கலைஞர் செய்திகள் = Lenin : தமிழ்நாடு - ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்துவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.
இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.
இதன் காரணமாக இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்புகள் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஆய்வு செய்ய ஒன்றிய அரசு, ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தது. இந்த குழுவிற்கு காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்களை அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் வழங்கியது. இந்நிலையில் இந்த ஆய்வு குழுவின் அறிக்கைக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்துவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"கொடூரமான ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஜனநாயத்திற்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்துவிடும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த கொடூர தாக்குதலை முழுபலத்துடன் எதிர்ப்போம்! போராடி தடுத்து நிறுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக