ஞாயிறு, 27 செப்டம்பர், 2026

நல்லூரில் திலீபனின் உருவச்சிலை அகற்றம் - காவல்துறையினர் விளக்கம்

  hirunews.lk  : யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் போது, உயிர்நீத்த திலீபனின் உருவச்சிலை இன்று (27) காலை காவல்துறையினரால் அகற்றப்பட்டுள்ளது.
உருவச்சிலை அமைந்திருந்த இடத்திற்கு காலை 6.30 அளவில் சுமார் 10 காவல்துறை அதிகாரிகள் வருகை தந்து, சிலையை அகற்றி அங்கிருந்து எடுத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
திலீபனின் நினைவேந்தல் நேற்று(26) முன்னெடுக்கப்பட்ட நிலையிலேயே இன்று காலை குறித்த சிலை அகற்றப்பட்டுள்ளது.



எந்த விதமான முன்னறிவித்தலும் வழங்காமல் 15க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வாகனங்களில் வந்து, பலவந்தமாக திலீபனின் உருவச்சிலையை எடுத்துச் சென்றுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் குற்றம் சாட்டினார்.

அத்துடன், இந்த சம்பவத்தை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும், உயிர்நீத்த திலீபனின் உருவச்சிலை அகற்றியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் இந்த அரசாங்கமும் அவமானப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையயே திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டமைக்கான காரணம் குறித்து சூரியன் செய்தி பிரிவு, காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ வூட்லரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில், ‘எல்லான் படை’ என்ற குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், யுத்த மனநிலையை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளதாகவும், வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஃப்.யூ. வூட்லர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

இதனிடையே, திலீபனின் நினைவேந்தலுக்காக மாநகர சபையினால் நேற்று வரை அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: