![]() |
M R Stalin Gnanam : வஹாபிஸப் பயங்கரவாதத்தின் தோற்றம்
இஸ்லாம் உருவாகி பல நூறு ஆண்டுகளின் பின்னர் ஏற்றப்பட்ட புலப்பெயர்வுகள்,வெளியுலகுத் தொடர்புகள், காலமாற்றங்கள் காரணமாகவும் முஸ்லிம்களின் வாழ்வு மற்றும் வணக்க வழிபாடு போன்றவற்றில் பல்வேறு விடயங்கள் மாற்றம் பெறலாயின. பல முறைமைகள் அல்-குர்ஆன் மற்றும் ஹதீஸ் போன்றவற்றை அச்சொட்டாக பின்பற்றுவது சிக்கலுக்குரியதொன்றாக மாறத்தொடங்கியது.
இதன்காரணமாக இஸ்லாம் மார்க்கம் என்பது குறித்த ஓர் இறுக்கமான அணுகுமுறையொன்றை ஏற்படுத்த வேண்டும் என சில பற்றி மார்க்க அறிஞர்கள் சிந்திக்கத் தலைப்பட்டனர். அத்தகைய அறிஞர்களில் ஒருவர்தான் இமாம் 'முஹம்மத் பின் அப்துல் வஹாப்' என்பவராகும்.
இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றிவந்த பல நாடுகள் துருக்கியை அடிப்படையாகக் கொண்ட உதுமானியப் பேரரசின் கீழ் இருந்துவந்த காலம் அது. 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இன்று சவூதி அரேபியா என்றழைக்கப்படும் பிரதேசத்தில் 1703ஆம் ஆண்டு இமாம் வஹாப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே மார்க்க விடயங்களில் தீவிர பற்றுமிக்கவராக வளர்ந்த இவர் இஸ்லாத்தை புனர் நிர்மாணம் செய்யத்துடித்தார். முகமது நபியும் அவரைத் தொடர்ந்து எத்தனையோ கலீபாக்களும் வளர்த்தெடுத்த இஸ்லாம் மார்க்கமானது சீர்குலைந்து போவதாக அவர் உணர்ந்தார். அதை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நபிகளாரின் காலத்துக்கு முன்பிருந்த நிலைக்கு மீண்டும் அரபிப் பழங்குடிகளின் சென்றுகொண்டிருப்பதை எண்ணிக் கலங்கினார். எனவே புரோகிதங்களை நம்புதல், கபுறுக்களை (நடுகற்கள்)வழிபடுதல், மற்றும் சிலைவணக்கங்கள் போன்றவற்றை மிகக்கடுமையான சட்ட திட்டங்களூடாக துடைத்தெறியவேண்டுமென உறுதிபூண்டார். இத்தகைய தனது கொள்கைகளை பல தூரதேசங்களுக்கும் சென்று பிரச்சாரங்களை மேற்கொள்வதன் ஊடாக பரப்ப முயன்றார்.
இமாம் வாஹாப் கொண்டிருந்த தீவிர சிந்தனைகளுக்கு அன்றைய நஜ்த் (சவூதி-ரியாத்) மாகாணத்திலும் இனக்குழுமத்தினர் சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். இதன்காரணமாக உதுமானிய பேரரசின் கீழுருந்து அப்பகுதியை கருத்தியல் ரீதியாக வென்றெடுப்பதில் இமாம் வஹாப் வெற்றிகண்டார். அதேபோல நஜ்த் மாகாணத்தின் பாரம்பரிய ஆட்சி அதிகாரத்தை கொண்டிருந்த 'சவூத்'அரச குடும்பத்தினர் இமாம் வஹாப்பினது சன்மார்க்க நெறிமுறையை ஆதரித்ததோடு அந்த சிந்தனைகளுக்கு அரசியல் வடிவம்கொடுக்க முன்வந்தனர். வஹாப் கொண்டிருந்த இறுக்கமான நடைமுறைகளும் தீவிர தண்டனைக்கருத்துக்களும் பாலைவன பழங்குடிகள் மீது தம்மிஸ்டம்போல் ஆட்சி செலுத்த வாய்ப்பானதாக அவர்கள் உணர்ந்தனர்.
இதற்காக 1745ஆண்டு அரேபிய தீபகற்பத்தின் குறுநிலமன்னர் பரம்பரையிரைச் சேர்ந்த முகமது பின் செளத் என்பவருக்கும் இமாம் வஹாப் அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம்கூட செய்யப்பட்டுள்ளது. காலம் செல்லச்செல்ல செளத் குடும்பத்தின் ஆட்சியதிகாரம் அரேபிய பிரதேசம் முழுக்க பரவத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாகத்தான் சவுதி அரேபிய வஹாபிசம் 1801 ல் ஈராக் நகரின் ஹர்பலா மீது படையெடுத்து முகமது நபியின் பேரனான இமாம் ஹீசைனின் மக்பராவை (சமாதி) உடைத்தெறிந்தது. 1802 ல் மக்கா மதினாவில் முகமது நபியின் மகளான பாத்திமா நாயகத்தின் மக்பராவை உடைத்தெறிந்தனர். முகமது நபியின் நினைவுத் தலத்தை கூட நிர்முலமாக்க முயன்ற போது உலக சமுதாயத்தின் கடும் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. இதுதான் சவுதி வஹாபிசத்தின் இராணுவமயமான அழித்தொழிப்பு அரசியலின் துவக்கமாக இருந்தது.
உதுமானிய பேரரசின் அழிவு நெருங்கிக் கொண்டிருந்த கட்டத்தில் அதாவது 1924 ஆம் ஆண்டு செளத் குடும்பத்தின் வாரிசான அப்துல் அஸீஸ் புனித மக்காவை கைப்பற்றியதைத் தொடர்ந்து மதீனா உட்பட அரேபிய பிரதேசங்கள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில்தான் 1932ஆம் ஆண்டு செளத் குடும்பத்தின் பெயரையும் அரேபிய மக்களின் அடையாளத்தையும் இணைத்து புதிய 'சவூதி அரேபியா' என்னும் தேசம் பிறந்தது. இனத்தூய்மையின் பெயரிலும் குர் ஆன் கொண்டிருக்கக்கூடிய சமரசமற்ற கருத்துக்களின் பெயரிலும் இந்நாட்டின் சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1300 வருடங்களுக்கு முன்னர் மக்கா வெற்றியின் போது கஃபா புனித ஆலயத்துக்குள் நுழைந்த நபிகளார் அங்கிருந்த சிலைகளை உடைத்தெறிய கட்டளையிட்டார் என்பதை முன்னுதாரணமாகக் கொண்டு சிலை வணக்கம், உருவ வழிபாடுகள் போன்றவற்றுக்கு தயவு தட்சண்யம் இன்றிய தண்டனைகள் தரப்பட்டன.
மதீனாவில் இருந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்றதும் ஆயிரக்கணக்கான மார்க்க அறிஞர்களின் குவிமாட கல்லறைகள் நிரம்பியதுமான ஜன்னத்-அல்-பாக்கி என்றழைக்கப்பட்ட நினைவிடம் அழித்தொழிக்கப்பட்டது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு இஸ்லாமிய உலகம் பெரும் கண்டனம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படியாக கடுமையான ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் மூலம்தான் ஓரிறைக்கோட்பாடு (தவ்ஹீத்) மீளவும் நிலைநிறுத்தப்பட்டது. அரேபிய பழங்குடி சமூகத்தினரின் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கைகளை வெட்டுதல்,கழுத்தைவெட்டுதல், கல்லால் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் அரசின் அங்கீகாரங்களைப் பெற்றன.
இத்தகைய காட்டுமிராண்டித் தனமான இறுக்கமான தண்டனைகளுக்கு வழிவகுத்த பாலைவன பழங்குடி பாரம்பரியங்களுக்கும் ஷரியா ஒழுக்கக்கோவைகளையும் கொண்ட இஸ்லாமிய வழிமுறைமைகளுக்கே பிற்காலத்தில் 'வஹாபிஸம்' என்ற பெயர் உருவானது.
இமாம் வஹாப் அவர்களின் இஸ்லாம் பற்றிய மேற்படி இறுக்கமான வழிமுறைகள் இஸ்லாத்தை சரிவர உணராதவர்களுக்கு அதிர்ச்சி தரும் விடயமாகவும் அல்-குர்ஆன், ஹதீஸ் போன்றவை பற்றிய ஆழ்ந்த அறிவுள்ளோருக்கு குழப்பகரமான விடயமாகவும் இருந்தது. எனவே அச்சமயம் வெளிநாடுகளில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் இந்த வஹாப் என்பவரின் கொள்கை இஸ்லாத்தை தவறாக வழிநடாத்துகின்றது என்றும் போர்க்குரல் எழுப்பினர்.
*சிவ.சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலை நூலிலிருந்து

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக