வியாழன், 12 நவம்பர், 2020

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் துப்பாக்கியால் சுட்டு கொலை.. சென்னை, சவுகார்பேட்டை,...

dinamalar :சென்னை : சென்னையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்து தகராறு காரணமாக, இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்..       சென்னை, சவுகார்பேட்டை, விநாயக மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலித்சந்த், 74. இவரது மனைவி புஷ்பா பாய், 70. இவர்களது மகன் ஷீத்தல், 40. இவர்கள் மூவரும், அடுக்குமாடி குடியிருப்பில், முதல் தளத்தில் வசித்தனர். தலித் சந்த்தின் மகள் பிங்கி, பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர், தினமும் தந்தையை பார்க்க, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு, தந்தைக்கு உணவு கொண்டு வந்தார். அப்போது, வீட்டின் வெளிதாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. தாழ் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, தந்தை, தாய், சகோதரர் ஆகிய மூவரும், ரத்த கரையுடன் இறந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அவரது அலறல் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்தனர். பின், யானைவுனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மூவரின் பிரேதத்தையும் கைப்பற்றினர். இதில், மூவரின் உடல்களிலும், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது தெரியவந்தது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் அருண்குமார், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர், சம்பவ இடத்தில் முகாமிட்டு, விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக, மூவரும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.

மேலும், தலித்சந்த் தனது மகன் மற்றும் தம்பி மகன்களான ரமேஷ், விஜயகுமார், மற்றும் மாவீர் ஆகியோருடன் இணைந்து, முல்லா சாகிப் தெருவில், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தவிர, ஷீத்தலுக்கு, ஜெயமாலா என்பவருடன் திருமணமாகி, இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி, மகள்களுடன் பிரிந்து சென்றுள்ளார். அவர், புனேவில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருவதாக தெரிகிறது. மேலும், சம்பவ இடத்திலும், அந்த பகுதியிலும் இருந்த, 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகள், ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சம்பவ இடத்திற்கு இரு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த கொலையால், சவுகார்பேட்டை பகுதியில், பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.



கருத்துகள் இல்லை: