திங்கள், 27 ஜூன், 2022

கைகோர்க்கும் ஓபிஎஸ் - சசிகலா? தேனியில் முக்கிய முடிவு

zeenews.india.com -  Karthikeyan  : அதிமுகவை மீட்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் ஓபிஎஸ் மற்றும் சசிகலா ஆகியோர் சுற்றுப்பயணத்தின் முடிவில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் தலைமைப் பொறுப்புக்கான மோதல் உட்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பொதுச்செயலாளராக ஆக வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில மாதங்களாக திட்டமிட்டு தனது காய்களை நகர்த்திக் கொண்டு வந்தார். கிளை கழகம் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை பெரும்பான்மையோரை சிறப்பாக கவனித்து தன் வழிக்கு கொண்டு வந்துவிட்டார். இது ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரிந்திருந்தாலும், வழக்கம்போல் அமைதியாக இருந்துவிட்டார். பொதுச்செயலாளருக்கு தான் எடப்பாடி பழனிசாமி அடிபோடுகிறார் என்பது மூன்று முறை முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்துக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

அதிமுக அடிமட்ட தொண்டனாக இருந்து ஜெயலலிதாவால் முதலமைச்சராக அடையாளம் காணப்பட்டவர் என்ற ஒற்றை அடையாளத்தை தவிர, தனக்கு கட்சியில் பெரும்பான்மையோரின் ஆதரவில்லை என்பதை அண்மையில் நடந்த பொதுக்குழவில் தான் உணர்ந்திருக்கிறார் பன்னீர்செல்வம். அதன்பிறகே, தனக்கான இருப்பைத் தக்க வைக்க வேகவேகமாக நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இடைக்கால நிவாரணம் பெற்று, டெல்லி சென்று மேலிடத்தை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். இவையெல்லாம் அவருக்கான ஆதரவை கட்சியில் உருவாக்கிவிடுமா? என்றால் இல்லை. இதை பன்னீர்செல்வமும் உணர்ந்தே இருக்கிறார். அதனால் தான் டெல்லி சென்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தவுடன், சென்னை திரும்பிய அவர், கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் நேரடியாக சந்திக்கும் முடிவை எடுத்திருக்கிறார்.

அதனுடைய முதல் புள்ளியாக மதுரையில் இருந்து தேனி செல்லும் வரை கட்சி நிர்வாகிகளை சந்தித்த அவர், தனக்கு கட்சியில் ஆதரவு இருக்கிறது என்பதை காட்டும் முயற்சியை தொடங்கி வைத்திருக்கிறார். மறுபுறம் ஜெயலலிதாவின் தோழியாக, அதிமுகவில் அதிகாரத்தின் மையமாக கடந்த தசாப்தத்தில் திகழ்ந்த சசிகலாவும் சென்னையில் தன்னுடைய சுற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார். இருவருமே அதிமுகவில் தங்களுடைய இருப்பை காட்ட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியிருப்பதால், இரண்டு சுற்றுப் பயணமும் ஏதேனும் ஒரு புள்ளியில் சந்தித்து கைகுலுக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை: