வியாழன், 30 ஜூன், 2022

மகாராஷ்ட்ரா புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.. தொடர்ந்து சறுக்கிய உத்தவ் தாக்கரே

Vigneshkumar -  Oneindia Tamil News மும்பை: மகாராஷ்டிராவில் ஒரு வாரத்திற்கும் மேலாக நீட்டித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், இது தாக்கரே தரப்பிற்கு மகிழ்ச்சியானதாக இல்லை.
மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நிகழ்ந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், உத்தவ் தாக்கரே விரும்பியது போல இந்த பஞ்சாயத்து முடியவில்லை.
கடந்த ஒரு வாரக் காலமாகவே ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் சூரத், கவுகாத்தி, கோவா என ஒவ்வொரு ஊராகச் சுற்றியே வந்தனர்.
இந்தச் சூழலில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டார்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றமும் தலையிட மறுத்துவிடவே, உத்தவ் தாக்கரே நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து இன்றைய தினம் ஷிண்டே ஆதரவு எம்எல்ஏக்கள் உடன் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் முதல்வராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் மெகா ட்விஸ்டாக ஏக்நாத் ஷிண்டே அடுத்து முதல்வராகப் பதவியேற்பார் என்று அறிவித்தார் தேவேந்திர பட்னாவிஸ்.

உண்மையில் இப்படியொரு அறிவிப்பு வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் ஷிண்டே துணை முதல்வராகவும் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.. முன்னதாக ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், ஃபட்னாவிஸை நேரில் சந்தித்து புதிய அமைச்சரவை குறித்து விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்தார். ஷிண்டே முதல்வராவார் என்பதற்கு அப்போது எந்தவொரு அறிகுறியும் இல்லை. இந்தச் சூழலில் தான் பட்னாவிஸ், திடீரென தான் அரசின் ஒரு அங்கமாக இருக்க மாட்டேன் எனத் தடாலடியாக அறிவித்தார்.

பட்னாவிஸுக்கு பெரிய மனது இருப்பதாகவும் அதனால் தான் 120 எம்எல்ஏக்களை வைத்து இருந்த போதிலும், அவர் முதல்வர் பதவியைக் கோரவில்லை என்று ஷிண்டே தெரிவித்தார். ஷிண்டே இப்போது மகாராஷ்டிரா முதல்வராகப் பதவி ஏற்று உள்ள நிலையில், விரைவில் மற்ற அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் என கூறப்படுகிறது. ஒரு வாரம் நீடித்த இந்த படலத்தைக் கச்சிதமாக முடித்துள்ளார் ஷிண்டே.  

தான் என்ன செய்ய வேண்டும் என்பது ஷிண்டேவுக்கு தெளிவாகத் தெரிந்து இருந்தது. அதனால் தான் முதலில் சூரத், அங்கிருந்து அசாம், அதன் பின்னர் கவுகாத்தி என ஒவ்வொரு இடத்திற்கும் சரியாக அழைத்துச் சென்றார். அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் சிவசேனா பக்கம் வந்த போதிலும், எவ்வித பரபரப்பும் இல்லாமல் நிலைமையை கூலாக கையாண்டார். கட்சி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக உறுதியாக நம்பிய தாக்கரேவுக்கு முதலில் கோட்டைவிட்டது இங்குதான்.

அடுத்து ஷிண்டே தரப்பிடம் 16 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதாகக் கூறினர். மேலும், உடனடியாக சிவசேனா தலைமையிடத்திற்குத் திரும்பவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம் என்று தாக்கரே தரப்பு எச்சரிக்கை விடுத்த போதிலும், அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இறுதியில் மொத்த மொத்தம் இருந்த 55 சிவசேனா எம்எல்ஏக்களில் சுமார் 39 பேர் ஷிண்டே ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். அடுத்த ஏமாற்றம் இது!

சிவசேனா தலைவர் மீது தங்களுக்குக் கோபம் இல்லை என்று தொடர்ந்து கூறிய ஷிண்டே தரப்பு, தங்கள் இந்துத்துவ கொள்கை கைவிடப்படுவதாகவும் 2019இல் என்சிபி- காங்கிரஸ் இடையே அமைந்தது முரணான கூட்டணி என்றும் கூறியது. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அப்போது தான் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தால் மற்றொரு சிவசேனா நபர் முதல்வராக வருவார் என்பதற்கு என்ன நிச்சயம் எனக் கேட்டார் உத்தவ் தாக்கரே.

ஏனென்றால், அந்த சமயத்தில் அவர் உட்பட அனைவரும் பட்னாவிஸே முதல்வர் பதவியை ஏற்பார் என எதிர்பார்த்தார்கள். இந்தச் சூழலில் தான் உத்தவ் தாக்கரேவின் கருத்திற்குப் பதிலடி கொடுத்து, சிவசேனா தொண்டர்களைச் சமாதானப்படுத்தும் வகையில் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி கொடுக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இதன் மூலம் மூன்றாவது முறையாக தாக்கரே தரப்பு கோட்டைவிட்டுள்ளத

கருத்துகள் இல்லை: