சனி, 22 மே, 2010

அரச எதிர்ப்பும், புலி புகழ்பாடலும்தான் கனடாவில் ஊடக சாத்தான்கள் வேதம்

சாத்தான் வேதம் ஓதுகின்றது’ என்றொரு பழமொழி தமிழில் உண்டு. இதன் அர்த்தம், சாத்தான் என்ற மக்களுக்கு தீங்கு செய்யும் பிசாசு திருந்திவிட்டது என்பதாகாது. அது மக்களை ஏமாற்ற வேசம் போடுகிறது என்பதே இதன் உண்மையான அர்த்தமாகும். அதுபோன்ற ஒரு நிலையை, இப்போது கனடாவிலுள்ள சில தமிழ் ஊடகங்களும், தம்மை ஊடகவியலாளர்கள் என்று அழைத்துக் கொள்வோரும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

புலம்பெயர் நாடுகளைப் பொறுத்தவரையில், கனடாவில்தான் மிக அதிகமான இலங்கைத் தமிழர்கள் - அதாவது மூன்று லட்சம் வரையில் வாழ்கின்றனர். அதன் காரணமாக ஏராளமான வியாபார ஸ்தாபனங்களும் உருவாகியுள்ளன. இந்த வியாபார நிறுவனங்களில் கணிசமான கோவில்களும், பத்திரிகைகளும் கூட அடங்கும். தாயகத்தில் தப்பித்தவறி ஒருமுறை தன்னும் பத்திரிகைகளைக் கையில் எடுக்காதவர்கள் கூட, இங்கு பத்திரிகை நடாத்துபவர்களாகவும், ஊடகவியலாளர்களாகவும் பவனி வருகிறார்கள். இங்கு நடாத்தப்படும் வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும் பல ‘அறிஞர்களும்’, ‘ஆய்வாளர்களும்’ செய்து வரும் ‘ஆய்வுகள்’ வரலாற்றில் நாம் முன்னொருபோதும் கண்டு கேட்டு அனுபவித்திருக்காதவை.

‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்றொரு பழமொழியும் தமிழர்களிடம் உண்டு. (முன்னைய காலங்களில் வாழ்ந்த சில தமிழ் விற்பன்னர்கள் தமது அனுபவங்களை பழமொழிகளாகச் சொல்லப்போய், அது இன்றைய ‘பல்துறை விற்பன்னர்களுக்கும்’ கனகச்சிதமாகப் பொருந்துவதற்கு நாம் பொறுப்பல்ல!) அதுபோல கனடாவிலும் பல இலுப்பைப்பூ சர்க்கரைகள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் என்ற தலைப்பாகையைக் கட்டிக்கொண்டு பவனி வருவதை, இங்குள்ள தமிழ் மக்கள் அங்கதச் சுவையுடன் கண்டு களித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்த இலுப்பைப்பூ சர்க்கரைகள் உருவானதிற்கு அடிப்படைக் காரணிகளாக அமைந்தது, இலங்கையில் உருவான யுத்தமும், அதை முன்னின்று நடாத்திய புலிகள் இயக்கமும் தான். கனடாவில் வாழ்கின்ற தமிழ் மக்களில் பெரும்பான்மையானோர் மிகவும் கஸ்டப்பட்டு உழைத்து வாழும் மக்களாவர். சிலர் தாம் வாங்கிய வீடுகளுக்கு மாதாந்த கட்டுப்பணம் செலுத்துவதற்காகவும், தமது குடும்பத்தைப் பராமரிப்பதற்காகவும், தாயகத்தில் உள்ள உறவினாகளுக்கு பணம் அனுப்புவதற்காகவும் இரண்டு, மூன்று வேலைகளைக் கூட செய்துவருகின்றனர். ஆனால் அதேவேளையில்,  எந்தவிதமான வேலைகளிலும் ஈடுபடாத சிலர், தமது வயிறுகளை வளர்ப்பதுடன், மிகவும் விலையுயர்ந்த கார்களையும், வீடுகளையும் வாங்கி வைத்திருக்கின்றனர்.

அவர்களை வரிசைப்படுத்தினால் முதல்வரிசையில் இருப்பவர்கள், புலிகளுக்கு பொதுமக்களிடமிருந்து தயவாகவோ, மிரட்டியோ பணம் பறிக்கும் ஆசாமிகள். இரண்டாவது நிலையில் இருப்பவர்கள் கள்ள கடன் அட்டைகள் மூலம் வங்கிகளில் பணம் சுருட்டும் கில்லாடிகள். இவர்களும் அநேகமாக புலிகளின் ஆதரவும், ஆசீர்வாதமும், ஆலோசனையும் பெற்றவர்கள் தான். அடுத்த நிலையில் இருப்பவர்கள் சுமார் 50 வரையிலான கோவில் நடாத்துபவர்களும், கிட்டத்தட்ட அதேயளவு ஊடகங்கள் நடாத்துபவர்களும் எனச் சொல்லலாம். இவர்களில் கோவில் நடாத்துபவர்கள் அனைவரும் புலி விசுவாசிகள் எனச் சொல்ல முடியாவிட்டாலும், அவர்கள் தமது சுவாமிகளுக்கு கிள்ளித் தெளிக்காவிட்டாலும், புலிச் சுவாமிகளுக்கு அள்ளித் தெளித்தே ஆக வேண்டும்.

ஆனால் ஊடகங்கள் நடாத்துபவர்களின் நோக்கம் மக்களுக்கு உண்மையான தகவல்களைச் சொல்வதல்ல. அவர்களது ஒரே நோக்கம், தமது ஊடகங்களில் இங்குள்ள வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களை பெருந்தொகையில் பெற்றுப் பிரசுரிப்பதின் மூலம், நிறையப் பணம் சம்பாதிப்பதுதான். இவர்களுடைய ஊடகங்களில் தமது விளம்பரங்களைச் செய்துதான் வியாபாரம் பண்ண வேண்டும் என்ற எந்த அவசர தேவையும் இங்குள்ள வர்த்தகர்களுக்கு இல்லை. ஆனால் விளம்பரம் கொடுக்காவிட்டால், தமக்கு ஏதாவது ஒரு வழியில் ஆபத்து வரலாம் என்ற, எச்சரிக்கை உணர்வு வர்த்தகர்களுக்கு எப்பொழுதும் உண்டு. ஏனெனில் இந்த ஊடக மாபியாக்கள் எப்பொழுதும் தம்மை பாசிசப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் போலக் காட்டிக் கொள்வர்.

அவர்களது பத்திரிகைகளின் ஒரே தாரக மந்திரம், இலங்கை அரச எதிர்ப்பும், புலி புகழ்பாடலும்தான். அதோடு கொஞ்சம் காரம் மணம் குணம் சேர்ப்பதற்காக துரோகிகள், ஒட்டுக்குழுக்கள், அரச அடிவருடிகள் பற்றியும் பேசப்படும். இந்தச் சூழ்நிலையில் வர்த்தகர் ஒருவர் இந்த ஊடக ‘தர்மபவான்களுக்கு’ விளம்பரம் கொடுக்க மறுத்தால், அவர் புலிகளின் கோபத்துக்கும், அதன் காரணமாக மறைமுக தண்டனைகளுக்கும் உள்ளாகலாம் என்ற அச்சம் வர்த்தகர்களுக்கு உண்டு. எனவே புலிகள் இலங்கையில் அழிந்துவிட்ட இன்றைய சூழலிலும் கூட, இங்குள்ள வர்த்தகர்களில் பலர் இங்குள்ள புலிகளின் அடிவருடிகளுக்கு பயந்துதான் வாழ்கின்றனர். (வர்த்தகர்களிலும் பலர், தமது வியாபாரத்தை புலிகள் மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் நடாத்துவதுடன், புலிகளின் விசுவாசிகளாகவும் இருப்பது இரகசியமல்ல)

ஆனால் இலங்கை அரசு கடந்த வருடம்(2009) நவம்பர் மாதம் 18ம் திகதியுடன் புலிகளை முற்றுமுழுதாக ஒழித்துக் கட்டியதின் பின்னர், கனடாவில் புலிகளுடன் ஒட்டி நின்று பணம் சம்பாதித்து வந்த பல்வேறு குழுக்களுக்கிடையில் பல குழப்பங்களும், ஊசலாட்டங்களும் ஏற்பட ஆரம்பித்தன. சில வர்த்தகர்கள் நேரடியாக இலங்கை சென்று, அங்கு வடபகுதியில் தமது முதலீடுகளைச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்ததுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களைச் சந்தித்து, தமது நல்லெண்ணத்தினை வெளிப்படுத்தும் முகமாக, இடம்பெயர்;ந்தவர்களின் நலன்களைக் கவனிப்பதற்கென ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தினையும் வழங்கிவிட்டு வந்தனர். இந்த செய்தியைப் படங்களுடன் பிரசுரித்த ‘உதயன்’ என்ற பத்திரிகையின் காரியாலயத்தை புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுவோர் தாக்கி சேதப்படுத்தினர். (உதயன் பத்திரிகையின் உரிமையாளரும், அதன் ஆசிரியருமான ஆர்.என்.லோகேந்திரலிங்கம் கூட புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பதால், இந்த தாக்குதலுக்கான காரணம், இங்குள்ள சில தமிழ் பத்திரிகைகளுக்கிடையிலான வியாபாரப் போட்டியே எனவும் கூறப்படுகிறது)

இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர், கனடாவில் வாழ்கின்ற பெரும்பான்மையான தமிழ் மக்கள் மத்தியில், புலிகள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட முறையில் கட்டியெழுப்பபட்டிருந்த பிம்பம் நொருங்கி விழுந்ததுடன், மக்கள் துணிகரமாகவும், வெளிப்படையாகவும் முன்வந்து, புலிகளை விமர்ச்சிக்க ஆரம்பித்தனர். அதுமாத்திரமின்றி அவர்கள் புலிகளுக்காக தொடர்ந்து பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த, தமிழ் ஊடகங்களையும் கடுமையாக சாட ஆரம்பித்தனர். அதன் காரணமாக இங்குள்ள பெரும்பாலான ஊடகங்கள் தமது தந்திரங்களை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. புலிகளுக்காக நேரடியாக பிரச்சாரம் செய்து, வால் பிடித்து வந்த சில பத்திரிகைகள், தமது வெளியீடுகளை நிறுத்திக் கொண்டன. அதேவேளையில் புலிகளின் கொள்கைகளை முன்னெடுக்கும் நோக்கத்துடன், சில புதிய புதிய பத்திரிகைகள் முளைக்க ஆரம்பித்துள்ளன.

இதில் ஒன்று ‘சுவிஸ் முரளி’ என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ‘நாளை’ என்ற பத்திரிகை. முரளி (நேற்றைய முரளி) சுவிஸ்லாந்தில் புலிகளின் பொறுப்பாளராக இருந்த காலத்தில் செய்த அட்டகாசங்களை, முழுப் புலம்பெயர் தமிழ் சமூகமும் நன்கு அறியும். அதுமாத்திரமல்ல புலம்பெயர் மண்ணில் மாற்றுக் கருத்தை துணிவுடன் முன்வைத்த ஊடகவியலாளர் சபாலிங்கம் பிரான்சில் அவரது வீட்டில் வைத்து, அவரது மனைவியின் முன்னாலேயே புலிக் கொலைகாரர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன், இன்று வரையும் முரளியின் பெயரும், புலம்பெயர் ஜனநாயக சக்திகளால் பிரஸ்தாபிக்கட்டு வருவதும் நின்றபாடாக இல்லை. இவரது பல முறைகேடுகள் குறித்து இவரது போட்டியாளர்கள் புலிகளின் தலைமைக்கு தகவல் கொடுத்ததின் பேரில், அவரை விசாரிப்பதற்காக புலித் தலைமை வன்னிக்கு அழைத்த போது, வருவதாகக்குறி, சிங்கப்பூர்வரை சென்று புலிகளுக்கு தண்ணி காட்டிவிட்டு, கனடாவுக்கு ஓடிவந்தார். புலிகள் அவரைக் கண்டால் தமக்கு தகவல் தரும்படி கூட, இணையத்தளங்களில் விளம்பரம் செய்தனர். ஆனால் முரளி (இன்றைய முரளி) பின்னர் எப்படியோ புலிகளுடன் சமரசம் செய்துகொண்டு, இன்று ‘மாற்றுக் கருத்து’ சொல்வதற்கென ‘நாளை’ பத்திரிகையையும் ஆரம்பித்துவிட்டார், சூழலுக்கேற்ப தமது நிறங்களை மாற்றிக் கொள்ளும் மிருகங்களைப் போல. (எனவே ‘நேற்று இன்று நாளை’ என்பதே இவரது பத்திரிகைக்கு பொருத்தமான பெயர்.)

இன்னொருவர் யஹ்யாகான் அல்லது ஜான் மாஸ்டர் என்பவர். இவர் மே18 என்ற இயக்கம் ஒன்றை ஆரம்பித்து, அதன் சார்பாக ‘வியூகம்’ என்றொரு பத்திரிகையை ஆரம்பித்திருக்கிறார். சில கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றார். புலிகளின் எச்சசொச்சங்கள் சிலரால் தற்பொழுது புனருருவாக்கம் செய்யப்பட்டுள்ள ‘தேடகம்’ என்ற அமைப்பின் அனுசரணையுடன் ஜானின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவரது மே18 இயக்கம் என்பது, மே 18 என்பது முடிவல்ல தொடக்கம் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இதன் அர்த்தம் புலிகள் மே 18 உடன் அழிந்துபோய் விடவில்லை, புலிகளது இயக்கம் தொடர்கிறது என்ற செய்தியை மக்களுக்குச் சொல்ல முயற்சிக்கிறது. இவ்வளவுக்கும் ஜான் தன்னை ஒரு மார்க்சிசவாதியாகக் காட்டிக்கொள்ளவும் முயற்சிக்கிறார். (இவரைப்போலவே இலங்கையிலிருந்து நவ சம சமாஜக்கட்சியும் புதிய ஜனநாயகக்கட்சியும், புலம்பெயர் நாடுகளிலிருந்து இணையத்தளங்களின் ஊடாக கொலைகார புலிகளையும் தமிழ் தேசியத்தையும் ஆதரிப்பவர்களும், தம்மை மார்க்சியவாதிகளாகவும் கூறிக் கொள்கின்ற அவலம் நிகழ்கின்றது. இந்த கட்சிகளினதும் அறிக்கைகளையும் இணையத்தளங்களின் செய்திகளையும் புலி ஊடகங்கள் முந்தியடித்துக்கொண்டு மறுபிரசுரம் செய்கின்றன.)

ஜான் முன்பு அங்கம் வகித்த ‘தீப்பொறி’ இயக்கம் புலிகளால் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டதுடன், அதன் முக்கிய தலைவராக இருந்த கேசவன் அல்லது கோவிந்தன் எனப்படும் நோபேர்ட் புலிகளால் கைதுசெய்யப்பட்டு, இரண்டு வருடங்களாக சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவர். கேசவன் கொலை செய்யப்பட்டதற்கு புலிகளுக்கு நன்றி செலுத்தவோ என்னவோ, ஜான் புலிகளுக்கு சார்பாக மே18 இயக்கத்தை ஆரம்பித்து, வியூகத்தை வெளியிடுகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. ஒரு சாதாரண மனிதனுக்கு உள்ள சூடு சொரணை கூட இல்லாமல், ஜான் போன்றவர்கள் தமது இயக்கத்தையும், அதன் தலைவனையும் அழித்தவனுக்கு ஆலவட்டம் பிடிப்பதை, உதைத்த காலை நக்கும் உவமையுடன்தான் ஒப்பிடத் தோன்றுகிறது. இவர்களது ஊடக முயற்சி எதற்காக, எப்படி இருக்கும் என்பதை நாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.

கனடாவில் செயற்படும் தமிழ் வானொலிகளைப் பற்றி விசேடமாகக் குறிப்பிடுவது அவசியம். இங்கு வெளியாகும் அத்தனை பத்திரிகைகளும் போலவே, வானொலிகளும் புலிப் பாசிசவாதிகளின் ஊது குழல்களாகவே செயற்பட்டு வந்துள்ளன. CMR (Canadian Multicultural Radio)  புலிகளினால் நேரடியாகவே நடாத்தப்படுவது. ஏனைய இரண்டு வானொலிகளைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் ஓரளவு நடுநிலைமையாகச் செயல்பட்டது எனக் கூறக்கூடிய ஒரு வானொலி இளையபாரதி என்பவர் நடாத்துகின்ற கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகும். (இந்த இளைய பாரதியை முன்பொரு தடவை புலிகள் சுட்டுப் படுகாயப்படுத்திய சம்பவமும் நடந்தது.) இவ்வளவுக்கும் இளையபாரதி தீவிரமான ஒரு புலி எதிர்ப்பாளர் அல்ல. எல்லோரையும் போலவே இளையபாரதியும் புலிகளைத் தாஜா செய்தே தனது வானொலி வியாபாரத்தை நடாத்த முயற்சித்தார். ஆனால் கொஞ்சமாவது ஊடக தர்மத்தையும் அவர் கடைப்பிடிக்க முற்பட்ட போது, ஏகப்பிரதிநிதித்துவம் பேசிய பாசிசப் புலிகளால் அவரைச் சகிக்க முடியாமல் போய்விட்டது.

ஆனாலும் இளையபாரதியின் வானொலியில் கனடிய உலகச் செய்திகள் வாசிக்கும் தென்புலோலியூர் கிருஸ்ணலிங்கம் என்பவரைத்தான் எந்த மனித வகையறைக்குள் சேர்ப்பது என்பது தெரியாமல் இருக்கின்றது. கிறிஸ்துவுக்கு முன் கிறிஸ்துவுக்கு பின் என்பது போல, இவரது நிலைப்பாட்டையும் வகுக்க வேண்டியுள்ளது. ஆனாலும் மிகவும் எச்சரிக்கையுடன் தான் அதைச் செய்ய வேண்டும். ஏனெனில் இந்த கிருஸ்ணலிங்கம் புலிகள் கடந்த வருடம் அழிக்கப்படுவதற்கு முன், இளையபாரதியின் வானொலியில் புலிகளுக்காக செய்து வந்த பிரச்சாரம் கொஞ்ச நஞ்சமல்ல. புலிகளை எதிர்த்தவர்களை வாய் கூசாமல் துரோகிகள் என்று தூற்றவும் அவர் தயங்கியது கிடையாது. (இப்பொழுது தான் முன்பு புலிகளுக்காக வக்காலத்து வாங்கியது கிடையாது, அல்லது நிர்ப்பந்தம் காரணமாக அவ்வாறு செய்ய நேர்ந்ததாக கதை அளந்து வருகிறார்) செய்தி வாசிக்கும் போது சொல்லும் திகதியை கூட நவம்பர் மாதம் வந்தால், அவர் அதை நவம்பர் என்று சொல்வதில்லை. மாவீரர் மாதம் என்றுதான் ‘அர்த்தபுஸ்டியுடன்’ சொல்வார். அவ்வளவு தூரம் புலிப் பித்தேறி நின்ற ஒருவர். சென்ற வருடம் வன்னி யுத்த இறுதி நாட்களின் போது, ரொறன்ரோ நகர வீதிகளில் புலி ஆதரவாளர்கள் செய்த அட்டகாசங்களை நேரடியாகச் சென்று , பிரத்தியேகமாக வர்ணணை செய்தவர். புலி ஆதரவாளர்கள் ஒட்டவாவுக்கும், வாஷிங்டனுக்கும் காவடி தூக்கிய போது, தானும் கூடவே சென்று செடில் பிடித்தவர்.

கிருஸ்ணலிங்கம் இப்பொழுது இளையபாரதியின் வானொலியில் தனது கடந்த காலத்து புலிச் சித்து விளையாட்டுகளுக்கு பிராயச்சித்தம் செய்வது போல, ‘எதிர்முனை’ என்றொரு நிகழ்ச்சியை ஆரம்பித்து நடாத்த ஆரம்பித்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் வந்து புலிகளுக்கு எதிரான விமர்சனங்களைக் கொட்டித் தீர்ப்பதற்கும் ஓரளவு ‘ஜனநாயக’ அனுமதி வழங்கியிருக்கிறார். ஆனால் அவர் தான் மட்டும் பழைய நிலைப்பாட்டில் இருந்து மாறாமல், அழுங்குப் பிடியில் தந்திரோபாயமாக இருந்து வருகிறார். அவர் இன்னமும் பிரபாகரனை தேசியத் தலைவர் எனப் பயபக்தியுடன் நேசித்துத்தான் விளிக்கிறார். புலிகளின் தவறான தனிநாட்டுக் கோரிக்கையையோ, அவர்கள் கடந்த காலத்தில் மனித குலத்துக்கு எதிராக நடாத்திய கொடுமைகளையோ பற்றி, அவர் மூச்சும் விடுவதில்லை. புலிகளின் புலம்பெயர் பினாமிகளால் தொடங்கியுள்ள ‘கடல் கடந்த தமிழீழ அரசாங்கம்’ என்ற, அடுத்த மோசடி செப்பிடு வித்தைக்கும் அவர் ஆதரவுதான். அவருடைய பிரச்சினை எல்லாம் கடந்த காலத்தில் கனடாவில் புலிகளின் பெயரால் கோடி கோடியாகப் பணம் சம்பாதித்தவர்கள் மற்றும் போட்டி வானொலிகளில் அரசியல் ஆய்வுகள் செய்பவர்கள் பற்றியது மட்டுமே. இது என்ன வகையான வயிற்றெரிச்சல் என்பதைப் புரிந்து கொள்வதில் அதிகம் சிரமம் இருக்க முடியாது.

இந்த கிருஸ்ணலிங்கம், இன்னொரு ‘ஊடக தர்மத்தையும்’ தனது நிகழ்ச்சியினூடாக நிலைநாட்டி வருகின்றார். அதாவது கருத்துச் சொல்ல வரும் நேயர்கள், தன்மீதோ அல்லது வானொலி உரிமையாளர் இளைபாரதி மீதோ எவ்வித விமர்சனங்களும் முன்வைக்கக்கூடாது என முன் நிபந்தனை விதித்து விடுகிறார். யாராவது அதை மீறி அவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் இல்லாவிட்டாலும், அவர்களது வானொலியைப் பற்றி ஏதாவது சொல்ல முனைந்தால், அவர்களது தொலைபேசித் தொடர்பை உடனும் துண்டித்து விடுகிறார். புலிகளுக்கு எதிரான விமர்சனங்களை யாராவது காட்டமாக முன்வைக்க முயன்றாலும்கூட, அவர்களுக்கும் நேரத்தை காரணம் காட்டி தடை போட்டு விடுவார்.

இது ஒருபுறமிருக்க ‘கீதவாணி’ என்றொரு இன்னொரு வானொலியை ராஜ்குமார் என்பவர் நடாத்தி வருகின்றார். இதை ஒரு வானொலி என்று சொல்வதே அபத்தம். யாழ்ப்பாணத்தில் இரண்டு வீட்டு வேலிகளுக்குள்ளால் கதைக்கப்படும் பாணியிலும், கள்ளுக்கடையில் பேசப்படும் மொழி நடையிலும் இதன் நிகழ்ச்சிகள் அமைவதுண்டு. இந்த வானொலியில் தான், கருணாநிதி, ஆனந்தசங்கரி போன்ற துரோககிள் கொல்லப்பட வேண்டும் என்ற பாணியில் கடந்த வருடம் ஏப்ரல் - மே மாதங்களில் சொல்லாடல்கள் பவனி வந்தன. இந்த வானொலியில் கூட, அண்மைக்காலங்களாக புலிகளுக்கு எதிராக சில விமர்சனங்கள் வருவதைக் காண முடிகிறது.

‘சுடலை ஞானம்’ என்று சிலர் சொல்வது கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன கிருஸ்ணலிங்கமும் சரி, ‘கீதவாணி’ ராஜ்குமாரும் சரி,  பத்திரிகை ஆரம்பித்திருக்கும் சுவிஸ் முரளியும் சரி, கடந்த காலத்தில் புலிகளின் எடுபிடிகளாக இருந்து கொண்டு, மற்றவர்களை துரோகிகள் என்றும், ஒட்டுக்குழுக்கள் என்று தூற்றியதை மறந்து, இனிமேல் யாரையும் ‘துரோகி’ என அழைக்கக்கூடாது என பேசியும், எழுதியும் வரும் விந்தையையும் செய்கிறார்கள். இது உண்மையான மாற்றமா? அல்லது சாத்தான்கள் வேதம் ஓதுவது போன்ற கதையா? ஏன இவர்களை நன்கு அறிந்த மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

இவர்கள் எல்லோரும் தமது கடந்தகால புலி விசுவாச நடவடிக்கைகள் குறித்து யாரும் கேள்வி எழுப்பினால், “என்ன செய்வது, அப்பொழுதெல்லாம் புலிகளால் எங்களுக்கு பயங்கர மிரட்டல் இருந்தது. நாம் எமது எண்ணப்படி நடந்திருந்தால், இன்று உங்களுடன் கதைக்கவே இருந்திருக்கமாட்டோம்” எனவும் நாக்கூசாமல் பொய் சொல்லி மழுப்பி விடுகிறார்கள். இவர்கள் வாழ்வது வன்னியிலல்ல, கனடாவில் என்பதும், இங்கு புலிகள் இவர்களை பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாது என்பது தெரிந்திருந்தும், மேற்கண்டவாறு மக்களின் காதுகளில் பூச்சுற்றுகிறார்கள். இவர்கள் என்னதான் சாக்குப் போக்குகள் சொன்னாலும், புலிகளின் இயக்கத்தில் சேர்ந்து துப்பாக்கி தூக்கி நின்று மக்களுக்கு எதிராக அட்டூழியம் செய்தவாகளுக்கு ஈடாகவே, இந்த ஊடக மாபியாக்களும் கடந்த காலத்தில், கனடிய தமிழ் மக்களுக்கு எதிராக தமது பேனாக்களையும், ஒலிபரப்புக் கருவிகளையும் பயன்படுத்தி வந்துள்ளார்கள் என்பதை வரலாற்றிலிருந்து ஒருபோதும் மறைத்துவிட முடியாது.

அதுவரை இந்த பிழைக்கத் தெரிந்த ‘மனிதர்களை’யிட்டு, மக்கள்தான் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். வேறு வழியில்லை
.

கருத்துகள் இல்லை: