ஞாயிறு, 8 நவம்பர், 2020

அமைச்சர் துரைக்கண்ணுவின் மரண அறிவிப்பில் மர்மம்?: ஸ்டாலின் சந்தேகம்!

 அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம்?: ஸ்டாலின் சந்தேகம்!

minnambalam.com :தமிழக வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். சென்னையிலிருந்து பாபநாசம் கொண்டுசெல்லப்பட்ட அவரது உடல், சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே 300 கோடி ரூபாய் அளவுக்கான பணம் துரைக்கண்ணு தரப்பிடம் இருந்ததாகவும், அதனை திரும்பப் பெறுவதற்கான உத்தரவாதத்தை பெற்றுக்கொண்ட பிறகுதான் மரண அறிவிப்பை வெளியிடவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

இதனைக் குறிப்பிட்டு இன்று (நவம்பர் 8) அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்தக் கட்சிக்காரர்களான அதிமுகவின் தலைமை, அமைச்சர் தரப்பிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்த பல நூறு கோடி ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக, அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்தது என்றும், பணத்திற்குத் தேவையான உத்தரவாதம் கிடைத்தபிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானது என்றும், அதிர்ச்சி தரும் செய்திகள் நாளேடுகளிலும் புலனாய்வுப் பத்திரிகைகளிலும் விரிவாக வெளியாகியுள்ளன” என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்கள். எளிமையாகத் தோற்றமளித்த அதிகம் அறியப்படாத ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் இருக்கலாம் என்பதைப் புறக்கணிக்க முடியவில்லை என்ற குறிப்பிட்ட ஸ்டாலின்,

“ஊழல் வாயிலாக எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்களும் கொள்ளையடித்துச் சேர்த்த பணத்தின் ஒரு பகுதி, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காக மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு அவர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அதைக் கேட்டுத்தான் அமைச்சரின் குடும்பத்தாரிடம் விசாரணை நடைபெற்று, பணத்தை மீட்டதற்குப் பிறகே, அமைச்சரின் மரண அறிவிப்பு வெளியானதாகவும், பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு 300 கோடி ரூபாய் முதல் 800 கோடி வரை இருக்கும் என்றும், அதிர வைக்கும் செய்திகள் வெளியாகின்றன” எனச் சுட்டிக்காட்டினார்.

ஆளுங்கட்சியினரால் ஊழலை மறைக்க முடியாது என்பதற்கு மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் தொகுதியில் காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே சான்றாக இருக்கின்றன. துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவரான கும்பகோணம் மணஞ்சேரி பகுதியைச் சேர்ந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டவருமான முருகன் என்பவரை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.

ஊராட்சித் தலைவரின் கைதுக்காக மத்திய மண்டல ஐ.ஜி. தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் களம் இறக்கப்பட்டதிலிருந்தே, இதன் பயங்கரப் பின்னணியை எளிய மக்களும் புரிந்து கொள்ள முடியும். அதிமுக தலைமை கொடுத்து வைத்திருந்த பெருந்தொகைக்கு வரவு செலவு கணக்கு முழுமையாக வந்து சேராததால், கும்பகோணத்தில் இத்தகைய மர்மக் கைதுகள் அரங்கேறி உள்ளன” என்று குற்றம்சாட்டினார்.

மேலும், “பணம் பாதாளம் வரை பாயும் என்ற மமதை எண்ணத்துடன் ஆட்சியாளர்கள் நாள்தோறும் கொள்ளையடித்து, அதனைக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால், அ.தி.மு.க.வின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும் என்பதை, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கும். வட்டியும் முதலுமாக, கூட்டு வட்டியையும் சேர்த்து, சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றும் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

எழில்

கருத்துகள் இல்லை: