண்டும்.

சில தியேட்டர்களில் பெரிய நடிகர்கள் படங்கள்தான் திரையிடப்படுகின்றது. சிறிய படங்களை வாங்குவது இல்லை. ஆனால் பெரிய நடிகர்கள் படங்கள் ஓரிரு நாட்களிலேயே முடங்கி விடுகின்றன. சிறிய படங்களை திரையிட மறுக்கும் தியேட்டர் முன்பு சிறுபட தயாரிப்பாளர்கள் போராட்டம் [^] நடத்த வேண்டும் என்றார் ராதாரவி.

கருத்துகள் இல்லை: