புதன், 10 மார்ச், 2010

இலங்கை தொடர்பான மேற்குலகின் அணுகுறைகளில் திடீரென பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புலம் பெயர் மக்கள் மேற்குலகில் நடத்துகின்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு இப்பொழுது மேற்குலகம் வெளிப்படையான ஆதரவை அளிக்கத் தொடங்கியிருக்கிறது.

அதேவேளை இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் இவை ஈடுபட்டுள்ளன.   ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஜீ.எஸ் பி.பிளஸ் வரிச்சலுகையை நிறுத்தப் போவதான அறிவிப்புத் தொடக்கம் பல நெருக்கடிகளையும் அபாய அறிவிப்புகளையும் அழுத்தங்களையும் பிரயோகிக்க இப்போது மேற்குலகம் முயற்சிக்கிறது.   இதில் இப்போது பிரிட்டனும் அமெரிக்காவும் முன்னிலை வகிக்கின்றன.

கடந்த வாரத்தில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க அரசுகளின் உயர் மட்டத்தலைவர்களும் அதிகாரிகளும் புலம்பெயர் ஈழத்தமிழர் போராட்டங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளனர்.  சிலவற்றுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் கருத்தும் கூறியிருக்கின்றனர்.  இது பொதுவாகப் பல தமிழரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

பொதுவாகவே இந்த மாதி நிலைமைகளில் தமிழ் மக்களின் ஊடகங்களும் அரசியலாளர்களும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொள்வது வழமை.   ஆனால், இப்போது இவ்வாறு மேற்குலகம் ஒரு ஆதரவு நிலைக்கு வந்திருப்பதையிட்டு ஒரு சாராரிடம் மகிழ்ச்சி ஆரவாரங்களிருந்தாலும் ஏனையோர் இது குறித்து எச்சரிக்கை அடைந்துள்ளனர்.

உண்மையில் பிராந்திய நாடான இந்தியா தொடக்கம் மேற்குலகம் வரையில் எல்லாமே எப்பொழுதும் இலங்கை விவகாரத்தில் தமிழருக்காகவோ சிங்களவருக்காகவோ மெய்யான அன்போடும் ஆதரவோடும் நடந்து கொள்வதில்லை. இப்பொழுதும் இவை அப்படித்தான் நடந்து கொள்கின்றன.

இலங்கைத் தீவில் தமது செல்வாக்கைப் பிரயோகிப்பதற்காகவும் தமது நலன்களைப் பெற்றுக் கொள்ளவும் பேணவுமே இவை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இப்படி ஆதரவு எதிர் என்ற நிலைகளை எடுத்துக் கொள்கின்றன.   இந்த ஆதரவு, எதிர் நிலை என்பன பிரித்தாளும் தந்திரோபாயத்தின் பாற்பட்டதே. காலனி ஆதிக்கக் காலத்தில் இதை தாராளமாகப் பயன்படுத்தி, ஒப்பீட்டளவில் அமைதிப் பிராந்தியமாக இருந்த இலங்கையில், பிரிவினைக்கும் போருக்கும் வழிவகுத்தவை இந்த மேற்குலகமே. அதிலும் இதில் கூடுதல் பொறுப்பு பிரிட்டனுக்கே உண்டு.
அதே பிரிட்டன் இப்போதும் அதே பிரித்தாளும் தந்திரத்தின் அடிப்படையில் புலம் பெயர்ந்திருக்கின்ற தமிழர்களைப் பயன்படுத்தி இலங்கையில் சிங்களவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதாகக் காட்டிக் கொள்கிறது.    இது சிங்களவருக்கு எரிச்சலை ஊட்டும் ஒரு சங்கதியே.   இதையே இப்போது மேற்குலகம் விரும்புகிறது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஒப்பீட்டளவில் மேற்குக்கு எதிரான சாய்வைக் கொண்டது அல்லது மேற்கின் அச்சுச் சுழற்சியை விட்டு விலக முனைவது. இதை மேற்கினால் ஏற்றுக் கொள்ள முடியாது.   சர்வதேச அளவில் உருவாகி வரும் பொருளாதாரப் போட்டிகள் பெரும் சவால்களை ஒவ்வொரு வல்லரசுகளுக்கும் ஏற்படுத்தி வருகின்றன.     அதிலும் ஆசியப் பிராந்தியத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் மூலப் பொருட்குவிவும் மேற்குலகுக்கு பெரும் அச்சுறுத்தலான விடயமாகும்.
இதில் சீனா, இந்தியா ஆகியவற்றின் எழுச்சி இன்னும் பெரும் அபாயகரமானது என்று மேற்குலகம் சிந்திக்கிறது. அதனால், இலங்கையில் தமது ஆதிபத்தியத்தை இழந்து விடாமலிருப்பதன் மூலம் தமக்கான அச்சுறுத்தலைக் குறைத்துக் கொள்ளலாம் என்று இவை நம்புகின்றன.   இதற்கான போட்டியும் உபாயங்களுமே எப்போதும் நடந்து கொண்டிருப்பன.

போருக்கு இவை ஆதரவளித்ததும் இதற்காகத் தான். போருக்குப் பின்னர் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தை மிரட்டுவது. வரிச்சலுகையை நிறுத்துவதாக எச்சரிப்பது, இப்பொழுது புலம்பெயர் தமிழர்களுக்கு ஆதரவளிப்பது எல்லாமே ஒரு நிகழ்ச்சி நிரலின் வெவ்வெறு அணுகுறைகளும் வடிவங்களுமே தவிர, வேறெதுவுமல்ல. 
கடந்த ஆண்டு வரையில் போருக்கு ஆதரவாக இருந்தவை இந்த நாடுகள்.

பயங்கரவாதத்தை ஒழித்தல் என்ற பெயரில் இன்னொரு பயங்கரவாதத்துக்கும் மனித அழிவுகளுக்கும் ஆதரவழித்தவை இவை.  ஆனால், இப்பொழுது போரில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாகக் கதைக்கின்றன.  போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் சொல்கின்றன.
ஆழமாகச் சிந்தித்தால், இந்த நாடுகளுக்கும் போர்க் குற்றங்களோடு சம்பந்தண்டு.  அதற்கு இவையும் தான் காரணம். இந்த நாடுகளின் நலன், விருப்பு வெறுப்புகளுக்காகவே போர் நடந்தது.  இப்போது தொடரும் அரசியல் நிலைமைகளில் இவற்றுக்கும் பெரும் பங்குண்டு.    இவை எல்லாம் ஒட்டு மொத்தத்தில் இலங்கை வாழ் மக்கள் அனைவரையும் அடிமைப்படுத்தும் சங்கதிகளே.

அதாவது அவர்களை முட்டாள்களாக்கிப் பலவீனப்படுத்தும் முயற்சிகளே. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்களே, அதே போல்தான் இந்த நடவடிக்கைகள் எல்லாமே.
காலனி ஆதிக்கத்தின் போதும் இந்த மேற்குலகம் இலங்கையில் பிரித்தாளும் தந்திரத்தைக் கையாண்டது. இப்போது காலனி ஆதிக்கம் முடிவுற்று அறுபது ஆண்டுகளின் பின்னரும் அது அப்படித்தான் பிரித்தாளும் தந்திரங்களைக் கையாளுகின்றது.

ஆனால், இவ்வாறு வெளிச்சக்திகள் எல்லாம் தங்கள் தங்கள் நலன்களுக்காகவே தமிழ் சிங்கள மக்களைப் பிரித்தாள்கின்றன என்பதை கடந்த அறுபது ஆண்டுகால துயர வரலாற்றைச் சந்தித்திருக்கும் தமிழர்களும் புரிந்து கொள்ளத்தயாரில்லை. நாடு வங்குரோத்து நிலைமைக்குள்ளான பின்னரான இன்றைய சூழலில்கூட இதைப் புரிந்து கொள்ள சிங்களவர்களாலும் முடியவில்லை.

இல்லையென்றால் இன்னும் இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பற்றி சிங்கள அதிகார வர்க்கம் சிந்திக்காமல் இருக்க முடியுமா? அல்லது விமல் வீரவன்ச உணர்ச்சி வசப்பட்டுக் கொண்டு பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை வெள்ளைப் புலி என்று சொல்லிக் கொண்டு பிரித்தானியத் தூதரகத்தின் முன்னால் நின்று கத்துவாரா?

வெளிச் சக்திகள் தங்கள் தங்கள் நாடுகளிலேயே பிற சமூகங்களை ஒடுக்கியே வருகின்றன. அமெரிக்காவில் இன்னும் பூர்வ குடிகள் தங்களுக்கான உரிமைகளுக்காக போராடத்தான் வேண்டியிருக்கிறது. ஒபாமா அதிகாரத்திலிருக்கிறார் என்பதற்காக அங்கே கறுப்பர்கள் எல்லோரும் மிகக் கண்ணியமாக நடத்தப்படுகிறார்கள் என்று அர்த்தமல்ல.
இதைப்போலவே பிரிட்டன் இன்னும் தனக்குள்ளே ஆயிரமாயிரம் குப்பைகளை வைத்துக் கொண்டுதானிருக்கிறது.   இந்தியாவில் தேசிய இனவிவகாரங்கள் பெரும் சிக்கல் நிலையில்தான் இருக்கின்றன.   காஸ்மீர், மிஸோராம், நாகா என்று மாநிலங்கள் பலவும் கொதிநிலையில்தான் இருக்கின்றன.  மத்திய அரசுக்கும் இந்த மாநிலங்களுக்கும் இடையிலான போராட்டங்கள் பல தசாப்தங்களாக நீடித்துக் கொண்டே இருக்கின்றன.
எனவே இவை தங்களுக்குள்ளேயே பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வரவில்லை அது மட்டுமல்ல அப்படிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இவை தயாருமில்லை.  ஆனால், இலங்கை போன்ற நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இவை ஆலோசனை சொல்கின்றன. உள்ளே நுழைந்து சில காரியங்களையும் பார்க்க முனைகின்றன.  இவ்வாறு சொல்வதன் அர்த்தம் இந்த நாடுகளை அப்படியே புறமொதுக்க வேண்டும் என்று கொள்ளப்பட வேண்டியதல்ல. பதிலாக எச்சரிக்கையோடும் இந்த நாடுகளின் நோக்கங்களைப் பற்றிய புரிதலோடும் இவற்றை அணுகவேண்டும் .
மேற்குலகத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறாத சூழலில் இப்போது இன்னொரு வகையால் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அவை முயல்கின்றன.
இங்கே இலங்கையர்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால்,   வல்லரசுகளும் ஆதிக்க நாடுகளும் தங்களின் நலனை முன்னிறுத்தி இவ்வாறே காரியங்களை மேற்கொள்ளும்.    அவை ஈராக்கிலும் தலையிடும். ஆப்கானிலும் படைகளைக் குவிக்கும்.     இலங்கையிலும் கையையோ மூக்கையோ நுழைக்கும். இவற்றின் இந்தமாதிரிப் பொறிகளில் சிக்கி விடாதிருக்க வேண்டுமாயின் நிச்சயமாக இனவாதத்துக்கு ஒரு நிரந்தரமான முற்றுப் புள்ளி அவசியம்.

இடைவெளிகளும் பிரிவினைகளும் இல்லை என்றால் எவரும் உள்நுழைவது கடினம். வேண்டுமானால் அவை வேறு புதிய உபாயங்களுக்கே செல்ல வேண்டும். அப்போதும் வெளிச் சக்திகள் தொடர்பான விழிப்பிருக்குமானால் பொறிகளில் சிக்க வேண்டிய அபாயங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
தவிர, இனப்பிரச்சினை தீர்ந்து விட்டால் நாடு இப்போதையைப் போல எல்லாவற்றுக்காகவும் பிறரில் தங்கியிருக்கவும் வெளியாரிடம் கையேந்தவும் வேண்டியதில்லை.     கடன்பட்டார் நெஞ்சம் எப்போதும் கலங்கியே இருக்கும் என்பார்கள்.  இதைப் புந்து கொண்டால் சரி.
ஆனால் என்னதான் சொன்னாலும் அதிகார வர்க்கம் விளங்கப் போவதில்லை. அது விளங்கினாலும் அதை எல்லாம் ஏற்றுக் கொள்வதுமில்லை. இப்பொழுது தேர்தல் வந்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தைக் கதைப்பதற்குப் பதிலாக இலங்கையைச் சுற்றியிருக்கும் இந்த மாதிரி ஆபத்தான நிலைமைகளைப் பற்றி அரசியற்கட்சிகள் பேசவேண்டும்.      ஏனெனில், இந்த நூற்றாண்டு என்பது உலகளாவிய வர்த்தகப் போட்டியில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக மேற்குலகம் இயங்க வேண்டிய கட்டாயத்திலுள்ள சூழல். இதற்காக இலங்கை போன்ற நாடுகள்தான் பங்குப் போட்டி அல்லது ஆதிக்கப் போட்டிகளில் சிக்கப் போகின்றன.
அதற்கு இடமளித்தால், நிச்சயமாக இதுவரையில் சந்தித்த நெருக்கடிகள், துயரங்களை விடவும் மோசமான துயரங்களையும் அழிவுகளையும் சந்திக்க வேண்டிவரும் . எனவே இந்த அபாயங்கள் வருமுன் காப்போமா அல்லது வந்த பின்னர் சிக்கலில் உழல்வோமா?
என்பதை சிந்திக்கவேண்டும்.
 

கருத்துகள் இல்லை: