வியாழன், 12 நவம்பர், 2020

முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லை?

 முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லை?

minnampalam : பிகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய நிலையில் மீண்டும் முதல்வர் நாற்காலியில் நிதிஷ்குமார் அமருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நேற்று (நவம்பர் 11) டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் நடந்த தேர்தல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, "தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வளர்ச்சி அரசியலுக்குக் கிடைத்த வெற்றி இது. புதிய முதல்வராக நிதிஷ்குமார் தொடர்ந்து பணியாற்றுவார்" என்று பேசினார்.   ஆனால், பிகார் அரசியல் வட்டாரங்களிலோ புதிய முதல்வராகப் பதவியேற்பதற்கு நிதிஷ்குமாருக்கு விருப்பமில்லை என்ற தகவல்கள் உலவி வருகின்றன.

"2005 முதல் 2020 தேர்தல் வரையிலான தேர்தல்களில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மிகக் குறைவான எண்ணிக்கையைப் பெற்றது இப்போதுதான். அதிலும் குறிப்பாக ராம் விலாஸ் பாஸ்வான் மகன் சிராக் பஸ்வான் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியில் விளையாடிவிட்டதாக நிதிஷ்குமார் அதிர்ச்சி அடைந்துள்ளார். சுமார் 30 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியை லோக் ஜனசக்தி கட்சி பாதித்துவிட்டதில் அதிருப்தி அடைந்துள்ளார் நிதிஷ்.

தன் அமைச்சரவையில் உள்ள முக்கியமான ஆறு அமைச்சர்கள் தோல்வியுற்றது நிதிஷ்குமாருக்கு கடுமையான வலியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தன்னை சந்தித்த பாஜக குழுவினரிடம் முதல்வர் பதவியை ஏற்பதில் தனக்கு இருக்கும் தயக்கத்தை நிதிஷ் வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பங்குதாரர்களில் இப்போது பாஜக, நிதிஷைவிட சுமார் இரு மடங்கு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே கடந்த ஆட்சிக் காலங்களைப் போல தன்னை சுதந்திரமாக முதல்வர் பணியாற்ற விடுமா பாஜக என்ற ஐயமும் நிதிஷுக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் பாஜக தனக்கு இருக்கும் அதிகபட்ச எண்ணிக்கையின் அடிப்படையில் இதுவரை முதல்வர் நிதிஷ்குமாரிடம் இருந்த உள் துறை, பணியாளர் துறை போன்ற முக்கியத் துறைகளை தனக்குக் கேட்கிறது.

உள் துறையை பாஜகவிடம் கொடுத்துவிட்டு முதல்வராக இருப்பதைவிட முதல்வர் பதவியை பாஜகவுக்கே கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் நிதிஷ்குமார். இதுபற்றி ஆலோசனைகள் இருதரப்பிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன" என்கிறார்கள் பாட்னாவில் இருக்கும் ஆங்கிலப் பத்திரிகையாளர்கள்.

வேந்தன்

 

கருத்துகள் இல்லை: