BBC News தமிழ் : திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல்லில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு தளங்கள் கொண்ட அந்த மருத்துவமனையின் நேற்றிரவு (டிச. 12) தரைத்தளத்தில் தீப்பற்றியதாகவும் அந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி, மருத்துவமனையின் லிஃப்ட்டில் உள்ளே இருந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட உடனேயே தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த மருத்துவமனையில் சுமார் 50-55 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில், உள்ளே சிக்கியிருந்தவர்களையும் தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.
ஆட்சியர் விளக்கம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.என். பூங்கொடி, நேற்றிரவு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், "மருத்துவமனையில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வேறு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். மீட்கப்பட்டவர்களுள் ஒரு சிலர் மயக்க நிலையில் இருந்தனர். மருத்துவமனைக்குள் தற்போது யாரும் இல்லை" என தெரிவித்தார்.
திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, மருத்துவமனைக்குள் யாரும் தற்போது சிக்கியிருக்கவில்லை என ஆட்சியர் தெரிவித்தார்
எம்எல்ஏ கூறுவது என்ன?
இந்த விபத்து குறித்து பழநி தொகுதி திமுக எம்.எல்.ஏ ஐ.பி. செந்தில்குமார் ஊடகங்களிடம் அளித்த பேட்டியில், "நேற்று (டிச. 12) இரவு 9-9.45 மணியளவில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நிகழ்ந்த உடனேயே மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தீயணைப்பு துறை, மின் துறை என அனைத்துத் தரப்பு அதிகாரிகளும் நிகழ்விடத்திற்கு வந்துவிட்டனர்." என தெரிவித்தார்.
நேற்றிரவு அவர் அளித்த பேட்டியில், மருத்துவமனையிலிருந்து 32 பேர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். மருத்துவமனையின் உள்ளே முழுவதும் புகை மூட்டமாக இருந்த நிலையில், தீயணைப்பு துறையினர் உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டதாக தெரிவித்தார். "எனினும், இது எதிர்பாராத ஒரு விபத்து" என தெரிவித்தார்.
மின்சார துறை அதிகாரிகள் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக ஐ.பி. செந்தில்குமார் தெரிவித்தார். "முழுமையான அறிக்கை வழங்கப்படும் போதுதான் உண்மையான காரணம் தெரியவரும்" என்றும் அவர் கூறினார்.
தீ ஆரம்பத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே பரவியதாகவும் அதனால் ஏற்பட்ட புகைமூட்டத்தினாலேயே பாதிப்புகள் அதிகமானதாகவும் அவர் தெரிவித்தார். "உயிரை காப்பாற்றிக்கொண்டு ஓடியபோது அதனாலும் சிலருக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளன" என்றார் ஐ.பி. செந்தில்குமார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக