வியாழன், 12 நவம்பர், 2020

மார்கெட்டிங் உளவியல் மாயவலை.. வெகுஜன மார்க்கெட்டிங் தான் இருப்பதிலேயே சிரமமான....

Image may contain: cloud, sky and outdoor

Karthikeyan Fastura : · இருப்பதிலேயே மிகவும் சிரமமான மார்க்கெட்டிங் என்பது மிகப் பெரும்பான்மையான மக்களை சென்று சேர வேண்டிய வெகுஜன மார்க்கெட்டிங் தான். இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பு வரை அதற்கு மிகப்பெரிய அவசியம் இருந்ததில்லை, காரணம் உலகெங்கும் உள்ள நாடுகளில் பெரும்பான்மையானவை மன்னர் ஆட்சியின் கீழ்தான் இருந்தது. அன்று பிரச்சாரத்தின் தேவை என்பது ஆட்சியாளர்களுக்கு கிடையாது. பெரும்பான்மையான ஆட்சியாளர்கள் மத நிறுவனங்களுக்கு கட்டுப்பட்டு இருந்ததால் மத போதகர்களுக்கும் உள்நாட்டில் பிரச்சாரத்தின் தேவை கிடையாது, ஏனென்றால் மதத்தை பரப்புவதற்கு மன்னரின் உத்தரவே போதுமானதாக இருந்தது .        மன்னர்களின் ஆட்சியில் இருந்து விடுபட விரும்பிய, மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல் தலைவர்களுக்கு தான் மாஸ் மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. 

அதற்கு அன்றைய காலத்தில் இருந்த பழமையான உத்தி என்பது புத்தகங்கள் எழுதுவதும், அதை பதிப்பித்து அறிவுசார் கூட்டத்திடம் சென்று சேர்ப்பதுமே ஆகும். ஏனென்றால் அச்சு எந்திரத்தின் கண்டுபிடிப்பு பலவாசல்களை திறந்துவிட்டது அறிவியலிலும், அரசியலிலும், மத பரப்புரையிலும். அதற்கு பெரும்பான்மையான தலைவர்கள் பல்கலைக் கழகங்களை பயன்படுத்தினார்கள். கம்யூனிச சித்தாந்தம் இப்படித்தான் பரவியது. 

கூடவே அன்றைய மக்களுக்கு ஒரு மிகப்பெரும் அறிவுசார் அரசியல் தேவை இருந்தது. வலதுசாரி அரசியல்வாதிகள் கூட புத்தகங்கள் எழுதாமல் இருந்ததில்லை.

19 நூற்றாண்டின் பிற்பகுதியில் அறிவியல் உலகமும் அது உருவாக்கிய தொழில்நுட்பகருவிகள் மாஸ் மார்க்கெட்டிங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. சில 100 பேர் கூடிவரும் கூட்டங்களின் எண்ணிக்கையை ஸ்பீக்கர் மற்றும் மைக் போன்ற நவீன அறிவியல்தொழில்நுட்ப கருவிகள் சில ஆயிரங்கள் ஆக மாற்றிக் காட்டியது, காலப்போக்கில் அது லட்சங்கள் ஆக மாறின. அதுவரை மனித சமூகம் போர்களில் மட்டுமே இத்தகைய பெரும் கூட்டத்தை பார்த்து பழகி இருக்கிறது. லட்சக்கணக்கில் கூடிய பெரும் மக்கள் கூட்டத்தை மேற்கூறிய கருவிகளின் உதவியோடு தலைவர்கள் கட்டுப்படுத்தி வழிநடத்திச் செல்ல ஆரம்பித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, பத்திரிக்கைகள், வானொலி, தொலைக்காட்சி பெருமளவில் மக்களிடம் சென்றடையும் ஊடகமாக செயல்பட்டு வந்தன. 21 நூற்றாண்டில் உலகம் நுழையும்போது இணையம் உருவாகி 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் அதை பெருந்திரள் மக்கள் பயன்படுத்தும் ஒரு ஊடகமாக யாரும் கவனிக்கவில்லை. இதை இந்தியாவில் முதன்முதலில் கவனித்த கட்சி பாஜக தான். ஆனாலும் அன்று இருந்த புரிதலின்மை காரணமாக 2009 தேர்தலில் மிக வலுவாக பயன்படுத்தியும் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, காரணம் அவர்கள் பின்பற்றிய shotgun approach வழிமுறை துல்லியமானதாக இல்லை.
Shotgun approach
துல்லியமான இலக்குகள் இல்லாமல் வாய்ப்புள்ள அனைத்து ஊடகங்களிலும் வெகுஜன சந்தைப்படுத்துதலை Shotgun approach என்று அழைப்பர். பாஜக வாஜ்பாய்-அத்வானி ஆட்சி காலத்தில் இந்தியா ஒளிர்கிறது என்று எல்லா பத்திரிக்கை, மீடியாக்களில் மட்டுமல்லாமல் இணையவழி விளம்பரங்கள் பரவலாக வெளியிட்டது. இவ்வகை விளம்பரங்கள் பலன் கொடுக்கவேண்டும் என்றாலும் Content நம்பகத்தன்மையுடன் இருக்கவேண்டும். மேலும் இதற்கு ஆகும் செலவுகள் மிக மிக அதிகம்.
நமது இலக்கு யார், அவர்கள் வயது என்ன, அவர்கள் நேரம் செலவழிக்கும் விடயங்கள் என்னென்ன, அவர்களின் தேவை என்ன என்று எந்த ஒரு behavioral analysis செய்யாமல், அனைத்து பத்திரிகைகளிலும், பெரிய ஊடகங்களிலும், சுற்றியுள்ள சுவர்களிலும் கட்சிகளின் சின்னங்களை தலைவர்களை வரைந்து ஓட்டு கேட்பதும் இந்த வகையான மார்க்கெட்டிங் தான். இதில் உள்ளடக்கத்தைப் பற்றியோ மக்களின் எண்ண அலைகள் பற்றியோ எந்த ஒரு புரிதலும் அக்கறையும் இருக்காது. இன்றும் பல கட்சிகள் இதைத்தான் மார்க்கெட்டிங் என்று நம்பி வருகின்றனர்.
இதில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை, அனைத்து கட்சிகளும் இதே முறையை பின்பற்றுகின்றனர். யார் இவ்வகையான மார்க்கெட்டிங்கை அதிக அளவில் செய்கிறார்களோ அவர்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும் என்ற தவறான புரிதல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் உண்டு. இதனால் மிகப்பெரிய அளவில் பணம் விரயம் ஏற்படுகிறது. கட்சிகளின் இந்த புரிதல் உண்மையாக இருந்தால் இங்கு ஆட்சி மாற்றம் என்பது நடந்தே இருக்காது. ஆளுங்கட்சிதான் பணபலமும் படைபலமும் எப்பொழுதும் அதிகம் உள்ள கட்சியாக இருக்கும் எனும்போது அவர்களை வீழ்த்துவது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்திருக்கும். யதார்த்தம் என்னவென்றால் இவ்வகையான மார்க்கெட்டிங் 80% பலன் கொடுப்பதில்லை. மக்களின் தேவையறிந்து அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் நம்பிக்கை கொடுக்கும் கட்சியை தான் அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். பிஜேபி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் Shotgun அப்ரோச்சை மட்டும் நம்பியிருந்தால் வென்றிருக்க முடியாது. Inbound மற்றும் Outbound இரண்டுவகை மார்கெட்டிங்கிலும் வேலை செய்தார்கள்.
அடுத்த அத்தியாயத்தில் இன்றைய தேர்தலில் நடைபெறும் பிறவகை மார்கெட்டிங்குகளை ஒவ்வொன்றாக பார்ப்போம். பிறகு நுணுக்கமாக உளவியல் மார்கெட்டிங் பற்றி பார்ப்போம்.

கருத்துகள் இல்லை: