ஞாயிறு, 8 நவம்பர், 2020

விஜய் கட்சி.. ஒரே நாளில் டோட்டல் டேமேஜ் ஆன கட்சி.. மண்டை காய்ந்து போகும் விஜய் ரசிகர்கள் .. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்.


Hemavandhana - //tamil.oneindia.co : சென்னை: இனி விஜய் சொந்தமாகவே ஒரு கட்சி ஆரம்பித்தாலும், அது சுத்தமாக எடுபடாத அளவுக்கு மொத்தமாக சொதப்பி வைத்துவிட்டார் எஸ்ஏசி! இதுதான் விஜய் ரசிகர்களுக்கு 2 நாட்களாக எரிச்சலாகவும், வருத்தமாகவும் இருந்து வருகிறது. 
பொதுவாக ஒருவர் ஒரு கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.. அப்படித்தான் விஜய்யை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர் . நேற்றுமுன்தினம், விஜய் கட்சி ஆரம்பித்துவிட்டதாக ஒரு செய்தி கசிந்ததுமே ரசிகர்கள் உற்சாகமானார்கள்.. பிறகுதான் அது புரளி என்றும், எஸ்ஏசி, மன்றத்தை கட்சியாக விண்ணப்பிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.. இது ரசிகர்களுக்கு முதல் ஏமாற்றமாகிவிட்டது. 
அடுத்ததாக விஜய் வந்து வெளியிட்ட அறிக்கையானதும், மேலும் பல கேள்விகளை எழுப்பிவிட்டது.. அப்பாவுக்கும் மகனுக்கும் ஏதோ பிரச்சனையா? இணக்கமாக இல்லையா? என்ற சந்தேகத்தை கிளப்பிவிட்டு சென்றது.. தான் கட்சியை ஆரம்பிக்கவில்லை என்றாலும், அப்பா கட்சிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னாலும், விஜய்யின் அறிக்கை ஏதோ விரிசலை வெளிப்படுத்துவதாக இருந்தது.. இது ரசிகர்களுக்கு வந்த அடுத்த குழப்பம்.
தனி நபர் இல்லை
இதற்கு பிறகு எஸ்ஏசியிடம் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய்யும் நீங்களும் பேசுவது இல்லையாமே என்று ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, நீங்க தனியா வந்தால், உண்மையை சொல்லுவேன்.. யார் யாரோ சொல்ற கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது... கொரோனா காலத்தில்கூட 2 முறை சந்தித்து பேசினேன் என்று சொன்னார்.. ஆனால் எஸ்ஏசி நேற்று தெளிவான பதிலை சொல்லாததுதான் அடுத்த ஏமாற்றம்.. எதற்காக விஜய் அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டார் என்றும், என்ன நடந்தது என்றும் முமுமையாக விவரிக்க தவறிவிட்டார்.. அவரது மழுப்பலான பதில்கள் பிரச்சனையை தெளிவாக்கவே இல்லை.
 
இன்னும் சொல்லப்போனால், எஸ்ஏசி நேற்று நடத்தியதுகூட "செய்தியாளர்கள் சந்திப்பு" என்று சொல்லிவிட முடியாது.. ஒருகுறிப்பிட்ட டிவியை மட்டும் அழைத்து தன்னிலை விளக்கம் கொடுத்து கொண்டிருக்க, இந்த விஷயம் அறிந்து மற்ற மீடியாக்களும் அங்கு சூழ்ந்து கொண்டதால், எஸ்ஏசி பதிலளிக்க முடியாமல் திணறிவிட்டதாக சொல்லப்படுகிறது.


இவரை தொடர்ந்து நேற்று ஷோபா சந்திரசேகர் வந்து மிச்சமிருந்த மொத்தத்தையும் உடைத்துவிட்டார்.. விஜய்யும், அவர் அப்பாவும் பேசிக் கொள்வதில்லை.. என்று பெரிய குண்டை தூக்கி போட்டு, ஏற்கனவே உலவி வந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதுமட்டுமல்லாமல், கட்சி பெயர் சொல்லி தன்னிடம் கையெழுத்து வாங்கவில்லை, அசோசியேஷன்னுதான் சொன்னார்.. அப்பறம் உண்மை தெரிந்து அந்த கையெழுத்தை திரும்ப பெற்று கொண்டேன் என்றும் கூறினார்.


ஆக, ஒரு கட்சி ஆரம்பித்த முதல்நாளே அதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.. இன்னொன்று கட்சி ஆரம்பிக்க வேண்டாம் என்று விஜய் பலமுறை சொல்லியும், எஸ்ஏசிதான் அந்த பேச்சை கேட்கவில்லைஎன்பதையும் ஷோபா தெளிவுபடுத்தி உள்ளார்... எஸ்ஏசிக்கு வந்த குழப்பத்தால், எடுத்த எடுப்பிலேயே எல்லாமே சொதப்பலாகி விட்டது. கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக யாராவது முதல்நாளே அறிவிப்பார்களா? மனைவியிடம் கூட உண்மையை சொல்லாமல், எப்படி எஸ்ஏசி கையெழுத்து வாங்கினார்?


சட்டம் சந்திரசேகர் என்றே இவருக்கு பெயரை வழங்கிய திரையுலகம் இது.. அப்படி இருக்கும்போது, அசோசியேஷன் என்று சொல்லி மட்டும் ஷோபாவிடம் எப்படி கையெழுத்து பெற்றார் என்பது ஆச்சரியமாக உள்ளது. ஒரே நாளில் இத்தனை ட்விஸ்ட்டுகள் உள்ள கட்சி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும்..


இது அத்தனையும் விஜய்க்குதான் மைனசாக மாறி வருகிறது.. நாளை நிஜமாகவே விஜய் கட்சி ஆரம்பிப்பார் என்றே வைத்து கொண்டாலும், எஸ்ஏசியை வைத்து கொண்டு அவர் எதை செய்தாலும் அது சறுக்கலாக போய்விடுமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டு வருகிறது. அல்லது கட்சியே விஜய் தொடங்காமல் போனாலும்கூட சரி, நடந்து வரும் நிகழ்வுகளால், விஜய் இமேஜ்தான் டேமேஜ் ஆகி வருகிறது.

தனி நபர் இல்லை கஷ்டப்பட்டு பிள்ளையை வளர்த்து, சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் தந்தை என்பதை மறுப்பதற்கில்லை.. ஒரு அப்பாவுக்கு உரிய கடமையும், உரிமையும் எதிர்பார்ப்பும் எஸ்ஏசிக்கு இருப்பதில் தவறுமில்லை.. ஆனால், விஜய் இப்போது தனிநபர் இல்லை.. அவருக்கென்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.. அவரது உத்தரவை கேட்டு நடக்க பாசமிகு ஒருகூட்டமே உள்ளது.. அவருக்கென்று பொதுநலன், மக்கள் நலன் உள்ளது.. எல்லாவற்றுக்கும் மேலாக தனிமனித விருப்பம் உள்ளது.. அந்த வகையில் அவரை யாருமே எதற்காகவுமே நிர்ப்பந்தப்படுத்தவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது என்பதே இப்போதைய நிஜம்!

கருத்துகள் இல்லை: