சனி, 14 டிசம்பர், 2024

வெளிநாடுகளுக்கு பறக்கும் இலங்கையர்கள் - முதல் 2 இடங்களில் முஸ்லிம் நாடுகள் - 3 ஆவது இஸ்ரேல்

  jaffnamuslim :  2024 ஆம் ஆண்டில், வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இன்றைய (13.12.2024) நிலவரப்படி, 300,162 பேராக பதிவாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது இது இரண்டாவது முறையாகும், இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டில் 310,948 தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 122,358 பெண் தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். குறித்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்குச் சென்ற மொத்த நபர்களில் 40.7 வீதமான பெண்களும், 60 வீதமான ஆண் தொழிலாளர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.



இந்தக் காலப்பகுதியில் 184,140 பேர் சொந்தமாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர், மேலும் 116,022 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் ஊடாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

பெரும்பாலான இலங்கையர்கள் 73,995 பேர் குவைத்துக்கு(kuwait) வேலைக்காக சென்றுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு(uae) 49,499 பேர் சென்று இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

பணியகத்தின் புள்ளிவிபரங்களின்படி,  முக்கியமான விடயம் என்னவெனில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கையர்கள் தென் கொரியா, இஸ்ரேல், ருமேனியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்வதில் அதிக நாட்டம் காட்டுகின்றனர்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு தென் கொரியாவில்(south korea) 7,002 இலங்கையர்களும், இஸ்ரேலில்(israel) 9,211 பேரும், ருமேனியாவில் (rumania)10,274 பேரும், ஜப்பானில்(japan) வேலை வாய்ப்புக்காக 8,251 பேரும் வெளியேறியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள், வேலைக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை 311,000ஐ தாண்டும் என பணியகம் எதிர்பார்க்கிறது.

வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட அந்நியச் செலாவணியின் அளவும் இந்த காலகட்டத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது, அதன்படி, நவம்பர் 2024 வரை நாடு 5961.6 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை: