வியாழன், 12 நவம்பர், 2020

துணை முதல்வர் தூண்டில்: தேஜஸ்வியின் ஆட்சி முயற்சி!

minnambalam :  பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான 122 இடங்களைக் கடந்து 125 இடங்களைப் பெற்றுள்ளது.
துணை முதல்வர் தூண்டில்: தேஜஸ்வியின் ஆட்சி முயற்சி!

ஆனாலும் அந்தக் கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையே பெற்றிருக்க, பாஜகவோ 74 தொகுதிகளை ஜெயித்துள்ளது. இந்நிலையில் கூட்டணி அரசில் பழைய அணுகுமுறையை பாஜக பின்பற்றுமா என்பதில் சந்தேகப்பட்ட நிதிஷ்குமார், ‘முதல்வர் பதவியை ஏற்க விருப்பம் இல்லை’என்று தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. பாஜகவின் அணுகுமுறை மாற்றத்தின் முதல் வெளிப்படாக முன்னாள் பாஜக பொதுச் செயலாளரும், முன்னாள் பிகார் பொறுப்பாளருமான உமாபாரதி, “பிகார் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முன்பு பாஜக இரண்டாம் இடத்தில் இருந்தது.இப்போது பாஜகதான் பிகாரின் பெரியண்ணன். அதற்காக ஏறி வந்த ஏணியான நிதிஷ்குமாரை நாங்கள் எட்டி உதைக்க மாட்டோம்”என்று

தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைப்பதற்கு முன்பே இப்படி என்றால், ஆட்சி அமைத்த பிறகு என்னாகும் என்ற யோசனையில் இருக்கிறார் நிதிஷ்குமார். எனினும் தீபாவளிக்குப் பிறகு வரும் திங்கள் கிழமை நிதிஷ்குமார் முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே 110 தொகுதிகளைப் பெற்ற மகா கத்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், 75 தொகுதிகளில் வென்று பிகார் சட்டமன்றத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்னமும் ஆட்சி அமைக்கும் முயற்சியை விட்டுவிடவில்லை.’

தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு வரை மகா கத்பந்தன் கூட்டணியில் இருந்த விகாசில் இன்சான் கட்சியின் (விஐபி), இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் தங்களை மதிக்கவில்லை என்று கூறி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தன. இந்த கட்சிகள் தேர்தலில் தலா நான்கு தொகுதிகள் என 8 இடங்களில் ஜெயித்துள்ளன.

தேர்தலுக்கு முன்பு வரை தனது நெருக்கமான நண்பர்களாக இருந்த இக்கட்சிகளின் தலைவர்களை தேஜஸ்வி யாதவ்வே தொடர்புகொண்டிருக்கிறார். இதில் விஐபி கட்சிக்கு துணை முதல்வர் பதவி தர தயாராக இருப்பதாகவும் தேஜஸ்வி தெரிவித்துள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. இப்போதைய 110, இந்த இரு கட்சிகளின் 8, ஓவைசி கட்சியின் 5 தொகுதிகள் சேர்ந்தால் தேஜஸ்வி யாதவ் தேர்தலுக்குப் பிறகு உருவாக்கும் மகாகத் பந்தனுக்கு 123 இடங்கள் கிடைத்துவிடும். இதன் மூலம் ஆட்சி அமைப்பது எளிதாகும்

தேஜஸ்வி யாதவ்விடம் இருந்து இப்படிப்பட்ட ஆஃபர் வந்திருப்பதாக விஐபி கட்சியினர் உறுதிப்படுத்தியுள்ளனர் என்கிறார்கள். எனவே பிகாரில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி மாற்றங்களுக்கான அடிப்படை வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: