திங்கள், 9 நவம்பர், 2020

செய்தியாளர் படுகொலை: பாதுகாப்பு சட்டம் இயற்ற ஆர்ப்பாட்டம்.. தமிழன் தொலைக்காட்சி ஞானராஜ் ஏசுதாஸ்..

minnambalam : காஞ்சிபுரம் அருகே தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட பழைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானராஜ் ஏசுதாஸ். இவரது மகன் மோசஸ். சில ஆண்டுகளாக தமிழன் தொலைக்காட்சியில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு பழைய நல்லூர் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாகச் செய்தி சேகரித்துள்ளார். அதோடு அவர் வசிக்கும் பகுதியில் நடக்கும் கஞ்சா வியாபாரத்தையும், சமூக அவலத்தையும் பற்றி செய்தி வெளியிட்டுள்ளார். இந்த சூழலில் அவருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து அவரது தந்தை அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மோசஸ் குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், நேற்று இரவு 10. 30 மணி அளவில், மோசஸ் வீட்டு முன்பே அவரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி தாக்கியுள்ளது. மோசஸின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்த அவரது தந்தை ரத்தவெள்ளத்தில் கிடந்த மகனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மோசஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மோசஸ் இறப்பு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் மோசஸ் கொலை தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ரவுடி நவமணியை தேடி வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், மோசஸ் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் முதல்வர் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மோசஸுக்கு உரிய நீதி கிடைக்காவிட்டால் தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிக்கையாளர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் தாம்பரத்தில் இன்று, பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், மோசஸின் இறப்பு பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேரிடியாய் விழுந்துள்ளது. பத்திரிக்கையாளர்களைத் தாக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு அரசு ஊழியர்களைப் பாதுகாக்கத் தமிழகத்திலும் இந்திய அளவிலும் தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. அதுபோன்று பத்திரிக்கையாளர்களுக்குத் தனி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மோசஸ் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், “ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனப் போற்றப்பட்டுவரும் பத்திரிகை - ஊடகங்களின் கருத்துரிமையின் கழுத்தில், அரசு கேபிள் என்ற கயிறு சுற்றப்பட்டு, ஆள்வோரின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஊடகங்களை நெரிப்பதும் நெருக்கடி தருவதும், ஆதரவாகக் குரல் கொடுத்தால் கயிறு தளர்வதும் கண்ஜாடை காட்டுவதும், தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

மோசஸுக்கு வந்த கொலை மிரட்டல் குறித்து அவரது தந்தை காவல்நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இரவு நேரத்தில் அவரை அலைபேசியில் அழைத்து, வீட்டை விட்டு வெளியே வரச்செய்து, பேசிக்கொண்டிருக்கும்போதே அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள். மோசஸின் அலறல் சப்தம் கேட்டு அவரது தந்தை வெளியே வந்தபோது, சமூக விரோதக் கும்பல் ஓடிவிட்டது. குற்றுயிராக இருந்த மோசஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பச்சைப் படுகொலைக்கு எனது மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்; இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கஞ்சா வியாபாரம் செய்வது உள்ளிட்ட சமூக விரோதக் கும்பல்களுக்கு, எடப்பாடி பழனிசாமி அதிமுக அரசும், அதன் காவல்துறையும் பாதுகாப்பளிப்பதும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பதும், ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடியாகும். பத்திரிகைச் சுதந்திரம் காப்பாற்றப்பட திமுக என்றென்றும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

கருத்துகள் இல்லை: