வியாழன், 11 மார்ச், 2010

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே கந்து வட்டிக் கும்பலால் சிபிஎம் செயலாளர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அக்ரகாரம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (37). இவர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருந்து வந்தார். தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில் இவர் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

நேற்று இரவு சுமார் 11 மணியளவில் தனது மொபட்டில் பள்ளிப்பாளையத்தில் இருந்து அக்ரகாரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார்.

ராஜவீதி அருகே வந்த போது இருட்டில் பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை வழிமறித்தது. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அவரை அந்த கும்பல் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் வேலுசாமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

வேலுசாமி இறந்ததை உறுதி செய்து கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. இரவு 11 மணி என்பதால் கூட்டம் குறைந்து காணப்பட்டது. ஆனால் ஆட்கள் நடமாட்டம் இருந்துள்ளது.

இந்த கொலையை பார்த்த மக்கள் ஓட்டம் பிடித்தனர். திறந்து வைத்திருந்த கடைகள் அனைத்தும் அவசர அவசரமாக மூடப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேலுசாமியின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரின் தலை, கழுத்து, கை, கால், நெஞ்சு என உடல் முழுவதும் 12 இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட வேலுசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிப்பாளையம் பகுதியில் கந்துவட்டி கும்பலை சேர்ந்த சிலர் பணத்தை திருப்பி செலுத்த முடியாத ஒரு பெண்ணை கற்பழித்து அதை வீடியோவில் பதிவு செய்து இண்டர்நெட், செல்போனில் பரவ விட்டுள்ளனர் என்று புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் பள்ளிப்பாளையம் பகுதியில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆபாச சி.டி.க்கள் மற்றும் செல்போன் மெமரி கார்டுகளை பறிமுதல் செய்தனர். எனவே அந்த கும்பலை சேர்ந்தவர்கள் இவரை கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலுசாமிக்கு சித்ரா என்ற மனைவியும் 2 மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

வேலுசாமி கொலை செய்யப்பட்டதை அடுத்து பள்ளிப்பாளையம் அக்ரகாரம், ஆவத்திபாளையம் பகுதியில் உள்ள சுமார் 150 தறிபட்டறைகள் அடைக்கப்பட்டுள்ளது.

அங்கு பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: