செவ்வாய், 9 மார்ச், 2010

புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ்தீவில் வைத்துத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட 78பேர் கிறிஸ்மஸ் தீவருகே வைத்து கடந்த ஒக்டோபர் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் தமது அகதி அந்தஸ்து கோரிக்கை அங்கீகரிக்கப்படும்வரை ஓஷியானிக் விகிங் கப்பலில் இருந்து இறங்குவதில்லை எனத் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவுஸ்திரேலிய அரசாங்கம் 12 கிழமைகளுக்குள் இவர்களுடைய கோரிக்கை மற்றும் மீள்குடியேற்றம் குறித்து கவனம் செலுத்துமென உறுதியளித்திருந்தது. இவ் உறுதிமொழியை அடுத்து இலங்கை அகதிகள் தமது போராட்டத்தைக் கைவிட்டனர். இந்நிலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி பெண்ணின் சகோதரர் கருத்துத் தெரிவிக்கையில், அவர் புலிகளின் நீதிமன்றம் அல்லது அலுவலகத்தில் பணியாற்றியிருக்கலாம். எனினும் அவர் புலி உறுப்பினர் அல்லர் எனத் தெரிவித்துள்ளார். மோதல் முடிவடைவதற்கு முன்னரான காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் புலிகளின் கட்டளைகளுக்குக்கீழ் பணியாற்றுவதைத் தவிர வேறுதெரிவுகள் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளவர்கள் என ஏற்கனவே நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போது ஐந்தாவதாக இப்பெண் அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது இரு பிள்ளைகள், தாய், மற்றும் சகோதரருடன் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கப்பல்மூலம் பயணித்துள்ளார். இவரது கணவர் ஏற்கனவே அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தினால் அனுமதி மறுக்கப்பட்டு கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: