maalaimalar :என் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அவர் புகார்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
என் மீதான புகார்கள் குறித்து விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்தது அதிர்ச்சியளிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக நியமனத்தில் ஒரு பைசா கூட நான் லஞ்சமாக பெறவில்லை. எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை.
எனது அதிகாரத்தை பயன்படுத்தி மகளுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. எனது மகளுக்கு நான் பரிந்துரை செய்ய வேண்டியதில்லை; அவருக்கு அனைத்து தகுதியும் உள்ளது.
பெயர் குறிப்பிடாமல் சில மிரட்டல் கடிதங்களும் எனக்கு வந்துள்ளன. மிரட்டல்களுக்கு அடிபணியாததால் என்மீது அவதூறு புகார்களை கூறுகின்றனர்.
எனது வங்கிக்கணக்கு விவரங்களை யார் வேண்டுமானாலும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
ஆளுநர் உள்பட யாரையும் நான் சந்திக்கப்போவதில்லை.
என் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கிறதா என்பதை கல்வியாளர்கள் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக