புதன், 11 நவம்பர், 2020

பிகார் தேர்தல் முறைகேட்டு புகார்கள் அதிர்ச்சியளிக்கிறது: ஸ்டாலின்

   minnambalam:  ிகார் தேர்தல் முறைகேட்டு புகார்கள் அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  பிகார் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. எனினும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக இரு மடங்கு அதிகமான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

அதே சமயம் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் 76 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆர்ஜேடி வெற்றிபெற்ற பல இடங்களில் முதல்வர் தலையிட்டு ஆளுங்கட்சியினரை வெற்றிபெற வைத்ததாக ஆர்ஜேடி கட்சி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் பிகார் தேர்தலில் வென்ற நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “பிகாரின் இளம் தலைவராக உருவெடுத்து, மக்களின் ஆதரவோடு உயர்ந்துவரும் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்தத் தேர்தலில் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தனிப் பெரும் கட்சியாகப் பிகார் மாநிலத்தில் வெற்றி பெற்றிருப்பது, அந்த மாநிலத்தின் ஜனநாயகத்திற்கு நல்ல உயிரோட்டத்தையும், துடிப்பான ஊக்கத்தையும் அளித்திடக் கூடியது” என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பிகார் சட்டமன்றத் தேர்தலையும், பல மாநிலங்களில் இடைத் தேர்தலையும், தேர்தல் ஆணையம் நடத்தியிருப்பது இந்திய ஜனநாயகத்தின் வலிவையும் பொலிவையும் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார் ஸ்டாலின்.

மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைகேட்டுப் புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது. தேர்தல்கள் எந்தவிதத் தலையீடுமின்றி, நியாயமாக, நடுநிலையுடன், சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய தினம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பு முழுமையாக நிறைவேறினால்தான், நமது நாட்டில் ஜனநாயகத்தின் வளமான எதிர்காலம் உறுதிப் படுத்தப்படும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

எழில்

கருத்துகள் இல்லை: