jaffnamuslim.com : 300 தங்கப்பவனுக்கும் மேற்பட்ட நகையையும் சுமார் 60 லட்சம் ரூபாய் பணத்தினையும் திருடிய திருடனை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஷ் அத்தியட்சகர் ஜருள் தெரிவித்துள்ளார்.
அவரது அலுவலகத்தில் இன்றையதினம் -09- நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம், கோப்பாய், சுன்னாகம், மாணிப்பாய் போன்ற பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2022 ஆம் ஆண்டிலிருந்து, வீடுகளை உடைத்து நகை மற்றும் பணத்தினை திருடிச் செல்லும் திருடன் குறித்து நாங்கள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு இருந்தோம்.
இது தொடர்பான தகவல்களை திரட்டி, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக, வடக்கு மாகாண பிரதீப் பொலிஸ்மா அதிபர் திலக்சீய தனபால மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா காளிங்க ஜயசிங்க ஆகியோர் எனது தலைமையிலான குழு ஒன்றினை நியமித்தனர்.
அந்த வகையில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், மற்றும் யாழ். பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு அதிகாரிகளை நியமித்து இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து கணினி மூலமான வரைபடத்தை தயாரித்து அது தொடர்பாக விசாரணை செய்து குறித்த திருடனை கொழும்பில் வைத்து கைது செய்தோம்.
இவர் சுமார் 2022ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை சுமார் 35க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து களவுகளை மேற்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் இருவருடன் இணைந்து திருடி வந்த இவர், பின்னர் தனியாக துவிச்சக்கர வண்டியில் சென்று திருட்டுகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இவர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து திருட்டுக்களை மேற்கொண்டு விட்டு அந்த நகைகளை கொழும்பில் விற்பனை செய்து வந்துள்ளார். அந்தவகையில் அவருடன் மேலும் மூன்று சந்தேகநபர்களையும் கைது செய்து தடுப்பில் வைத்திருக்கின்றோம்.
இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட 12 திருட்டு சம்பவங்கள் குறித்து இவர் தகவல் வழங்கியுள்ளார்.
அதுபோல கோப்பாய் பொலிஸ் பிரிவிலும் 10க்கு மேற்பட்ட களவுகள் குறித்து தகவல் தந்துள்ளார். இறுதியாக மேற்கொண்ட இரண்டு திருட்டுகளும் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக காணப்படுகின்றது.
அந்தவகையில் இவர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட களவுகளின் அடிப்படையில் 66 மில்லியன் பெறுமதியான உடைமைகளை திருடியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற மக்கள் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம்பெறும்போது, திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை எமக்கு சரியாக வழங்கும் பட்சத்தில் எங்களால் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக