செவ்வாய், 9 மார்ச், 2010

யாழ்ப்பாணத்தில் தூதரகம் திறக்க இந்திய அரசு ஆர்வம்


கொழும்பு: ""யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகத்தை விரைவில் துவக்க இந்தியா ஆர்வமாக உள்ளது,'' என வெளியுறவு செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில், அங்கு இந்திய தூதரக அலுவலகத்தை அமைக்க, இந்திய அரசு ஆர்வமாக உள்ளது. இதுகுறித்து, அதிபர் ராஜபக்ஷேயுடன் பேசிய போது, அவர் சாதகமாக பதிலளித்தார். இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, மேலும் பலப்படும். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களை, மறு குடியமர்த்தும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்தியா உதவும். இலங்கை வடக்கு பகுதி மக்கள், மீண்டும் அமைதியான சூழ்நிலையில் வசிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் அல்ல. இவ்வாறு நிருபமா ராவ் கூறினார். இதற்கிடையே, இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டித்து, கடற்படை முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, நேற்றும் தனது போராட்டத்தை தொடர்ந்தார். அவரது மனைவி அனோமா கூறுகையில், ""வெளிநாட்டில் வசிக்கும் எங்கள் மகளோடு தொலைபேசியில் பேசுவதற்கு, அரசு அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. அவருக்கு இந்த அனுமதி கிடைக்கும் வரை, தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பார்,'' என்றார்

கருத்துகள் இல்லை: