ஞாயிறு, 26 ஜூன், 2022

கணினி வழி வாடகை வசூல் மட்டும் ரூ.200 கோடி! -இந்து சமய அறநிலையத்துறை சாதனை!

கலைஞர் செய்திகள்  - ரேஷிமா  : இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கனிணி வழி வாடகை வசூலில் இதுவரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் கணினி வழியாக வாடகை வசூல் முறையில் இதுவரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி, கணினி வழியாக கோவில்களின் வாடகைதாரர்களிடம் இருந்து வாடகை தொகையினை செலுத்தும் வசதி தொடங்கி வைக்கப்பட்டது.
நவம்பர் 1 ஆம் தேதி முதல் இணைய வழி மூலம் ரசீது வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அசையா சொத்துக்களுக்கு பசலி ஆண்டு முறையில் வாடகை, குத்தகை கணக்கிடப்பட்டு வசூல் செய்யப்பட்டு வருகிறது.
கணினி வழி வாடகை வசூல் மட்டும் ரூ.200 கோடி! -இந்து சமய அறநிலையத்துறை சாதனை!

நடப்பு பசலி ஆண்டான 1431, 1.7.2021 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பசலி ஆண்டு 30.6.2022 அன்றுடன் முடிவடைகிறது. இந்த பசலியில் துறை நடவடிக்கையால் 1.7.2021 முதல் நாளது தேதி வரை ரூ.200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் மண்டல வாரியாக இணை ஆணையர் சென்னை-1 ரூ.30.1 கோடியும், இணை ஆணையர் சென்னை 2 ரூ.23.91 கோடியும், இணை ஆணையர் திருச்சிராப்பள்ளி ரூ. 16.31 கோடியும், இணை ஆணையர் காஞ்சிபுரம் ரூ. 13.55 கோடியும், இணை ஆணையர் நாகப்பட்டினம் ரூ.13.23 கோடியும், இணை ஆணையர் மயிலாடுதுறை ரூ.12.33 கோடியும், இணை ஆணையர் தூத்துக்குடி ரூ.10.17 கோடியும், இணை ஆணையர் மதுரை ரூ. 10.1 கோடியும், இணை ஆணையர் திண்டுக்கல் ரூ. 9.71 கோடியும், இணை ஆணையர் திருநெல்வேலி ரூ.8.28 கோடியும் என மண்டல வாரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
கணினி வழி வாடகை வசூல் மட்டும் ரூ.200 கோடி! -இந்து சமய அறநிலையத்துறை சாதனை!

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் அதிக வசூல் செய்யப்பட்ட 10 முக்கியமான கோவில்களான சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ரூ.6.29 கோடியும், பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரூ.4.42 கோடியும், திருச்சி, மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ரூ.4.33 கோடியும், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ரூ. 3.05 கோடியும், சென்னை, பூங்கா நகர் ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் ரூ.2.99 கோடியும், திருச்சி பஞ்சவர்ணசுவாமி கோவிலில் ரூ.2.47 கோடியும், சென்னை பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில் ரூ.2.42 கோடியும், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் ரூ.2.32 கோடியும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.2.04 கோடியும், திருநெல்வேலி நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி கோவிலில் ரூ.1.75 கோடியும் இதுவரை வசூலிக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதல்களாலும், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் தீவிர தொடர் நடவடிக்கைகளாலும் வாடகை, குத்தகை மற்றும் நிலுவைத் தொகை வசூல் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவில் திருப்பணிகள், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள், குத்தகைதாரர்கள் முறையான வாடகை தொகையையும், நிலுவை தொகையையும் செலுத்தி கோவில் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: