வியாழன், 20 மே, 2010

கே.பி. புலிகள் இயக்கத்தின் அனைத்துச் விபரங்களையும் வழங்கியுள்ளதாக

 சர்வதேச புலிகள் இயக்கத் தலைவர்கள் தீவிரமாக இயங்கிவரும் 12 நாடுகளில் இவ்வாறு புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகளை முறியடிக்கும் இராஜதந்திர மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை அரச பாதுகாப்பு வெளிநாட்டு விவகார மற்றும் புலனாய்வுத் துறையினர் உள்நாட்டிலும் மற்றும் குறித்த வெளிநாடுகளிலும் ஆரம்பித்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பூர்வாங்க சர்வதேச நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக மேற்படி 12 நாடுகளிலும் தீவிரமாகச் செயற்பட்டு வரும் புலிகள் இயக்கத்தினரில் தலைவர்கள்,பிரதிநிதிகள் மற்றும் புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள்,முகவர்கள் பற்றிய தகவல்களையும் அவர்களின் செயற்பாடுகள் பற்றிய விபரங்களையும் சேகரிக்கும் புலனாய்வு நடவடிக்கைகளைத் தற்போது புலனாய்வுத் துறையினர் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், வெளிநாடுகளில் புலிகள் இயக்கத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தமது சொந்தப் பெயரிலன்றி வேறு பெயர்களிலேயே இயங்கி வருவதால் அந்தந்த நாடுகளில் அவர்களின் வசிப்பிடம் முதலாக ஏனைய தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அவர்களின் உண்மையான பெயர் விபரங்களே முக்கியமாகத் தேவைப்படுவதாக புலனாய்வு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,குறித்த வெளிநாடுகளில் புலிகள் இயக்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகச் செயற்படும் தலைவர்கள்,பிரதிநிதிகள் மட்டுமன்றி அங்கு வாழும் தமிழர்களிடமிருந்து நிதிசேகரிப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகளும் மேற்படி 12 நாடுகளிலும் இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ இயங்கி வருவதால் இவர்களை அடையாளம் கண்டு ஒடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் இதனால் இவர்கள் அனைவரையும் பற்றிய உண்மையான பெயர் விபரங்கள் அரசு மேற்கொண்டுள்ள சர்வதேசப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியமானவையெனவும் புலனாய்வு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் முன்னர் புலிகள் இயக்கத்தின் அனைத்துச் சர்வதேச செயற்பாடுகளுக்கும் பொறுப்பான தலைவராக மேற்படி நாடுகளில் இயங்கி வந்தவரும் சுமார் பத்து மாதங்களுக்கு முன்னர் மலேசியாவில் வைத்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையினரால் கைதுசெய்யப்பட்டு இதுவரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருபவருமான கே.பி. எனப்படும் பத்மநாதன் குமரன், அரசின் சர்வதேச புலிகள் இயக்கத்தினருக்கு எதிரான புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான விபரங்களை பாதுகாப்புத்துறைக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முக்கியமாகக் குறித்த 12 நாடுகளிலும் புனைபெயர்களில் இயங்கிவரும் சர்வதேச புலிகள் இயக்கத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நபர்கள் பற்றிய உண்மையான பெயர் விபரங்களையும் அவர்களின் நடமாட்டங்கள்,தொடர்புகள் பற்றிய விபரங்களையும் கே.பி.புலனாய்வுத்துறையினருக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு சர்வதேச ரீதியில் தீவிரமாக இயங்கிவரும் புலிகள் இயக்கத்தினரின் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதே அரசின் புலிகளுக்கு எதிரான இரண்டாவது கட்ட நடவடிக்கையெனவும் இதற்கான இராஜதந்திர மற்றும் புலனாய்வு நடவடிக்கைகளை பாதுகாப்புத்துறை சர்வதேச ரீதியில் ஆரம்பித்துவிட்டதாகவும் அண்மையில் இராணுவ அறிவிப்பாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்திருந்தார்.
இவ்வாறு அரசு சர்வதேசப் புலிகளுக்கு எதிரான பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படும் 12 நாடுகளாவன; ஐக்கிய அமெரிக்கா, கனடா, நோர்வே, சுவீடன், ஜேர்மனி, ஐக்கியராச்சியம், பிரான்ஸ், இத்தாலி, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, டென்மார்க் மற்றும் தென்னாபிரிக்கா ஆகியனவாகும். இந்த நாடுகளிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகங்கள் மற்றும் ஸ்ரீலங்கா நாட்டவர்களின் அமைப்புகள் மற்றும் ஸ்ரீலங்கா சார்ந்த தரப்புகள் மூலம் இவ்வாறு சர்வதேசப் புலிகள் இயக்கத் தலைவர்களின் ஸ்ரீலங்கா அரசுக்கெதிரான அனைத்துச் செயற்பாடுகளும் கே.பி.வழங்கிய தகவல்கள் மற்றும் சர்வதேச புலனாய்வுத் தகவல்களைப் பயன்படுத்தியும் மற்றும் மேற்படி நாடுகளின் அரசாங்கங்களுடனான இராஜதந்திர நடவடிக்கைகள் மூலமும் விரைவில் முறியடிக்கப்படும் என அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையில் குறித்த 12 நாடுகளின் அரசுகளுடன் இறுக்கமான இராஜதந்திர அழுத்தத்தை ஸ்ரீலங்கா அரசு கொடுக்க வேண்டுமெனவும் அவ்வாறே புலனாய்வுத் தகவல்களுக்கேற்ப சர்வதேச புலிகள் இயக்கத் தலைவர்கள்,பிரதிநிதிகளைத் தேடிப்பிடிக்க குறித்த நாடுகளின் பொலிஸ் துறையினருடன் ஸ்ரீலங்கா பாதுகாப்பு புலனாய்வுத்துறையினர் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் இவ்வாறு இந்த இரண்டு முக்கிய சர்வதேச நடவடிக்கைளும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டால் உள்நாட்டில் புலிகள் இயக்கம் முறியடிக்கப்பட்டதுபோலவே வெளிநாடுகளிலும் புலிகள் இயக்கப் பயங்கரவாதத்தை முறியடிப்பது பெரும் கஷ்டமான காரியமாக இருக்கப்போவதில்லை எனவும் பாதுகாப்பு விமர்சனங்கள் தெரிவித்துள்ளன.
திவயின செய்தியும் விமர்சனமும்

கருத்துகள் இல்லை: