வியாழன், 12 நவம்பர், 2020

கணவன் கொலை - மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது |

minnambalam.com :சென்னை யானைகவுனி பகுதியில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக மருமகளே கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

யானைக்கவுனி பகுதியில் வசித்து வந்தவர் தலில் சந்த் (74). இவர் மனைவி புஷ்பா ராய் (70). இவர்களுக்கு ஷீத்தல் என்ற மகனும் பிங்கி என்ற மகளும் உள்ளனர். அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளனர்.

தலில் சந்த்தின் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம் பிரோகி ஜவான் ஆகும். ஷீத்தலுக்கும் மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த ஜெயமாலா என்பவருக்கும் திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இரு ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து ஜெயமாலா புனேவுக்கே சென்றுவிட்டார்.

விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐந்து லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயமாலா அவரது உறவினர்களுடன் வந்து அடிக்கடி சண்டை போடுவதும் வழக்கமாக இருந்துள்ளது.

இந்நிலையில்தான் நேற்று இரவு தலில் சந்த், புஷ்பா ராய், ஷீத்தல் மூவரும் வீட்டினுள் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். தலில் சந்த் மகள் பேசின் பிரிட்ஜ் ரோடு பகுதியில் வசித்து வருகிறார். தினசரி வந்து பெற்றோரைப் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று மாலை 7 மணி அளவில் வழக்கம் போல் வந்து பார்த்தபோதுதான் மூவரும் படுக்கையறையில் இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.இதுகுறித்து பிங்கி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு யானைகவுனி போலீசார் வந்து விசாரணை நடத்தியுள்ளனர். காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலும் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார். தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேமிக்கப்பட்டுள்ளது.

5 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கச் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்ட நிலையில், தனிப்படை போலீஸர் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.

இதில் தலில் சந்த் வீட்டுக்குள், ஒரு பெண் உட்பட ஆறு பேர் நுழைவதும், சில மணி நேரத்திற்குப் பிறகு வெளியே செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது. இதுதொடர்பாக விசாரித்ததில், ஜெயமாலா தனது இரு சகோதரர்கள் மற்றும் சிலருடன் தலில் சந்த் வீட்டுக்கு வந்து சென்றதாகவும், போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால் ஜெயமாலாவைத் தேடி தனிப்படை புனே விரைந்துள்ளது. விரைவில் கொலையாளிகளைப் பிடித்துவிடுவோம் என்று போலீஸார் கூறுகின்றனர்.

யானைகவுனியில் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்வது இது முதல்முறையல்ல. 2011 ஆம் ஆண்டு ஆஷிஷ் ஷர்மா என்பவர் யானைகவுனி தங்கும் விடுதியில் தங்கியிருந்த போது, அவரது உறவினராலே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். 2016 ஆம் ஆண்டு சவுகார்பேட்டை டிராவல்ஸ் அதிபர் பாபு சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை: