வெள்ளி, 13 நவம்பர், 2020

அவன் இவன் அவள் இவள் வா போ எனக்.....! உடல் உழைப்பு தொழில் செய்தால் மரியாதை கொடுக்ககூடாது என சட்டம் ஏதும் உள்ளதா?

  Subashini Thf
Subashini Thf : இன்று தற்செயலாக ஒரு ஃபேஸ்புக் பதிவு வாசித்தேன். வீட்டில் வேலை செய்யும் பெண்மனியைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது போய் விட்டாள், போனாள், வந்தாள்.. என்ற அடிப்படையில் அந்தப் பதிவு இருந்தது.
எனது தமிழகத்துக்கான பயணங்களில் கூட பல இடங்களில் உடல் உழைப்புத் தொழிலாளர்களை எனது நண்பர்களே கூட அவன் இவன் எனச் சுட்டுவதையும் அவள் இவள் எனக்கூறுவதையும் வா போ எனக் கூறுவதையும் பார்த்திருக்கின்றேன்.
உடல் உழைப்பு தொழில் செய்தால் மரியாதை கொடுக்ககூடாது என ஏதும் சட்டம் உள்ளதா? அவர்கள் ஒரு தொழிலைச் செய்து அதற்கு சம்பளம் பெருகின்றனர் அவ்வளவு தானே? சில வேளைகளில் வீட்டில் வேலை செய்யும் அப்பெண்மணி வயதில் மூத்தவராக இருப்பார். அவரைக் கூட காசு கொடுக்கின்றோம் என்னும் ஒரு காரணத்திற்காக வா.. போ.. நீ.. எனப் பேசுவது எவ்வகையில் சரியாகும்?
நாம் தான் நம் குழந்தைகளுக்கு உதாரணமாக இருக்கவேண்டும். நம் கண்முன்னே உடல் உழைப்புத் தொழிலாளர்களை மரியாதை குறைவாகக் கூப்பிட்டால் குழந்தைகளும் அதனையே கற்றுக் கொள்வர் அல்லவா?
பணத்தினால் உருவாகும் ஏற்றத்தாழ்வு இப்படி சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் விதைக்கப்படுகின்றதே. இதனை நாம் உணர மாட்டோமா என வருந்துகின்றேன்.
ஐரோப்பாவில் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களையும், குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் பெண்களையும். வயதானவர்களை கவனித்துக் கொள்ளும் நபர்களையும் ஒரு தொழில் செய்யும் அனைத்து மரியாதையுடன் தான் நடத்துகின்றனர்.
மனிதரை மனிதராக நாம் பாவிக்கலாமே. அவர்களும் ஒரு பணியைச் செய்து தான் சம்பாதிக்கின்றனர். நாம் எப்படி நமது உயர் அதிகாரிகளிடம் மரியாதையை எதிர்பார்க்கின்றோமோ அதே போலத்தானே அவர்களுக்கும் எண்ணம் இருக்கும்?
ஒரு முறை நம் வீட்டில் பணிபுரியும் ஊழியர்களை மரியாதையாகக் கூப்பிட்டுப் பாருங்கள். அன்பு அதிகரிக்கும்.
இதனை நான் என் சொந்த அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன். என் அனுபவத்தில் எல்லோரையும் அவர்கள் தொழில் எதுவாகினும் எந்தப் பாகுபாடுமின்றி ஒரு சிறிதும் மரியாதை குறையாத வகையில் .. வாங்க போங்க.. என்ற வகையில் தான் நான் அழைப்பது வழக்கம். அது தான் சக மனிதரை ஒருவருக்கொருவர் மதித்து அன்பினைப் பரிமாறிக் கொண்டு சுமுகமாக வாழ வழி வகுக்கும். யாரும் யாருக்கும் உயர்ந்தவருமல்ல.. யாரும் யாருக்கும் தாழ்ந்தவருமல்ல!

1 கருத்து:

ஞான சித்தர் சொன்னது…

மனிதர்களுக்கு மரியாதை (அன்பு) கொடுத்து மரியாதை (அன்பு) வாங்க வேண்டும். சக மனிதர்களுக்கும் இது பொருந்தும்.