திங்கள், 28 செப்டம்பர், 2026

RTI இல் சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்தது

 minnambalam.com -Pandeeswari Gurusamy :RTI இல் சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கும் அரசாணையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்து எதிர்ப்புக்கு பிறகு ரத்து செய்தது தவெக அரசின் நிர்வாக திறமை இன்மையை காட்டுகிறது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது RTI-யில் இருந்து சட்டம் ஒழுங்கிற்கு விலக்கு அளிக்கப்பட்டு, மீண்டும் அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, “தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) என்பது நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்வதற்காகக் கொண்டுவரப்பட்ட அவர்களின் அடிப்படை உரிமையாகும். 2005-ஆம் ஆண்டு சட்டப் பிரிவு 24(4)-ன் கீழ் இந்த உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.



பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை சார்ந்த விவகாரங்கள் தேசத்தின் பாதுகாப்புடன் தொடர்புடையவை. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை உளவுத்துறை செயல்படும் விதம் பெரிய அளவில் இல்லை. அரசாணை அல்லது அறிவிப்புகளை வெளியிடுவதும், பின்னர் அதனைத் திரும்பப் பெறுவதும் தவெக ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. இது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.

தவெக அரசின் இத்தகைய போக்கும், தடுமாற்றமான முடிவுகளும் அவர்களின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படையாகக் காட்டுகின்றன” என்று அவர் குற்றம்சாட்டினார்.

அதேபோல் நாளைய பாரத பிரதமர் ஜோசப் விஜய் என்று சூலூர் தமிழக வெற்றிக் கழகத்தினர் போஸ்டர் ஒட்டி இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், “நீங்கள் கூறியதால் ஜோசப் விஜய் என்றே நானும் குறிப்பிடுகிறேன்.. திரு. ஜோசப் அவர்களுக்கு சுவர் போஸ்டர் ஒட்டுவதில் பிரச்சினை இல்லை, அதனை காங்கிரஸ்காரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்திய தேசம் தற்போது உலக அளவில் இருக்கிறது என்றால், அதற்கு தனித்திறமை, முயற்சி, ஈடுபாடு எல்லாம் வேண்டும். அப்படியுள்ள ஒரே தலைவர் பிரதமர் மோடி தான் . அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆக இருந்தாலும் சரி, ரஷ்ய அதிபர் புதின் ஆக இருந்தாலும் சரி, இருவரையும் மகாபலிபுரம் கடற்கரைக்கு அழைத்து வரக்கூடியவர் பிரதமர் நரேந்திர மோடி தான். இதற்கு முன்பு இருந்தவர்கள் எல்லாம் அதனை செய்யவில்லை.

தமிழகத்தில் தெரிந்தோ தெரியாமலோ 108 சீட்டுகளில் ஜெயித்துள்ளார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தினரை குறிப்பிட்டு பேசிய அவர், பிரதமர் பதவிக்கு ஆசைப்படுவது எல்லாம் தவறு கிடையாது. அந்தத் தகுதியும் திறமையும் அவர்களுக்கு உள்ளதா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தினர் எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள்? தற்போது வரை ரூ.2,500 வழங்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாத்துள்ளார்களா? இதுவரை 150-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. அதில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்களே உள்ளார்கள். 200-க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியுள்ளது. கஞ்சா பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. இப்படிப்பட்ட மோசமான நிலைமைக்கு நாடு சென்று கொண்டிருக்கிறது என்று சரமாரியாக விமர்சித்தார்.

கருத்துகள் இல்லை: