வியாழன், 12 நவம்பர், 2020

பாஜகவின் இன்னோர் அணியா ஒவைஸி?

hindutamil.in/ :பிஹார் தேர்தல் முடிவுகளை ஒட்டி எழுந்திருக்கும் விவாதங்களில் கவனிக்கக் கூடிய ஒன்றாக இருப்பது, ‘பாஜகவை எதிர்கொள்ள முஸ்லிம்கள் ஓரணியில் திரள வேண்டாமா; முஸ்லிம் கட்சிகள் தனித்து நின்றால் பாஜகவுக்குத்தானே வசதி!’ 

பிஹாரில் ஒவைஸி தலைமையிலான ‘ஆல் இந்தியா மஜ்லிஸே இத்திகாதுல் முஸ்லிமீன்’ கட்சியும், எஸ்டிபிஐ கட்சியும் போட்டியிட்டதும், 20 தொகுதிகளில் போட்டியிட்ட ஓவைஸி கட்சி ஐந்து இடங்களை வென்றிருப்பதும், சில தொகுதிகளில் ராஜத, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளின் ‘மகா கூட்டணி’யின் தோல்விக்கு இது காரணமாக இருந்திருப்பதும் இந்த விவாதத்துக்குக் காரணம் ஆகியிருக்கிறது. 

ஒரு மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நாட்டில், அந்த மதத்தினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், நாட்டின் பிரதான கட்சியாகவும் பாஜக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, போட்டியின் ஒருபுறத்தில் பிரம்மாண்டமாக நிற்கும்போது, மறுபுறத்தில் சிறுபான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த ஒரு கட்சியையும் ‘மகா கூட்டணி’ இணைத்துக்கொள்ளவில்லை என்பதை நாம் முதலில் கவனிக்க வேண்டும்.

 மஜ்லிஸ் கட்சிக்கோ, எஸ்டிபிஐ கட்சிக்கோ உரிய இடம் அளித்து அவர்கள் தனித்துப்போய் நிற்கவில்லை. வேறு வழியில்லாமல்தான் தனித்து நிற்க வேண்டியிருந்திருக்கிறது. மேலும், இவ்வளவு தீவிரமான தேர்தல் களத்திலும் ஐந்து இடங்களை வெல்லும் வாய்ப்புள்ள ஒரு கட்சி எப்படிப் போட்டியிலிருந்து ஒதுங்கிக்கொள்ள முடியும் அல்லது வாய்ப்புகளை மறுக்க முடியும்?

‘ராஜத, காங்கிரஸ் போன்ற மதச்சார்பற்ற கட்சிகளையே அவர்கள் தங்கள் பிரதிநிதிகளாகக் கொள்ள வேண்டும்; இந்தக் கட்சிகளும் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்துகின்றன அல்லவா?’ இப்படி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. இப்படிக் கேள்வி கேட்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது, முஸ்லிம்களுக்குத் தேவை வெறும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையோ அடையாளப் பிரதிநிதித்துவமோ அல்ல, உண்மையான பிரதிநிதித்துவம். அது, ராஜதவோ, காங்கிரஸோ; குடியுரிமைச் சட்டம் போன்று முஸ்லிம்களை இரண்டாம்தரக் குடிமக்களாக உணரவைக்கும் ஒரு ஏற்பாட்டை ஒவைஸி அளவுக்கு வேறு யாரால் எதிர்த்துப் பேச முடிந்தது? தமிழ்நாட்டில் அதிமுகவிலும் திமுகவிலும் எத்தனை தலித் பிரதிநிதிகள் இருந்தாலும், ஒடுக்கப்பட்டோருக்குக் குரல் கொடுப்பதில் விசிக காட்டும் தீவிரமும் இந்தக் கட்சிகளோ பிரதிநிதிகளோ காட்டுவது இல்லையே? இந்த இடத்தில்தான் முஸ்லிம் கட்சிகளுக்கான தேவையும் தேர்தல் போட்டிச் சூழலும் உருவாகிறது.

ஜனநாயகம் என்பது பல சமூகங்களின் அபிலாஷைகளும் ஒன்றுகூடும் இடம். அந்தந்தச் சமூகங்களின் தேவைகளிலிருந்தே ஏனையோர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்!

- புதுமடம் ஜாபர்அலி, தொடர்புக்கு: pudumadamjaffar1968@gmail.com

கருத்துகள் இல்லை: