சனி, 25 ஜூன், 2022

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை ரத்து - உலக தலைவர்கள் கண்டனம்!

தினத்தந்தி  : வாஷிங்டன், அமெரிக்காவில் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை. அது அரசியலமைப்பு உரிமை என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு 1973-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு பல்வேறு மாகாணங்களில் சட்டவடிவில் உள்ளது.
இந்நிலையில், 15 வாரத்திற்கு பிந்தைய கருவை கலைப்பதை தடை விதித்து மிசிசிப்பி மகாணம் கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  கடந்த டிசம்பர் மாதம் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட சட்ட உரிமை என்ற முந்தைய தீர்ப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம்  அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இதன் மூலம் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த கருக்கலைப்பு சட்ட உரிமை நீக்கப்பட்டுள்ளது. கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவின் கருக்கலைப்பு சட்ட தீர்ப்புக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் கூறுகையில்,
"கருக்கலைப்புக்கு தடை விதிப்பது, கருக்கலைப்பு செய்வதை எந்த விதத்திலும் தடுக்கப் போவதில்லை. இந்த தீர்ப்பு ஆபத்தை தான் விளைவிக்கும்" என்று தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரியேசஸ் கூறும்போது, "பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. பெண்களின் உரிமைகளை அமெரிக்கா பாதுகாக்கும் என்று நினைத்திருந்தேன்" என்று தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தலைவர் மிச்செல்லா பேச்லெட் கூறியதாவது, "அமெரிக்க நீதிமன்றத்தின்  தீர்ப்பு, ஒரு பெரிய பின்னடைவு. பெண்களின் மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்திற்கு பெரும் அடியாகும்" என்று தெரிவித்தார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறியதாவது, "கருக்கலைப்பு என்பது பெண்களுக்கான அடிப்படை உரிமைகளுள் ஒன்றாகும். நிச்சயம் அவை பாதுகாக்கப்பட வேண்டும். அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தால் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ள பெண்கள் பக்கத்தில் நானிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

 பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசும்போது, "இது பெரிய, பின்னோக்கிய நகர்வு என்று நான் நினைக்கிறேன். பெண்கள் தேர்வு செய்வதற்கு முழு உரிமை உண்டு என்று நான் எப்போதும் நம்புகிறேன். அந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று தெரிவித்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், "இந்த தீர்ப்பு கொடுமையானது. அரசாங்கமோ, அரசியல்வாதியோ அல்லது ஆணோ ஒரு பெண்ணிடம் அவர் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று கூறக்கூடாது. உங்கள் தேர்வு உரிமைக்காக நாங்கள் எப்போதும் எழுந்து நிற்போம் என்பதை கனடாவில் உள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: