மாலை மலர்: 2011 இல் ஒடுக்கப்பட்ட உள்நாட்டு போர் ஒரு வாரத்திற்கு முன் மீண்டும் புத்துயிர் பெற்றது. வடக்கு அலெப்போவை கடந்த வாரம் சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் நடத்திய தாக்குதல்களில் ஆசாத்தின் படைகள் திணறியதால் ஹமா, தாரா, ஹோம்ஸ் ஆகிய நகரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ந்தன.
கடைசியாக இன்று தலைநகர் டமாஸ்கஸ் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பைக் கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர்.
அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்து வந்தது.
இந்நிலையில் டமாஸ்கஸ் உட்பட நாடு முழுவதும் மக்கள் வீதிகளில் திரண்டு 50 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டதால் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கிளர்ச்சியாளர்களுடன் மக்கள் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
கொடுங்கோலன் அசாத் வெளியேற்றப்பட்டதாக அறிவித்த கிளர்ச்சியாளர்கள், டமாஸ்கஸ் நகருக்கு நாங்கள் சுதந்திரத்தை அறிவிக்கிறோம் என்று முழங்கினர்.
இன்று அதிகாலை சூரிய உதயத்தின்போது வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கிளர்ச்சியாளர்கள் கொண்டாடும் படங்களை அந்நாட்டின் AFP டிவி வெளியிட்டுள்ளது.
டமாஸ்கஸ் அதிபர் மாளிகை கைவிடப்பட்ட நிலையில் மாளிகைக்குள் கிளர்ச்சியாளர்கள் சுற்றி வரும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.
மாளிகையில் உள்ள அசாத்தின் தந்தை ஹபீஸின் சிலையை கிளர்ச்சியாளர்கள் இடித்துத் தள்ளினர். முன்னதாக இலங்கை மற்றும் வங்கதேசத்திலும் ஆட்சி கவிழ்ந்த பின் அதிபர் மாளிகை சூறையாடப்பட்டது ஒப்புநோக்கத்தக்கது.
AFP தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஒரு டமாஸ்கஸ் வாசி, "நான் இந்த தருணத்தில் வாழ்கிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை என்று கண்ணீர் மல்க டமாஸ்கஸ் குடியிருப்பு வாசி தெரிவித்தார்.
நாங்கள் இந்த நாளுக்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம், நாங்கள் சிரியாவிற்கு ஒரு புதிய வரலாற்றைத் தொடங்குகிறோம் என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் தாக்குதல் தொடங்கியதிலிருந்து, 111 பொதுமக்கள் உட்பட குறைந்தது 826 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறையால் 370,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக